நோய்களை நீக்கும் புண்ணிய திருத்தலம்!

வெப்பம், உஷ்ணம் என்னும் பல பொருள்கள் உண்டு. தீயை (அக்னி) கையில் ஏந்திய சிவபெருமான் எழுந்தருளியுள்ள கோயில் என்ற வகையில் இங்குள்ள இறைவன் "அக்னீஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார். 
நோய்களை நீக்கும் புண்ணிய திருத்தலம்!
நோய்களை நீக்கும் புண்ணிய திருத்தலம்!


"உடையவர் தீயனூர்' என்ற இவ்வூரின் தொன்மையான பெயர் "தீயனூர்' என்பதாகும். தீ என்கிற சொல்லுக்கு தூய்மை, வெப்பம், உஷ்ணம் என்னும் பல பொருள்கள் உண்டு. தீயை (அக்னி) கையில் ஏந்திய சிவபெருமான் எழுந்தருளியுள்ள கோயில் என்ற வகையில் இங்குள்ள இறைவன் "அக்னீஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார். 

தல வரலாறு: இப்பகுதி ஒரு காலத்தில் "வில்வ ஆரண்யம்' என்று அழைக்கப்பட்டது. சப்தரிஷிகளில் ஒருவரான ஜமதக்னி முனிவர் இங்கு வந்து யாகம் வளர்த்து, வில்வ மரத்தின் கீழ் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அதனால் இத்திருக்கோயில் இறைவன், அந்த ரிஷியின் பெயராலேயே "ஜமதக்னீஸ்வரர்' என அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

தற்பொழுது இப்பகுதியில் "உடையவர் தீயனூர்', "பெருமாள் தீயனூர்' என்னும் இரண்டு சிற்றூர்கள் உள்ளன. சிவன்கோயில் அமைந்துள்ள பகுதி "உடையவர் தீயனூர்' எனவும், விஷ்ணு கோயில் அமைந்துள்ள பகுதி "பெருமாள் தீயனூர்' எனவும் அழைக்கப்படுகிறது. சிவனை உடையார் எனவும், விஷ்ணுவை பெருமாள் எனவும் அழைக்கும் வழக்கம் இருப்பதால் இப்பெயர் உண்டாயிற்று எனலாம். 

சோழர் காலத்தில் இவ்வூருக்கு "மனுகுலகேசரி நல்லூர்' என்ற மற்றொரு சிறப்புப் பெயரும் இருந்துள்ளது என்பதைக் கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகிறது. மனுகுலம் என்பது சோழர் குலத்தின் பூர்வாசிரமப் பெயராகும். மனு அல்லது மனுநீதிச் சோழனின் வழிவந்தவர்கள் என்பது இதற்குப் பொருள். கேசரி என்பது சிங்கத்தைக் குறிக்கும். நல்லூர் என்பதற்குக் கோயிலுக்கு வழங்கப்பட்ட வளம் மிக்க நல்ல ஊர் என்று பொருளாகும். "மனு குலத்தில் பிறந்த சிங்கம் போன்றவன்' என்பது மனுகுலகேசரி என்னும் பெயரின் திரண்ட பொருளாகும். இப்பெயர் கங்கை கொண்ட சோழபுரத்தை நிறுவிய முதலாம் ராஜேந்திரசோழனின் (1012-1044) இரண்டாவது மகனான சோழகேரளன் என்ற இளவரசனின் இயற்பெயர் என்பதைக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. 

இத்திருக்கோயிலின் மூலவர் ஜமதக்னீஸ்வரர் கருங்கல்லால் ஆன சதுர வடிவில் அமைந்த பலகை போன்ற பீடத்தின் மேல், லிங்கத் திருமேனியாக அருட்காட்சி தருகிறார். இறைவி அமிர்தாம்பிகை, விண்ணிலுள்ள காந்த அலைகளைத் தன்னுள் இழுக்கும் விதமாக கூம்பு வடிவத்தில் அமைக்கப்பட்ட விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். அம்பிகையின் சிரசில் அழகிய மகுடம் அலங்கரிக்க, இரண்டு காதுகளிலும் மகர, பத்ர குண்டங்களோடும், கழுத்தில் திருமாங்கல்யத்தோடும், கைகளில் வளையல், கால்களில் சலங்கை, மேல் வலது கையில் அட்சய மாலை, மேல் இடது கையில் நீலோற்பவ மலர், வலதுகையில் அபய முத்திரையுடனும், இடது கையை தொடையில் ஊன்றியவாறும் திருக்காட்சியளிக்கிறார். 

அம்பாளின் திருவுருவம் மற்ற கோயில்களில் அமைந்ததைவிட இத்திருக்கோயிலில் மங்களகரமாகவும், அபய முத்திரையுடனும் காட்சியளிப்பது விசேஷமாகும். 

பரிகாரத்தலம்: அமிர்தாம்பிகை உடனுறை ஜமதக்னீஸ்வரர் அருள்பாலிக்கும் இத்தலத்தில் சுவாமியை வழிபட்டு, பிரார்த்தனை செய்தால், உஷ்ணத்தால் ஏற்படும் நோய்கள், உடம்பு வலி, கண் வலி, சூளை நோய் போன்றவைகள் நீங்கும் என்பது ஐதீகம். 

அமைவிடம்: அரியலூரிருந்து ஸ்ரீபுரந்தான் சாலையில் விளாங்குடி- கைக்காட்டியிலிருந்து 6 கி.மீ. தொலைவிலும் இத்திருத்தலம் அமைந்துள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com