தேவியின் திருத்தலங்கள்: 52 - திருவெண்பாக்கம் மின்னொளி அம்மன்

தேவியின் திருத்தலங்கள்: 52 - திருவெண்பாக்கம் மின்னொளி அம்மன்

ஆணவம், அகம்பாவம் இல்லாமல் நடப்பது எதுவும் பராசக்தியின் சித்தம் என்று உணர்ந்து செல்ல வேண்டும்.


"அமுஞ்சந்தெள - த்ருஷ்ட்வா தவ - நவ ரஸாஸ்வாத - தரலெள 
அஸþயா - ஸம்ஸர்கா - தலிக - நயநம் - சிஞ்சிதருணம்!' 

-செளந்தர்ய லஹரி

ஆணவம், அகம்பாவம் இல்லாமல் நடப்பது எதுவும் பராசக்தியின் சித்தம் என்று உணர்ந்து செல்ல வேண்டும். அதுவே உண்மையான பக்தி லட்சணம். அவளிடம் பக்தி இருந்தால் சண்டை போடலாம். உரிமையோடு "தாயே! எனக்கு இது வேண்டும்!' என்று கேட்கலாம். 

நம் பாதை எங்கும் வழித்துணையாக அவள் வருவாள். அப்படித்தான் கண்பார்வை பறிபோன சுந்தரருக்கு "மின்னொளி காட்டி வழித்துணையாக' வருகிறாள் அம்பாள். அவளின் அருளால் கண் பார்வை திரும்பப் பெற்றார் சுந்தரர். 

இக்கோயில் பல சிறப்புகளைக் கொண்டது. இங்கு பல கல்வெட்டுகள், சிற்பங்கள் இதன் தல வரலாற்றைக் குறிக்கின்றன. 

திருவொற்றியூரில், ஈசனை சாட்சியாக வைத்து சங்கிலி நாச்சியாரைத் திருமணம் செய்து கொண்ட சுந்தரர், ""அவரைப் பிரிய மாட்டேன்!'' என்று சத்தியம் செய்தார். 

ஆனால் ஒரு சமயம் பறவை நாச்சியாரின் நினைவு வர, செய்து கொடுத்த சத்தியத்தை மறந்து திருவாரூர் புறப்பட்டார். அதனால் அவரின் கண் பார்வை பறிபோனது. திருவெண்பாக்கம் வந்தபோது, இறைவன் அவருக்கு ஊன்றுகோல் கொடுத்தார். 

சுந்தரர் இறைவனைப் பார்த்து ""நீர் உள்ளே இருக்கிறீரா?'' என்று கேட்க, ""உளோம்! போகீர்!'' என்கிறார்.  

""கண்ணொளி தராமல், ஊன்றுகோல் தந்தாயே இறைவா!'' என்று கோபத்துடன் சுந்தரர் அதை வீசி எறிந்தபோது, அது அங்குள்ள நந்தியின் மேல் பட்டு அவரின் கொம்பு ஒன்று உடைந்தது.

கண் இழந்த சுந்தரர் தடுமாறியபடி நடக்க, அவருக்கு உதவ அம்பிகை புறப்பட்டபோது ஈசன் தடுத்தார். 

ஆனால் அம்பிகை சுந்தரரிடம், ""மனிதர்கள் தவறு செய்வது இயல்பு! அவர்களின் ஊழ்வினையே இதற்குக் காரணம். ஈசனை தஞ்சம் அடைந்தவர்கள் அதிலிருந்து மீண்டு விடலாம். ஈசனையே நம்புங்கள். கண்பார்வை மீண்டும் கிடைக்கும்! கலங்காது செல்லுங்கள்!'' என்று ஆறுதல் கூறுகிறாள்.

ஆறுதல் வார்த்தை அளித்த அம்மை, சுந்தரர் தடுமாறாமல் நடந்து செல்ல அவ்வப்போது மின்னல் ஒளியாகத் தோன்றி அவருக்கு வழி காட்டினாள். அதன்பின் அம்பிகையின் அருளால் பார்வை மீண்டும் பெற்றார். கண் பார்வை இழந்த சுந்தரருக்கு மின்னலாகத்  தோன்றி வழி காட்டியதால் அம்பிகைக்கு "மின்னொளியம்பாள்' என்று பெயர். 

இக்கோயிலில் கிழக்கிலும், தெற்கிலும் நுழைவு வாயில்கள் இருந்தாலும், தெற்கு வாயில்தான் இப்போது பிரதான வாயிலாக இருக்கிறது. உள்ளே நுழைந்தவுடன் வெளிப்பிரகாரத்தில் இடது புறம் வழித்துணை விநாயகர் உள்ளார். இறைவன், இறைவி சந்நிதிகள் சற்று உயரமான மண்டபத்தில் அமைந்திருக்கின்றன. கிழக்கு வாயில் வழியாகச் சென்றால் நேரெதிரில் ஊன்றீஸ்வரர் சந்நிதியும், தெற்கு வாயில் வழியாகச் சென்றால் நேரெதிரில் அம்பாள் சந்நிதியும் உள்ளது. 

சுந்தரருக்கு உதவும் நோக்கத்தில், ஒரு காலை முன் வைத்துக் கிளம்பிய நிலையில் அன்னை காட்சி அளிக்கிறாள். கருவறை கோஷ்டத்தில் கணபதி, லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். சுவாமி சந்நிதி முன்பாக, வலது கொம்பு உடைந்த நந்தீஸ்வரரும், ஊன்றுகோலுடன் சுந்தரரும் உள்ளனர். 

இலந்தை மரம் இங்கு தல விருட்சமாகவும், தீர்த்தம் அக்னி தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது. பழைய கோயில் திருவிளம்பூதூரில் இருந்தது. கொசஸ்தலை ஆற்றில் அணை கட்ட இந்த இடம் அரசால் எடுத்துக் கொள்ளப்பட்டதால், புதுக் கோயில் அங்கிருந்து வெண்பாக்கத்திற்கு இடம் மாறியது. இக்குறிப்பு கல்வெட்டாக அம்பாள் சந்நிதி வாயிலில் பதிக்கப்பட்டுள்ளது.

மூலவரின் பின்னால் சுவாமி, அம்பாளின் பஞ்சலோகத் திருமேனிகள் உள்ளன. இங்குள்ள கல்வெட்டுகள் முதலாம் ராஜராஜ சோழன் காலத்தைச் சேர்ந்தது. சந்தி விளக்கு வைக்க, சுவாமிக்கு உணவு படைக்க, பூஜைக்கு நிலம் விடப்பட்ட நிவந்தம் பற்றிய குறிப்புகள் கல்வெட்டில் காணப்படுகின்றன.

இங்கு மகா சிவராத்திரி, அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை உற்சவங்கள் சிறப்பாக நடைபெறும். ஒரே இடத்தில் நின்று சுவாமியையும், அம்பாளையும் வழிபட முடியும். பிரகாரத்தில் ஆறுமுகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.

நவகிரகங்கள், மஹாலட்சுமி தனித்தனி சந்நிதியிலும், பைரவர் எட்டு கரங்களுடனும் காட்சி தருகின்றனர். திருமணத்தடை உள்ளவர்கள், கண்பார்வை குறைபாடு உடையவர்கள் அம்பிகையை வேண்டி "தேன் அபிஷேகம்' செய்கிறார்கள்.

சுந்தரருக்கு ஊன்றுகோல் தந்ததால் இறைவனுக்கு "ஊன்றீஸ்வரர்' என்று பெயர். இங்கு வித்தியாசமாக அமாவாசை, பெளர்ணமி நாள்களில் வடைமாலை சாற்றி வழிபடுகிறார்கள். 

தங்கள் பிரார்த்தனை நிறைவேறியவர்கள் சுவாமி, அம்பாளுக்கு வஸ்திரங்கள் சாற்றி, சிறப்பு அபிஷேகங்கள் செய்கிறார்கள். வாழ்க்கையில் பிடிப்பு இழந்து, இருண்டு விட்டது நம் வாழ்க்கை என்று மனக்கலக்கம், குழப்பம், வேதனை என்று மன உளைச்சலில் இருப்பவர்கள் அன்னையை வேண்டினால் வாழ்வில் ஒளி தந்து காப்பாள்.

"விண்ணவர் யாவரும் வந்து வணங்கிப் போற்றித் துதிக்கும் ஒளி பொருந்திய கண்களை உடைய அன்னையை பேதை நெஞ்சால் காண இயலுமா? முன் செய்த புண்ணியமே நாம் அவளைக் காண வழி வகுக்கும். நம் கண்ணின் ஒளியாக இருப்பவள் அன்னை. அவளின் கருங்கூந்தலே இருண்ட நம் மனதின் அஞ்ஞானத்தை அகற்றும் ஒளியாக இருக்கிறது!' என்கிறார் ஆதிசங்கரர்.

கண்ணொளி மட்டுமல்ல, வாழ்க்கையையும் பிரகாசிக்க வைக்கும் அற்புத சக்தி வாய்ந்தவள் மின்னொளி அம்மை. எனவே இது "நம்பிக்கைக் கோயில்!' என்றும் அழைக்கப்படுகிறது.

அமைவிடம்: திருவள்ளூர் மாவட்டம் பூண்டியில், திருவெண்பாக்கம்  மின்னொளி அம்மன் திருத்தலம் அமைந்துள்ளது. 

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com