தேவியின் திருத்தலங்கள்: 51 - நல்லூர் கிரி சுந்தரியம்மன் 

"யாகவீநாம் ஸந்தர்ப-ஸ்தபக-மகரந்தைக-ரஸிகம்கடாக்ஷ-வ்யா-க்ஷப-ப்ரமர-கலபெள-கர்ணயுகலம்'
தேவியின் திருத்தலங்கள்: 51 - நல்லூர் கிரி சுந்தரியம்மன் 

"யாகவீநாம் ஸந்தர்ப-ஸ்தபக-மகரந்தைக-ரஸிகம்
கடாக்ஷ-வ்யா-க்ஷப-ப்ரமர-கலபெள-கர்ணயுகலம்'

-செளந்தர்ய லஹரி

நமக்குள் எல்லையற்ற பேராற்றல் உள்ளது. அந்தப் பேராற்றலின் வடிவமே அம்பிகை. நாம் அவளை மறந்தாலும், நமக்குள் இருந்து அவ்வப்போது தன் இருப்பை ஞாபகப்படுத்திக் கொண்டேதான் இருக்கிறாள். 

தன்னை அன்புடன் வணங்கும் பக்தர்களுக்கு சகல செளபாக்கியங்களையும் வழங்கவே அம்பிகை பல இடங்களில் கோயில் கொண்டுள்ளாள். அதிலும் வாழ்க்கைக்கு முக்கியமான திருமணப் பேறு வழங்க அம்பிகை குடி கொண்டுள்ள திருத்தலமே நல்லூர். இங்கு அன்னை கல்யாண சுந்தரி என்றும், கிரி சுந்தரி என்றும் அழைக்கப்படுகிறாள்.

கைலாயத்தில் உமாதேவிக்கும், ஈசனுக்கும் நடந்த திருமணத்தைக் காண உலகிலுள்ள உயிரினங்கள் அனைத்தும் திரண்டு வந்து நின்றன. இதனால் வடதிசை தாழ்ந்து, தென்திசை உயர்ந்தது. அதை சமப்படுத்த, தென்திசை நோக்கி அகத்தியரை செல்லப் பணித்தார் இறைவன். இறைவனின் திருமணக் காட்சியைக் காண முடியாமல் ஏங்கிய அகத்தியரிடம் ""வருந்த வேண்டாம். உனக்கு என் திருமணக் காட்சியை திருநல்லூரில் காட்டி அருள்வேன்!'' - என்று ஈசன் கூறினார்.

அதன்படி அகத்தியருக்குத் தன் திருமணக் கோலத்தைக் காட்டிய இடம் நல்லூர் என்கிற திருநல்லூர். இங்கு அகத்தியர் மூலவருக்கு பக்கத்தில் ஒரு லிங்கத்தை ஸ்தாபித்து பூஜித்தார். அவர் தரிசித்த திருமணக்கோல மூர்த்தி, லிங்கத்தின் பின்பக்கம் எழுந்தருளியுள்ளார்.

இதன் தலவிருட்சம் வில்வம் ஆகும். முதன் முதலில் தோன்றிய வில்வ மரம் இது என்பதால் ஆதிமரம் என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள இறைவன் சுயம்பு லிங்கம் என்பதோடு தினமும் இவர் ஐந்து முறை நிறம் மாறுவதால் பஞ்சவர்ணேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்.

இங்கு தனி சந்நிதியில் கிரி சுந்தரி அம்மன் அழகு ரூபமாகக் காட்சி அளிக்கிறார். கருவறையில் அமர்ந்த வடிவில், சுதை வடிவில் இறைவனும், இறைவியும் திருமணக் கோலத்தில் அருள் பாலிக்கிறார்கள். 

நீண்ட நாள்களாகத் திருமணம் தடைபட்டவர்கள் இங்கு வந்து அம்பிகையை வழிபட்டு, ஒரு மலர் மாலை சூட்டி, ஒரு மாலையை வாங்கித் தானும் சூட்டியபடி, பிரகாரத்தை வலம் வந்து அம்பிகையை வழிபட்டுச் சென்றால் அவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம். 

சப்த சாகரம்: பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மாமாங்கக் குளத்தில், கும்பகோணத்தில் நீராடுவது போல், அதற்கு ஈடான சிறப்பு பெற்ற "சப்தசாகரம்' என்ற திருக்குளம் இங்கு உள்ளது. மாசி மகத்தன்று தட்சனின் மகளாக தாட்சாயினி அவதரித்தாள் என்பதால் அந்த நாளில் இக்குளத்தில் நீராடுவது மிகச் சிறப்பாக கூறப்படுகிறது. "மகம் பிறந்தது நல்லூரில், மகாமகம் பிறந்தது கும்பகோணத்தில்!' என்றொரு பழமொழியும் உண்டு.

பஞ்ச பூதங்கள் மூலம் குழந்தைகளைப் பெற்றதாலும், கர்ணனை குழந்தையாக ஆற்றில் விட்டதாலும் குந்தி தேவியைத் தோஷம் பற்றிக் கொள்கிறது. அதைப் போக்க நாரதரிடம் வேண்டியபோது, "ஒரேநாளில் ஏழு கடலில் குளித்தால் தோஷம் விலகும்!' என்று நல்லூரில் உள்ள சப்த சாகரத்தில் அவளை நீராடச் சொல்கிறார்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்த குந்தி தேவி, ஒரு மாசி மக நாளில் இங்கு வந்து நீராடி மனவேதனை நீங்கப் பெற்றாள்.

சோழ மன்னன் கோட்செங்கண்ணன் கட்டிய மாடக் கோயில் இது. ராஜகோபுரம் ஐந்து நிலைகளையும், உள்கோபுரம் மூன்று நிலைகளையும் கொண்டு அமைந்துள்ளது. முன் பிரகாரத்தில் கவசமிட்ட கொடிமரத்தின் முன்னால் கொடிமர விநாயகர் உள்ளார். 

வடபுறம் வஸந்த மண்டபமும், தென்புறம் அமர்நீதி நாயனார் தராசுத் தட்டில் ஏறி அமர்ந்த துலா மண்டபமும் உள்ளன. தனி சந்நிதியில் கிரி சுந்தரி அம்மன் தெற்கு நோக்கிக் காட்சி அளிக்கிறாள். 

இக்கோயில் தெற்கு வெளிப்பிரகாரத்தில் உள்ள அஷ்டபுஜ காளி சந்நிதி சிறப்பு வாய்ந்தது. எட்டு கைகளுடன், சூலாயுதம் தாங்கி அமர்ந்துள்ள கோலம் மிகவும் அழகானது. கர்ப்பிணிகள் தங்களுக்கு சுகப்பிரசவம் நடைபெற காளி சந்நிதியில் வளைகாப்பு விழா நடத்துகிறார்கள்.

இறைவனுடன் திருமணக் கோலம் காட்டியதால் இத்தலம் திருமண பிரார்த்தனைத் தலமாகவும் விளங்குகிறது. மகா சிவராத்திரி, மார்கழித் திருவாதிரை போன்ற தினங்களிலும் இறைவன், இறைவிக்கு கல்யாண உற்சவம் இங்கு நடக்கிறது.

பிரம்மா இத்திருக்குளத்தின் கீழ்த்திசையில் ரிக் வேதத்தையும், தென் திசையில் யஜுர் வேதத்தையும், மேற்கில் சாம வேதத்தையும், வடக்கில் அதர்வண வேதத்தையும், நடுவில் சப்தகோடி மந்திரங்களையும், பதினெண் புராணங்களையும் வைத்து புனிதமாக்கினார் என்று தலபுராணம் கூறுகிறது.

"தாயே! காதளவு நீண்ட உன் கண்களே வேண்டிய அனைத்தையும் தந்து விடுகிறது. அவளின் நயனங்களை மனதில் வைத்து தியானிப்பவர்களுக்கு சகல செளபாக்கியங்களும் கிடைக்கிறது!' என்கிறார் ஸ்ரீஆதிசங்கரர்.

அன்னையை மனதில் துதித்து அவளையே நினைத்து இருந்தால் சகல தீய சகவாசங்கள், தீய எண்ணங்கள் விலகும். மனித மனம் சலனங்களுக்கு உட்பட்டது. இன்பம் துன்பம் என்று மாறி, மாறி அலைக்கழித்தாலும், இன்பம் மட்டுமே வேண்டும் என்று எண்ணுகிறோம். அதை நோக்கியே நம் பயணம் இருக்கிறது. முடிவில் அவள் பாதத்தையே அடைகிறோம். ஜெகன் மாதாவான அவளே நம்மைக் காக்க வல்லவள்.

இந்த உலகியல் வாழ்வில் நம் ஆசைகளை நிறைவேற்றி, வேண்டிய அனைத்தையும் தந்து, முடிவில் தன்னிடம் ஐக்கியப்படுத்தியும் கொள்கிறாள். அன்னை கிரி சுந்தரி ஈசனுடன் திருமணக் கோலத்தில் மகிழ்ந்திருக்கும் திருநல்லூர் சென்று அவளை வேண்டினால், வேண்டிய அனைத்தையும் தருவாள்.

அமைவிடம்: தஞ்சாவூர் - கும்பகோணம் சாலையில் பாபநாசத்திற்கு கிழக்கில் 3 கி.மீ. தொலைவில் நல்லூர் திருத்தலம் அமைந்துள்ளது.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com