பிரம்மஞானிக்கு பிரமாண்ட மணிமண்டபம்!

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நடந்த சம்பவம்: திருவண்ணாமலையிலும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளிலும் "ப்ளேக்' என்ற தொற்றுநோய் பரவியிருந்தது.
பிரமாண்ட மணிமண்டபம்!
பிரமாண்ட மணிமண்டபம்!

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நடந்த சம்பவம்: திருவண்ணாமலையிலும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளிலும் "ப்ளேக்' என்ற தொற்றுநோய் பரவியிருந்தது. அப்போது அங்கு பணியில் இருந்த மாவட்ட ஆட்சியர் அனைத்து "ப்ளேக்' நோயாளிகளையும் தனிமைப்படுத்தி வைக்க ஆணையிட்டிருந்தார். 

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்திற்குரிய பரதேசி போன்ற தோற்றமுடைய ஒருவர், அரசாங்க உத்தரவை மீறி தன்னிச்சையாக திருவண்ணாமலை நகர வீதிகளில் திரிந்துகொண்டிருந்தார். 
இது ஆட்சியரின் கவனத்திற்கு வர, உடனே அந்த நபரைத் தனி அறையில் பூட்டி வைக்க உத்தரவிட்டார். அதையடுத்து, அவர் தனியறையில் பூட்டி வைக்கப்பட்டார். 

மறுநாள், பணிநிமித்தமாக ஆட்சியர் திண்டிவனத்திற்குச் சென்று கொண்டிருக்கும் வழியில், ஒரு மரத்தினடியில் அந்த பரதேசி அமர்ந்திருப்பதைக் கண்டு திகைத்தார். உடனே திருவண்ணாமலைக்குத் தகவல் கேட்டு அறிய, பூட்டியிருக்கும் அறையில் அந்த பரதேசி இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

எவ்வாறு ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் ஒருவர் இருக்க முடியும் என்று யோசித்து, அந்த நபரை பூட்டிய அறையிலிருந்து விடுவித்து, உடல் பரிசோதனை செய்ததில் அந்த நோய்க்குண்டான அறிகுறியே சிறிதளவும் இல்லை என்று நிரூபணமாயிற்று. இது ஏதோ ஒரு மகானின் செயலாகத்தான் இருக்க முடியும் என்று தீர்மானித்து அவரைப்பற்றி விசாரித்தபோது, "சேஷாத்ரி சுவாமிகள்'தான் அவர் எனக் கண்டு கொண்டு வணங்கினார் அந்த ஆட்சியர். இது சுவாமிகள் நடத்திய அற்புதங்களில் ஒரு துளியே!

அநேக மகான்களும், ஞானச் செம்மல்களும் பெருகித் தழைத்த திருவண்ணாமலையில் வாழ்ந்த மகான்களில் சேஷாத்ரி சுவாமிகளும் ஒருவர். சுக்ர வாக்ய நாடி மற்றும் ஸ்கந்தவாக்ய நாடி ஜோதிடக் குறிப்புகள், திருக்கடையூரில் வாழ்ந்து தேவியின் திருவடிகளை அடைந்த அபிராமிபட்டரே மீண்டும் ஒரு ஜீவன் முக்தராக சேஷாத்ரி சுவாமிகளாக அவதரித்தார் என்று தெரிவிக்கிறது.

சேஷாத்ரி சுவாமிகள், வந்தவாசி அருகில், வழூர் கிராமத்தில் வரதராஜர், மரகதம்மாள் தம்பதிகளுக்கு மகனாக 1870 -ஆம் ஆண்டு ஜனவரி  22 -இல் (தை மாத, அஸ்த நட்சத்திர நாளில்) அவதரித்தார்.

உபதேசங்கள்: தீட்சை பெற்றது, பாலாஜி சுவாமிகள் என்பவரிடம். தபஸ் மேற்கொண்டது, வழூரில் உள்ள கோடீஸ்வரர் ஜீவசமாதி வளாகத்தில். 

இவர் தாய் இறக்கும் தறுவாயில் மூன்று முறை கூறிய "அருணாசலம்' என்ற வார்த்தை ஆழ்மனதில் பதிந்து விட்டது. திருவண்ணாமலையைப் போன்றே ஒரு படம் வரைந்து அதை பூஜித்து வந்தார். 

திருவண்ணாமலையில் லட்சம் தடவைக்கு மேல் கிரிவலம் செய்த இவர், மக்களின் நன்மைக்காகவே பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார். 1929-ஆம் ஆண்டு ஜனவரி 4-ஆம் தேதி சித்தியடைந்தார்.

 வழூரில் மணி மண்டபம்: மகான் பிறந்த ஊரான வழூரில் ஒரு மணிமண்டபம் எழுப்ப சேஷாத்ரி சுவாமிகளின் ஆத்மார்த்த பக்தர்கள் தீர்மானித்தனர். 

ஸ்ரீசேஷாத்ரி ஸ்வாமிகள் (வழூர்) டிரஸ்ட் என்ற அமைப்பை 2009-இல் உருவாக்கி, மணி மண்டபம் கட்ட திருப்பணிகள் துவக்கப்பட்டன. இடையில் திருப்பணிகளை நடத்துவதில் சிரம நிலை ஏற்பட்ட போது, காஞ்சி மகா சுவாமிகளின் அதிஷ்டானத்தில் வேண்ட, அவர் அருளால் சிரமங்கள் நிவர்த்தியானது.

அதைத்தொடர்ந்து, இந்த மணிமண்டபம் பிரம்மாண்ட அளவில் உருவாகத் தொடங்கியது. மூல ஸ்தானத்தில் சுவாமிகளின் முழு உருவச் சிலை கற்றிருமேனியாய்  பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. 

சுவாமிகள் சிறுவயதில் தினமும் அவரது தாயாருடன் சேர்ந்து சுற்றி வந்த துளசிமாடம், தங்கக் கவசம் சாற்றப்பட்டு வழிபாட்டில் வைக்கப்பட உள்ளது. சுவாமிகள் வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவங்களின் ஓவியங்கள், சிற்பங்கள் எனப் பல்வேறு சிறப்பம்சங்களுடன், காஞ்சி காமகோடி காமாட்சி சில்பசாலா ஆர். நந்தகுமார் ஸ்தபதி மேற்பார்வையில் உருவாகி வருகிறது. ஒரே நேரத்தில் 1500 பக்தர்கள் மண்டபத்தில் அமர்ந்து தியான வழிபாடு செய்யலாம்.

மகா கும்பாபிஷேகம்: சேஷாத்ரி ஸ்வாமிகளின் உருவச் சிலை பிரதிஷ்டை மற்றும் மணிமண்டப கும்பாபிஷேகம் 2022 ஜனவரி 23 -இல், ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஆசியுடன், பல்வேறு மடாதிபதிகள், ஆதீன கர்த்தாக்கள் முன்னிலையில், வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது. பக்தர்கள் இத்திருப்பணியில் பங்கேற்கலாம். 

அமைவிடம்: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகாவில் உள்ள வழூர் கிராமம் காஞ்சிபுரத்திலிருந்து 40 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. 
தொடர்புக்கு: மஹாலக்ஷ்மி சுப்பிரமணியம் - 9840053289; பட்டாபிராமன் - 9962019172.

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com