முகப்பு வார இதழ்கள் வெள்ளிமணி
குழந்தையில்லா மன்னனுக்கு ஈமக் கடன் செய்த ஈசன்!
By பொ.ஜெயச்சந்திரன் | Published On : 27th August 2021 02:48 PM | Last Updated : 27th August 2021 02:48 PM | அ+அ அ- |

குழந்தையில்லா மன்னனுக்கு ஈமக் கடன் செய்த ஈசன்!
இந்திரன், சயந்தன் என்ற இரு தேவர்களும் இறைவனின் சாபத்தால், பூவுலகில் காரி, சாத்தன் என்ற பெயர்களில் வேடர் குலத்தில் பிறந்தனர்.
அவர்கள் வனத்தில் சுற்றித் திரிந்த போது ஒரு யானை நிற்பதைக் கண்டனர்.
அதன் மீது இருவரும் அம்பு தொடுத்தனர். அந்த யானை அவ்வேளையில் சிவலிங்க பூஜை செய்து விட்டு, சுவாமியை வலம் வந்து கொண்டிருந்தது. தங்களின் அம்புகளால் தாக்குண்ட யானையினை அருகில் சென்று கண்டபோதுதான், "சிவபூஜை செய்து கொண்டிருந்த யானையை கொன்று விட்டோமே! இதனால் பாபம் வந்து சேருமே!' என்று எண்ணி மனம் வருந்தி நின்றனர்.
இறைவன் அவர்கள் முன்னே தோன்றி "யானைக்கு வரம் அளிக்கவே உங்களை இங்கு ஈர்த்து, இச்செயல் செய்யத் தூண்டினோம். அதற்காக மனம் வருந்த வேண்டாம்!' என்றருளினார்.
அவ்வண்ணமே யானையை உயிர்ப்பித்து, அதற்கு வரம் தந்தருளிய காரணத்தால் இவ்வூருக்கு "கரிவர நல்லூர்' எனப் பெயர் ஏற்படலாயிற்று. இப்பெயரே நாளடைவில் "கரிவலம் வந்த நல்லூர்' என்று மருவிற்று.
மேலும், காரியும், சாத்தனும் பாபவிமோசனம் பெற்று இந்திரன், சயந்தனாக பழைய உருப்பெற்றனர். இதனால் இறைவனுக்கு நன்றி கூறும் விதமாக, இத்திருத்தலத்தில் இந்திரன், சயந்தன் இருவரும் இறைவனை வணங்கிய வண்ணம் நிற்கின்றனர்.
இங்கு கோயில் கொண்டுள்ள இறைவனுக்குப் "பால் வண்ணநாதர்' என்று பெயர். லிங்கத் திருவுருவம் வெண்மை நிறத்துடன் அமைந்திருந்ததால் பால் வண்ணநாதர் என்று பெயர் பெற்றார். அம்பாள் "ஒப்பனையம்மன்' என்று அழைக்கப்படுகிறார்.
அக்னி தீர்த்தம், சுக்கிர தீர்த்தம், சூல தீர்த்தம், தேவ தீர்த்தம் ஆகிய நான்கு தீர்த்தங்களும் உண்டு.
ஈமக் கடன் செய்த ஈசன்: இக்கோயிலைக் கட்டிய அதிவீரராம பாண்டிய மன்னனுக்கு குழந்தை இல்லை. மன்னன் இறந்த பிறகு, பால்வண்ணநாதரே ஈமக் கடன் செய்து மன்னனுக்குத் திதி கொடுத்தார் என்பது தல வரலாறு. இந்நிகழ்ச்சி ஆண்டுதோறும் திருவிழாவாக நடத்தப்பட்டு வருகிறது.
மனிதர்களின் உடலில் ஏற்படும் பால் உண்ணிகளை உச்சிகால அபிஷேகத்தில் வரும் பாலை எடுத்து உடலில் பூசினால் உடலில் பால் உண்ணிகள் மறைந்து விடுகின்றன.
அமைவிடம்: சங்கரன்கோவிலிருந்து ராஜபாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் கரிவலம் வந்தநல்லூர் திருத்தலம் அமைந்துள்ளது.