ஒரே இடத்தில் கைலாயமும் வைகுண்டமும்!

பக்தர்களைக் காக்க இப்பூவுலகில் இருவரும் ஒருங்கே  எழுந்தருளி அருள்பாலித்துக் கொண்டிருக்கும் இடம் தமிழகத்தின் கைலாயம், நித்ய பூலோக வைகுண்டம், ஜனகபுரி என அழைக்கப்பட்ட நடுநாட்டுத் தலமாகும்.
-பூங்காவனம் ஜெயக்குமார்
-பூங்காவனம் ஜெயக்குமார்

திருமாலும் சிவனும் ஒருசேர எழுந்தருளிய இடம் இப்பூவுலகம் தவிர வேறெங்கும் கிடையாது. பக்தர்களைக் காக்க இப்பூவுலகில் இருவரும் ஒருங்கே  எழுந்தருளி அருள்பாலித்துக் கொண்டிருக்கும் இடம் தமிழகத்தின் கைலாயம், நித்ய பூலோக வைகுண்டம், ஜனகபுரி என அழைக்கப்பட்ட நடுநாட்டுத் தலமாகும்.

சிவபெருமானின் பிரசாதமாக  துர்வாச முனிவருக்குக் கிடைத்த மாலை  ஒன்றை இந்திரனிடம் கொடுத்தார். அவன் அதனை ஐராவதத்தின் மத்தகத்தில் வைக்க, அது அதனை எடுத்துப் போட்டு மிதித்தது. நடந்ததைக் கண்ட துர்வாசர், இந்திரனின் சக்தியும்  செல்வங்களும்  அவனிடமிருந்து விலக சாபமிட, அனைத்தும் விலகின. இழந்ததை மீண்டும் பெற திருமாலிடம் சாப நிவர்த்திக்காக  வேண்ட, அவர் பாற்கடலைக் கடைந்து அமுதம் பெறச்சொன்னார்.

பாற்கடலைக் கடையும்போது  வாசுகிப் பாம்பு கக்கிய நஞ்சினால் அஞ்சிய தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் தஞ்சம் அடைந்தனர். பெருமான் ஆலகால விஷத்தினை உண்டார்.  உமையவள், நஞ்சை கண்டத்தில் நிறுத்த நீலகண்டனானார். நஞ்சுண்டவர் அதன் வீரியத்தின் காரணமாக இத்தலத்தில் எவருமறியாமல் மறைந்து  தியானத்தில் வந்தமர்ந்தார். 

அந்நேரத்தில் துயர் அடைந்தவர்கள் இன்பம் பெறும் வகையில் "ஏழரை நாழிகை' எனும் சாம காலத்தில் அங்கு வந்து சிவபெருமானை வழிபட்டனர். அதைத்தொடர்ந்து,  அங்கேயே நிரந்தரமாக இருந்து அருள் செய்யுமாறு தேவர்களும் ரிஷிகளும் சிவனிடம் வேண்ட, அதன்படியே அவர் எழுந்தருளினார் என தலபுராணம் கூறுகிறது.

இத்தல இறைவன் கைலாசநாதர் கிழக்கு முகமாய் வட்டவடிவ ஆவுடையாரில் லிங்க உருவில் காட்சியளிக்கிறார். விஜயநகர மன்னர்கள் காலத்தில் நந்தி மண்டபம், மகா மண்டபம் கருங்கல்லால் கட்டப்பட்டது.  இதன் தென்புறம் அரிதான வடக்கு பார்த்த முருகர் சந்நிதி அமைந்துள்ளது. 

மகா மண்டபம் நாயக்கர் காலத்தைச் சார்ந்தது . அர்த்த மண்டபம், கருவறை  சோழர் காலத்தில் அமைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. சோழர்கள் மற்றும் விஜயநகர மன்னர்கள் காலத்து கலை வேலைப்பாடுகள் கலந்த நிலையில் கோயில் அமைந்துள்ளது. அன்னையின் திருநாமம் பிருகன்நாயகி என்னும் பெரியநாயகி. இவரது சந்நிதி சுவாமி சந்நிதிக்கு இடதுபுறம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. அன்னை மேல் இரு கரங்களில் தாமரை மலர் தாங்கியும் , கீழ் இரு கரங்களில் அபய வரத முத்திரை தாங்கியும் நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள். பிற பரிவார ஆலயங்களும் உள்ளன.  ஆலயத்தின் தல மரம் வில்வமாகும். 

யுகப்பிரளய நேரம். திருமால், பிரம்மனின் நித்திரைக் காலம் முடியும் வரை ஜலப்பிரளயத்தில் தேவையானவற்றைக் காத்து ரட்சித்து வந்தார். நித்திரையிலிருந்து மீண்ட பிரம்மதேவனுக்கு வேதங்களை மீட்டுத் தந்து அவன் முன்பு பிரத்யட்சமாகக் காட்சி அளித்தார்.

மறுசிருஷ்டி துவங்கிய பின்பு வேதங்கள் கைலாயம் சென்று சிவபெருமானிடம், சிருஷ்டி தடைப்பட காரணமாய் அமைந்ததால் ஏற்பட்ட தோஷம் நீங்க வழி கேட்டனர். "விந்தியத்திற்குத் தெற்காக நூறு யோசனை தூரத்தில், அடர் வனத்தில் நானும் திருமாலும் பரமபதநாதனாக எழுந்தருளியிருக்கிறோம். அவரே உங்கள் தோஷத்தை நீக்கும் சக்தி பெற்றவர்!' என்றார். 

சிவன் அறிவுரைப்படி, வேதங்கள் ஓரிடத்தில் பரமபதநாதனைக் கண்டு, தரிசித்து சிருஷ்டி தோஷம் நீங்கின. தென்னாட்டின் நலனுக்காக இருவரும் நிரந்தரமாக இங்கேயே எழுந்தருளி மக்களுக்கு அருள் வழங்க வேண்டுமென, வேதங்கள் வேண்டியபடி திருமால் வைகுண்டநாதனாகவும், சிவபெருமான் கைலாசநாதனாகவும் அருகருகே இருந்து அருளினார்கள்.  

"எங்கள் பிழை பொறுத்து இருவரும் அருளிய காரணத்தால் இங்கே நாங்களும் நிரந்தரமாக இருந்து ஒலித்துக் கொண்டிருப்போம்!' என வேதங்களும் உறுதி செய்தன.

தென்புறம் ஐந்து நிலை ராஜகோபுரத்துடன்  உள்ள வைகுண்டவாசப் பெருமாள் கோயிலில்  வீரஆஞ்சநேயர் சந்நிதி மற்றும் ஸ்ரீதேவி, பூதேவியுடன் கம்பீரமாக நின்றகோலத்தில் தெற்கு நோக்கி வரதராஜப் பெருமாள் அபிமான மூர்த்தியாக நிற்க, திருச்சுற்றில் ஜனகவல்லித்தாயார் சந்நிதி அமைந்துள்ளது.


தனி சந்நிதியில் சக்கரத்தாழ்வார், யோக நரசிம்மர், ஆண்டாள் சந்நிதியும், ராமர் பாதம், கருவறைக்கு நேர் எதிரில் பெரிய மற்றும் சிறிய திருவடிகள் எழுந்தருளியுள்ளனர். தும்பிக்கை ஆழ்வார்  மகாமண்டபத்தில் நாதமுனி, ஆளவந்தார், ராமாநுஜர், தேசிகர்ஆகிய ஆச்சார்யர்கள் நால்வர், ஆழ்வார்கள், லக்ஷ்மி நாராயணரும்  எழுந்தருளியுள்ளனர். 

மற்றொரு கருவறையில் வைகுண்டவாசப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் அமர்ந்த நிலையில் அருள்கிறார். வைகுண்ட வாசனை தரிசித்து, அனைத்து நாள்களிலும்  பரமபதவாசல் வழியாக வெளிவந்து, பெரிய திருவடியைத் தரிசிக்கலாம் .

இந்த இரு கோயில்களும் பரந்துபட்ட தொன்மைச் சிறப்பு வாய்ந்த விழுப்புரம் நகருக்குள் மையப்புள்ளியாய் அமைந்துள்ளன. இவ்வூர் பல்லவர் காலத்தில் நிருபதுங்கவர்மன் பெயரால் "விஜய நிருபதுங்க  சதுர்வேதி மங்கலம்'  எனவும் வழங்கப்பட்டது. கோயில் அமைந்துள்ள பகுதி பிற்காலச் சோழர் காலத்தில் சிறந்த அரசியல் தலைவனாக செல்வாக்கு பெற்றிருந்த "விழுப்பரையன்' என்ற குறுநில மன்னன் பெயரால் "விழுப்பரையபுரம்' என்ற பெயரைப் பெற்று, பின்னர் கி.பி.1265-இல் சடையவர்மன் சுந்தரபாண்டியன் காலத்திலேயே இவ்வூர் "விழுப்புரம்' என வழங்கப்பட்டிருக்கிறது. வைகுண்டவாசப் பெருமாள் ஆலய கொடிக்கம்பத்தில் "விழுப்புரம் எனும் ஜனகபுரி' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொன்மையான வரலாற்றுப் பின்னணி கொண்ட விழுப்புரத்தில் சோழ மன்னர் முதலாம் ராஜராஜன் காலத்திற்கு முன்பே கைலாசநாதர் திருக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. முதலாம் குலோத்துங்கன், கோப்பெருஞ்சிங்கன், ராஜநாராயணன் சம்புவராயன், சடையவர்மன் சுந்தரபாண்டியன், விருப்பண்ண உடையார், சாளுவ நரசிங்கராஜ உடையார், நரசிங்க நாயக்கர், கிருஷ்ண தேவராயர், இரண்டாம் ஸ்ரீரங்கதேவர் முதலான மன்னர்கள் காலத்தில் ஆலயத் திருப்பணிகள் நடந்துள்ளன. பதினைந்தாம் நூற்றாண்டில் பெருவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இவ்வாலயம் விஜயநகர மன்னர் காலத்தில் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது.

இதே போல் வைகுண்டவாசப் பெருமாள் கோயிலும் மதுரைகொண்ட கோப்பரகேசரி  முதலாம் பராந்தகனுடைய 33-ஆவது ஆட்சியாண்டில் கி.பி. 940 -இல் "விண்ணகரம்' எனப் பெயர் பெற்றிருந்தது. 

முதலாம் ராஜராஜன் பெயரால் கி.பி.1014-இல் இப்பகுதி "ஜனநாதச் சதுர்வேதி மங்கலம்' என்றும் பெயர் பெற்று விளங்கியது. கி.பி. 1470-71 -இல் இக்கோயில் மறுசீரமைக்கப்பட்டதை இங்குள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது.

இந்த இரு கோயில்களும் ஒரே மாடவீதியைக் கொண்டவை. சித்திரையில் கைலாசநாதர் கோயிலிலும், வைகாசியில் பெருமாள் கோயிலிலும் கொடியேற்றி, 10 நாள்களும் வாகனப் புறப்பாடாகி, திருத்தேர் உற்சவம் நடைபெறும். உற்சவத்தின் ஒவ்வொரு நாளிலும், ஒவ்வொரு சமூகத்தைச் சேர்ந்தவர்களால் உற்சவம் உபயமாக நடத்தப்படுகிறது.

அமைவிடம்: விழுப்புரம் மாநகரின் வடகிழக்குப் பகுதியில், பழைய பேருந்து நிலையத்திலிருந்து அரை கி.மீ. தொலைவில் கைலாசநாதர் கோயில் உள்ளது. அங்கிருந்து சற்று தொலைவிலேயே வைகுண்டவாசப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது!

ஆன்மிகம் மணக்கும்  மார்கழி மாதம்!

மார்கழி மாதம் இப்பகுதி முழுவதும் ஆன்மிகம் மணக்கும். பகல்பத்து வைகுண்ட ஏகாதசி, இராப்பத்து மாணிக்கவாசகர் உற்சவம், ஆருத்ரா அபிஷேகம், புறப்பாடு எனத் தொடர்ந்து விழாக்கள் விமரிசையாக நடைபெறும். பெரும்பாலும், பகல்பத்து நடக்கும் போது மாணிக்கவாசகர் உற்சவம் துவங்கும். வைகுண்ட ஏகாதசி நடக்கும் போது, நான்காம் நாள் ஆருத்ரா உற்சவம் நடைபெறும்.

எப்போதுமில்லாத வகையில் இவ்வாண்டு டிச.11-இல் கைலாசநாதர் கோயிலில் மாணிக்கவாசகர் உற்சவம் துவங்கி, 20-ஆம் தேதி ஆருத்ரா அபிஷேகம், புறப்பாடு நடைபெறும். அதைத்தொடர்ந்து 2022 ஜனவரி 3-ஆம் தேதி பகல்பத்து உற்சவம் துவங்கி, 13-ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி உற்சவம், பரமபதநாதன் சேவை எனத் துவங்கி, ஜன. 23-ஆம் தேதியுடன் இராப்பத்து உற்சவம் நிறைவுபெறும் .
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com