நன்மக்கட் பேறும் நாகலிங்கப் பூவும்!  

சிவ லிங்க பூஜைக்கு வில்வ இலை, தாமரைப்பூ, செவ்வரளிப் பூ வரிசையில் நாகலிங்கப் பூவும் முக்கிய இடம் வகிக்கிறது. 
நன்மக்கட் பேறும் நாகலிங்கப் பூவும்!  
நன்மக்கட் பேறும் நாகலிங்கப் பூவும்!  


சிவ லிங்க பூஜைக்கு வில்வ இலை, தாமரைப்பூ, செவ்வரளிப் பூ வரிசையில் நாகலிங்கப் பூவும் முக்கிய இடம் வகிக்கிறது. 

இந்த நாகலிங்க மரம் இயற்கையான யோக அக்னியைப் பூண்டது. நாகலிங்கப் பூவை மரத்தில் இருந்து பறிக்கும்போது கையில் இதமான உஷ்ணம் ஏற்படுவதை  உணரலாம். இதன் ஸ்பரிசம் மனித மூளைக்கு மிகவும் நல்லது. பூவில் நாகமும், உள்ளே லிங்கமும் அதனைச் சுற்றிலும் தேவர்களும் இருக்கிறார்கள் என்று கூறுவர்.  

நாகலிங்கப் பூவை வழிபட்டால் நீண்ட காலமாகத் தீராத நோய்கள் தீரும். மன வேதனை குறையும். இதன் இலைகள் நுண்கிருமிகளை அழிக்கும் ஆற்றல் கொண்டது. இப்பூவால் அர்ச்சித்தால் நாகதோஷம் நீங்கும் என்பதும் ஐதீகம். இத்தகு பெருமை பெற்ற பூவைக் கொண்டு அர்ச்சிப்பவர்களின் மனக் குறைகளை நீக்கி ஆனந்தம் அளிக்கிறார் இஞ்சிக்குடியில் கோயில் கொண்டுள்ள பார்வதீஸ்வரர். தினமும் நாகலிங்கப் பூக்களால் இங்குள்ள ஈஸ்வரனுக்கு அர்ச்சனை நடைபெறுகிறது. 

தல வரலாறு: குலோத்துங்கச் சோழனுக்கு நீண்ட  காலமாக குழந்தைச் செல்வம் இல்லாமல் பலத் திருத்தலங்களுக்கும் சென்று, இறுதியில் இத் தலத்தில் உறையும் ஸ்ரீ சாந்தநாயகி அம்மனைச் சரணடைந்தான்.  அவள் அருளால் அழகிய குழந்தை பிறக்க, மிகுந்த மகிழ்வெய்திய அரசன் தன் மனைவியுடன் வந்து அம்பிகையைத் தரிசித்து, அம்பிகையின் திருப்பாதங்களில் கொலுசு அணிவித்து ஆனந்தித்தான். இன்றும் அம்பிகை தன் திருப்பாதங்களில் கொலுசு அணிந்திருப்பதைக் காணலாம். 

பார்வதிதேவியின் வேண்டுதலுக்கு இணங்க தன் இடப்பாகத்தை வழங்கிய காரணத்தால், இத்தல இறைவன் "பார்வதீஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார்.  இறைவி "தவக்கோல நாயகி' என்றும், உக்கிர கோலம் கொண்டு, பிறகு சாந்தம் அடைந்ததால், "சாந்த நாயகி' என்றும் அழைக்கப்படுகிறாள். மேலும் அம்பிகைக்கு "லலிதாம்பிகை' என்ற ஒரு பெயரும் உண்டு. அமர்ந்த கோலத்தில் அருள்புரியும் சாந்த நாயகி அம்பிகைக்கு, நம் கையால் தொடுத்த நறுமணப் பூக்களைச் சார்த்தி வணங்க, வாழ்வில் சாந்தமும் அமைதியும் கிட்டும்.  

புராணக் கதை: மதலோலை எனும் அரக்கி, துர்வாச முனிவரின் தவத்தைக் கலைக்க, அதனால் அவர் கொடுத்த சாபத்தால் அம்பரன், அம்பன் ஆகிய அசுரக் குழந்தைகளைப் பெற்றவுடன் உயிர் நீத்தாள்.  

இரண்டு அசுரக் குழந்தைகளும் வளர்ந்து பெரியவர்களானதும், தேவர்களுக்கு பல கொடுமைகள் செய்ய, அதனால் தேவர்கள் சிவபெருமானைச் சரணடைந்தனர்.  சிவபெருமான் அவர்களுக்கு அபயம் கொடுத்து, புன்னகையுடன் தன் தேவியை நோக்க, ஈசனின் குறிப்பறிந்த அம்பிகை, அழகிய பெண்ணாக உருவெடுத்து, அரக்கர்கள் முன் தோன்றினாள்.  அசுரர்கள் இருவரும் அவளைக் கண்டு, அவளழகில் மயங்கினர்.

அப்பொழுது வயோதிக அந்தணராக வந்த பெருமாள், அசுரர்களிடம் சென்று, "உங்களில் வலிமையான ஒருவருக்கே அவள் சொந்தமாவாள்!' என்று கூற, இதனால் அவளை அடைய, அவர்களுக்கிடையே சண்டை மூண்டது. அதில் அம்பன் அழிந்தான். வெற்றி பெற்ற அம்பரன் அப்பெண்ணைத் தேடி வர, அம்பிகை, மகா காளியாக உருவெடுத்து நின்றாள்.  

அதைக்கண்டு பயந்து அசுரன் ஓட, அவனைத் துரத்திச் சென்று, தனது சூலாயுதத்தால் மாய்த்தாள் அம்பிகை. அந்த இடம் "அம்பகரத்தூர்' என்று சக்தி தலமாக இன்றும் விளங்குகிறது.  

அம்பிகைக்குப் பல விதங்களிலும் உதவிபுரிந்த பெருமாள் ஸ்ரீ ஆதிகேசவன் என்னும் திருநாமத்துடன், அருகில் தனியாகக் கோயில் கொண்டு சேவை சாதிக்கிறார். இக்கோயிலில் சூரியனும் சந்திரனும் அருகருகே அமர்ந்து பக்தர்களின் தோஷங்களை நீக்குகின்றனர். சண்டிகேஸ்வரர், சண்டிகேஸ்வரியுடன் திருமணக் கோலத்தில், காட்சி தருவது இத்தலத்தின் மற்றொரு சிறப்பாகும்.  

இத்தல இறைவனை நாகலிங்கப்பூவினால் அர்ச்சித்து, அம்பிகையை குங்குமத்தால் பூஜித்து வழிபடுவோருக்கு மழலை பாக்கியம் விரைவில் கிட்டும்.  திருமணம் நடைபெறவும், குழந்தை பாக்கியம் கிட்டவும், நல்ல வேலை கிடைக்கவும், குடும்ப ஒற்றுமை நிலைக்கவும் இத்திருக்கோயிலை நாடி வருகின்றனர் பக்தர்கள். 

அமைவிடம்: திருவாரூர் மாவட்டத்தில், பேரளத்திலிருந்து அரை கி.மீ. தொலைவில் திருமீயச்சூர், கூத்தனூர் திருத்தலங்களுக்கு மிக அருகில் இஞ்சிக்குடி பார்வதீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. 

தொடர்புக்கு: சாமிநாதன் - 9842081269 / 8610183317. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com