முகப்பு வார இதழ்கள் வெள்ளிமணி
பாவிகளையும் நேசிப்பவர்!
By முனைவர் தே.பால் பிரேம்குமார் | Published On : 10th December 2021 08:35 PM | Last Updated : 10th December 2021 08:35 PM | அ+அ அ- |

மிக பக்திமான்களும், வேத அறிஞர்களும், ஆசாரியர்களும் இயேசுவின் பெயரில் ஒரு பெரிய குற்றச்சாட்டை வைத்தனர்.
""இயேசு தீயவர்களிடம் மிகவும் நட்பு வைத்திருக்கிறார். பாவிகளைத் தேடிச் சென்று அவர்களிடம் பேசுகின்றார். ஏழை எளியவர்களிடமும், நோயாளிகளிடமும், தீயச் செயல்கள் புரிபவர்களிடமும் இயேசு பேசிப் பழகி, அவர்கள் இருப்பிடத்திற்குச் சென்று உணவும் அருந்துகின்றார். இது மிகவும் தவறு! செல்வந்தர்கள் வீட்டிற்கும், பதவியில் உயர்ந்தவர்கள் வீட்டிற்கும், ஆசாரியர்கள் - வேத அறிஞர்கள் வீட்டிற்கும் அவர் வரவேண்டும்; அத்தகையவர்களை அவர் பெருமைப் படுத்தி, தீயவர்களை ஒதுக்கிவிட வேண்டும்! அவர் பாவிகளின் சிநேகிதராக இருக்கிறார்!'' என்று இயேசுவின் சீடர்களிடமே இயேசுவை ஏளனம் செய்தனர்.
அந்த சீடர்கள் இயேசுவின் பெயரில் சொல்லப்படும் குற்றச்சாட்டுகளை அவரிடம் நேரில் கூறினார்கள். அதற்கு இயேசு அவர்களுக்கு ஓர் உவமை கதையைக் கூறினார்.
""ஒரு நல்ல மேய்ப்பர் இருந்தார். அவரிடம் 100 ஆடுகள் இருந்தன. அவற்றை நன்கு பராமரித்து, காவல் காத்து வந்தார். ஒரு நாள் மாலை வீடு திரும்பும் நேரத்தில் ஆடுகளை எண்ணிப்பார்த்த போது, 99 ஆடுகள் மட்டுமே இருந்தன.
ஒரு ஆட்டுக் குட்டியைக் காணவில்லை. கவலையுற்ற மேய்ப்பர், மற்ற ஆடுகளை மந்தையில் கட்டிவிட்டு, வனாந்திரத்தில் அந்த ஒற்றை ஆட்டைத் தேடித் திரிந்து அலைந்தார்.
மேய்ப்பர் அந்த ஆட்டுக்குட்டியின் பெயரைக் கூறி அழைத்தார். பதில் சப்தம் வரவில்லை. கடைசியாக ஒரு முட்புதர்ப் பகுதியில் அந்த ஆடு மாட்டிக்கொண்டு கதறிக் கொண்டிருந்தது. வெளியே வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது.
அதைக் கண்ட மேய்ப்பர், உடனே தன் தடியைக் கொண்டு முட்களை விலக்கி ஆட்டை விடுவித்து, தன் தோளில் சுமந்து கொண்டு மகிழ்ச்சியுடன் மந்தைக்கு வந்து சேர்ந்தார்.
காணாமல் போன ஆடு திரும்பி வந்ததைக் கண்ட மற்ற ஆடுகளும் குரலெழுப்பி தம் மகிழ்வை வெளிப்படுத்தின.
மேய்ப்பர் மறுநாள் தம் நண்பர்களையெல்லாம் அழைத்து நடந்தவற்றைக் கூறினார். "காணாமல் போன ஆட்டை கண்டு
பிடித்து மகிழ்ந்தேன்! என் மகிழ்ச்சியில் நீங்களும் பங்கு கொள்வதற்காக உங்களுக்கு ஒரு விருந்து வைக்கிறேன்!' என்று கூறி நண்பர்களை எல்லாம் வரச் செய்து, அவர்களுக்கு விருந்தளித்து உபசரித்தார்!''.
காணாமல்போன தீயோரை நல்வழிப்படுத்துவதற்காக, இயேசு அவர்களைக் கண்டுபிடிக்கின்றார். அவர் சிந்தனைகள் பாவிகள் மீது உள்ளதும் அவர்களைக் காப்பதற்கே! நாம் பாவத்தால் காணாமல் போனாலும், நம்மைக் கண்டு பிடித்து அவர் மந்தையில் சேர்த்துக் கொள்கின்றார்!