குருவாயூர் போன்ற கோயில்: கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா!

கன்னியாகுமரி மாவட்டத்தில், நாகர்கோவில் புறநகர் பகுதியில் அமைந்துள்ளது வடசேரி கிருஷ்ணன் கோயில். "தென்திசையின் குருவாயூர்' என்று அழைக்கப்படும் இக்கோயில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. 
குருவாயூர் போன்ற கோயில்: கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா!
குருவாயூர் போன்ற கோயில்: கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா!

கன்னியாகுமரி மாவட்டத்தில், நாகர்கோவில் புறநகர் பகுதியில் அமைந்துள்ளது வடசேரி கிருஷ்ணன் கோயில். "தென்திசையின் குருவாயூர்' என்று அழைக்கப்படும் இக்கோயில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. 

குருவாயூர் கிருஷ்ணன் போலவே கருவறையில் மூலவர் பாலகிருஷ்ணனாக குழந்தை வடிவில், தன் இரு திருக்கரங்களிலும் வெண்ணெய்யை வைத்தபடி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.  இந்தக் கிருஷ்ணனுக்கு பாலகிருஷ்ணன், அஜயன், தயாநிதி, ஞானேஸ்வரன், ஜெயந்தன், ஜனார்த்தனன், லட்சுமிகாந்தன் போன்ற பெயர்களும் உண்டு. 

ருக்மணி, சத்யபாமாவுடன் எழுந்தருளியிருக்கும் உற்சவர் ராஜகோபாலனாக வணங்கப்படுகிறார். மகாவிஷ்ணு, கிருஷ்ணராக அவதரித்தபோது குழந்தை வடிவில்  கிருஷ்ணர் என்றும், பசுக்களை மேய்க்கும் இளைஞனாக இருந்தபோது வேணுகோபாலன், ராஜகோபாலன் எனவும் அழைக்கப் பெற்றார், அதன்படி  இங்கு மூலவராக கிருஷ்ணரும், உற்சவராக ராஜகோபாலனும் எழுந்தருளியுள்ளனர்.

சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு  இந்தப் பகுதியை ஆண்ட ஆதித்த வர்ம ராஜா, குருவாயூரப்பன் மீது மிகுந்த பக்தி கொண்டவர். அவரின் கனவில் வந்த குருவாயூரப்பன், இவ்விடத்தில் கையில் வெண்ணெய்யுடன் குழந்தைக் கண்ணன் வடிவில் தனக்கு கோயில் எழுப்பும்படி சொல்ல, அதன்படி பாலகிருஷ்ணன் சிலையை பிரதிஷ்டை செய்தார் மன்னர். சுவாமிக்கு நவநீத கிருஷ்ணர் (வெண்ணெய்க் கண்ணன்) என திருநாமம் சூட்டி வணங்கினர். 

காவல் தெய்வமான  பூதத்தான் சுவாமி இரவு நேரத்தில் கிருஷ்ணன் கோயில் பகுதியை வலம் வந்து காவல் செய்கிறார். 

நெல்லி மரம் தல விருட்சமாக உள்ளது. கொன்றை மரத்தடியில் நாகர் சிலைகளும், சிவலிங்கமும் உள்ளன. வெளிப் பிரகாரத்தில்  மூலவரின் வலப்புறம்  கன்னி விநாயகர்,  இடப்புறம் சாஸ்தா சந்நிதியும் உள்ளது.  கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு ரத வீதிகளின் நடுவே கோயில் அமைந்திருக்கிறது. 

முக மண்டபத்தில் உள்ள கல்வெட்டில் இக்கோயில் கொடிமரம் 1770 -ஆம் ஆண்டு சித்திரை மாதம் 28-ஆம் தேதி நிறுவப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

வெளிப் பிரகாரத்தில் மூலவரின் வலப்புறம் கன்னி விநாயகர் சந்நிதியும், இடப்புறம் சாஸ்தா சந்நிதியும் உள்ளது. கருவறையைச் சுற்றிய உள் பிரகாரம் விசாலமானது. தாந்திரீக ஆகமப்படி 3 கால பூஜைகள் நடைபெறுகின்றன. பக்தர்கள் நாக தோஷங்கள் விலக, குளக்கரை நாகர் சிலைகளுக்கோ, கொன்றை மரத்தடி நாகர் சிலைகளுக்கோ ராகு காலத்தில் அல்லது அஷ்டமி நாளில் பாலாபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.

இரவு நேர பூஜையின்போது  பாலகிருஷ்ணனை வெள்ளித் தொட்டிலில் தாலாட்டுப் பாடி தூங்க வைக்கிறார்கள். 

அதற்கு முன் கிருஷ்ணனுக்கு சார்த்தப்பட்ட வெண்ணெய் மற்றும் நிவேதனப் பாலை பக்தர்களுக்கு பிரசாதமாகத் தருகிறார்கள். வெண்ணெய்யும், பாலும் வாங்கி உண்டால் குழந்தை வரம் நிச்சயம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 

பக்தர்கள் வேண்டியதை வேண்டியபடி "கேட்டதும் கொடுப்பவன் கிருஷ்ணன்' என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. கிருஷ்ண ஜயந்தி அன்று நள்ளிரவில் மூலவருக்கு கன்றுடன் கூடிய பசு வந்து பால் கறந்து, அப்போதே அபிஷேகம்,  சிறப்புப் பூஜைகள் நடக்கும். அப்போது மூலவர் விசேஷ அலங்காரத்தில் காட்சி அளிப்பார்.

இவ்வாண்டு, ஆகஸ்ட் 30-ஆம் தேதி கிருஷ்ண ஜயந்தி விழாவும், 31-ஆம் தேதி உறியடி உற்சவமும் நடைபெறும். இதைத்தொடர்ந்து, புரட்டாசி சனிக்கிழமைகளில் விசேஷ பூஜைகளும் நடைபெறும்.

அமைவிடம்: நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் வடசேரி தாண்டியவுடன் கிருஷ்ணன் கோயில் திருத்தலம் அமைந்துள்ளது .
தொடர்புக்கு: 9443370229; 9150424100.      
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com