பேரூர் பச்சை நாயகி அம்மன்

அம்பிகை ஈஸ்வர ஸ்வரூபமாக இருக்கிறாள்; அவளே ஈசனுக்கு சிஷ்யையாகவும் இருக்கிறாள். மனிதப் பிறவி எடுத்தவர்களின் அஞ்ஞானம் அகல குரு அவசியம் என்பதை இதன் மூலம் உணர்த்துகிறாள் தேவி.
பேரூர் பச்சை நாயகி அம்மன்
பேரூர் பச்சை நாயகி அம்மன்


"புந: ஸ்ரஷ்டும் தேவாந் த்ருஹிண ஹரி-ருத்ரா-நுபரதாந்
ரஜ: ஸத்வம் பிப்ரத் தம இதி - குணாநாம் த்ரய்மிவ' 
-செளந்தர்ய லஹரி 

அம்பிகை ஈஸ்வர ஸ்வரூபமாக இருக்கிறாள்; அவளே ஈசனுக்கு சிஷ்யையாகவும் இருக்கிறாள். மனிதப் பிறவி எடுத்தவர்களின் அஞ்ஞானம் அகல குரு அவசியம் என்பதை இதன் மூலம் உணர்த்துகிறாள் தேவி.

"கணவனும் மனைவியும் ஒன்று பட்டு உலகைக் காக்க வேண்டும்!' என்பதே இறை சக்தியின் தத்துவம். மனைவிக்கு குருவாக நின்று கணவனும், கணவனின் சிந்தையாக நின்று மனைவியும் செயல்பட வேண்டும் என்பதையே சிவசக்தி ரூபம் உணர்த்துகிறது.

தன் பக்தர்களின் துயர் தீர்க்க ஈசனும், அம்பிகையும் மானுட ரூபங்களில் வருகிறார்கள். யுகங்கள் மாறினாலும், மாறாத ஒன்று மனிதர்களின் உணவுத் தேவை. அதைத் தீர்ப்பது விவசாயம். உலகத்துக்கே உயிர் அளிக்கும் உன்னதத் தொழில். அதன் பெருமையை உணர்த்தவே ஈசனும் அம்பிகையும் விவசாயத் தம்பதிகளாக வந்தார்கள்.

ஒருமுறை பேரூர் ஈசனிடம் திருப்பணிக்காக பொருள் வேண்டி, சுந்தர மூர்த்தி சுவாமிகள் வந்தார். அப்போது ஈசன், அம்மையுடன் சேர்ந்து விவசாய வேடம் பூண்டு, வயலில் நாற்று நட்டுக் கொண்டிருந்தார். ஆலயத்தில் அம்மையப்பனைக் காணாமல் திகைத்த சுந்தரருக்கு, நந்தி பகவான் அவர்களை அடையாளம் காட்டினார்.

அப்போது அம்பிகை பச்சை நிற ஆடை அணிந்து, இந்திராணி, சரஸ்வதி, மகாலட்சுமியுடன் சேர்ந்து நடவுப் பாடல்களைப் பாடியபடி நாற்று நடுவதைப் பார்த்து, அவர்களைத் துதித்து நின்றார். முருகனும், விநாயகரும் குழந்தைகளாக வயலில் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

அப்பனையும், அன்னையையும் வணங்கிய சுந்தர மூர்த்தி சுவாமிகள், திருப்பணிக்காக பொருள் வேண்டி வந்திருப்பதைக் கூறினார். 

அப்போது ஈசன், ""மன்னன் சேரமான் உனது வருகைக்காக காத்திருக்கிறார். உனக்கு வேண்டிய பொன், பொருளை தருவார், பெற்றுக்கொள்!'' என்றார்.  இச்சம்பவம் நிகழ்ந்த தலமே பச்சை நாயகி அம்மன் எழுந்தருளி அருள் பாலிக்கும் பேரூர் திருத்தலமாகும்.

அம்பிகை நாற்று நட்ட நிகழ்வு ஓர் உற்சவமாக இன்றும் ஆனித் திருமஞ்சனத்துக்கு முதல் நாள் கொண்டாடப்படுகிறது. பத்துநாள் திருவிழாவில், இங்கிருந்து மண் எடுத்து வந்து தங்கள் வயலில் தூவினால் நல்ல மகசூல் கிடைக்கும் என்ற நம்பிக்கை இங்குள்ள விவசாயிகளிடம் நிலவுகிறது.

இங்குள்ள தல விருட்சம் சித்தேச மரம் என்ற பன்னீர் மரம். இது தவிர பிறவாப் புளி, இறவாப் பனை என்ற மரங்களும் பிரசித்தி பெற்றவை. இங்குள்ள புளிய மரத்தின் விதைகளை வேறு எங்கு போட்டாலும் முளைக்காது.  இப்பகுதியில் உள்ள மாட்டுச் சாணத்தில் எவ்வளவு நாளானாலும் புழு வராது. இங்கு இறப்பவர்களின் காதுகளில் ஈசனும், அம்பிகையுமே "நமசிவாய' மந்திரம் சொல்லி அழைத்துப் போகிறார்கள் என்பதும் ஐதீகம்.

விவசாயியாக வேடம் பூண்டு வந்ததால், மரகதவல்லி அம்பிகைக்கு பச்சை நாயகி என்று பெயர். இறைவன் பெயர் பட்டீஸ்வரர். கார்த்திகை மாத திங்கள்கிழமைகளில், விதை நெல், தானியத்துடன் பூஜித்து, நல்ல மகசூல் கிடைக்க பிரார்த்தனை செய்கிறார்கள். இங்கு சுந்தரருக்கும், சேரமானுக்கும் தனிச் சந்நிதிகள் உள்ளன. 

இக்கோயில் கரிகாற் சோழனால் கட்டப்பட்டது. முதலாம் ராஜராஜ சோழன் காலத்தில் அர்த்த மண்டபமும், மகா மண்டபமும் கட்டப்பட்டன. இக்கோயிலின் கனக சபை பதினேழாம் நூற்றாண்டில் அழகாத்திரி நாயக்கரால் கட்டப்பட்டது.

 ஆதி சங்கரர் எழுதிய பாஷ்யத்தில் இக்கோயில் பற்றிய சிறப்பு கூறப்பட்டுள்ளது. பச்சை நாயகி அம்மனை வணங்கினால் நம் பாவங்கள் அனைத்தும் தீரும். குறைவில்லாத செல்வத்தை அளித்து மங்கல வாழ்வு அருள்வாள். பேரூர் அரசியாகத் திகழும் அம்பிகை பக்தர்கள் விரும்பியதை எல்லாம் தருகிறாள்.

கச்சியப்ப முனிவர் இத்தலத்து அம்பிகையை மனமுருகிப் பாடியுள்ளார்.

 "கங்கை நதி சடைக்கரந்த கணவனார் உருக்கலந்த தனக்கே அல்லால் 
துங்க மணிக்கோடு இரண்டு ஆயிரம் படைத்தகரி எவர்க்கும் தூண்டல் முற்றாது 
 அங்கண் நெடும் புவனத்து என்று அமைந்தனள் போல் பாசமொடு - அங்குசம் கையேந்தும்
மங்கலம் மிக்கருள் பேரூர் மரகதவல்லியின் இருதாள் போற்றி!' என்று பாடித் துதிக்கிறார்.

இங்குள்ள கல்வெட்டுகளின் மூலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மக்களின் வாழ்க்கை முறைகளைப் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது.

இறைவனும், இறைவியும் விவசாயத்திற்கு அளித்த முக்கியத்துவத்தை பேரூர் தல வரலாறு மூலம் அறிய முடிகிறது. விவசாயத்தை உயிராக நினைக்கும் தன் பக்தர்களைக் கண்டு மனமகிழ்ந்து, அன்னை சகல  செüபாக்கியங்களையும் அருள்கிறாள் என்கிறார்கள் பக்தர்கள்.

பச்சை நாயகி அம்மன் தன் பக்தர்களின் வாழ்வில் மங்கலங்களை அருள்கிறாள். அவர்களின் பாவங்களை நீக்கி முக்தி என்னும் ஆனந்தத்தைத் தருகிறாள்.

அமைவிடம்: கோவையிலிருந்து சிறுவாணி செல்லும் வழியில் 8 கி.மீ. தொலைவில் உள்ளது பேரூர் பச்சைநாயகி அம்மன் திருத்தலம். 
(தொடரும்)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com