முகப்பு வார இதழ்கள் வெள்ளிமணி
திருமண வாழ்வு தரும் வரதராஜப் பெருமாள்!
By பொ.பாலாஜிகணேஷ் | Published On : 10th December 2021 08:14 PM | Last Updated : 10th December 2021 08:14 PM | அ+அ அ- |

திருமண வயதாகியும் இன்னும் திருமணம் ஆகவில்லையே என்று வருத்தப்படுவோரின் கவலையைப் போக்குவதற்காகவே வராஹபுரி எனப்படும் பண்ருட்டியில் பெருந்தேவி தாயார் சமேத வரதராஜப் பெருமாள் தன் பரிவாரங்களோடு கோயில் கொண்டுள்ளார்.
தனது பக்தர் ஒருவரின் கனவில் பெருமாள் தோன்றி இவ்வாலயம் கட்ட உத்தரவிட்டார் என்று தலவரலாறு கூறுகிறது. இதுவே இன்று பண்ருட்டி காந்தி ரோட்டில் அமைந்துள்ள வரதராஜப் பெருமாள் திருக்கோயிலாகும்.
மூலவருக்கு எதிரே தனி சந்நிதியில் கருடன் தரிசனம் தர, கருவறையில் கிழக்கு நோக்கி கம்பீரத் தோற்றத்துடன் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக எழுந்தருளியுள்ளார் வரதராஜப்பெருமாள். அஸ்த நட்சத்திரத்தன்று இங்கு நடைபெறும் திருமஞ்சனத்திலும், திருவோணம் நட்சத்திரத்தன்று நடைபெறும் கல்யாண உற்சவத்திலும் கலந்துகொண்டு வரதராஜப் பெருமாளையும், பெருந்தேவித் தாயாரையும் சேவித்தால் சர்ப்ப தோஷம் நீங்கி, திருமணம் உள்பட சகல சுப காரியங்களும் நடைபெறும் என்பது ஐதீகம். திருமண உற்சவத்தின்போது சகஸ்ரநாமம் செய்யப்பட்டு, பெருந்தேவித் தாயார் ஆயிரத்தெட்டு மலர்களால் அர்ச்சனை செய்வதோடு வெள்ளிப் பல்லக்கிலும் எழுந்தருள்வார்.
வைகுண்ட ஏகாதசி பகல் பத்து, இராப்பத்து உற்சவம் சிறப்பாக கொண்டாடப்படும். அப்போது பெருமாள் திருவடியில் நம்மாழ்வார் சேருதல் நிகழ்வு நடைபெறும். மாசி மகத்தன்று தேவனாம்பட்டினம் கடற்கரையில் இப்பெருமாள் எழுந்தருளி தீர்த்தவாரி காண்பது கண்கொள்ளாக் காட்சியாகும்!