பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்

வினைகளின் நற்பயனையோ தீய பயனையோ, மறுபிறப்பில் நமது முயற்சி எதுவுமில்லாமலே விதி நம்மிடம் கொண்டு வந்து சேர்த்துவிடுகிறது.
சுவாமி கமலாத்மானந்தர்
சுவாமி கமலாத்மானந்தர்

வினைகளின் நற்பயனையோ தீய பயனையோ, மறுபிறப்பில் நமது முயற்சி எதுவுமில்லாமலே விதி நம்மிடம் கொண்டு வந்து சேர்த்துவிடுகிறது.
-பஞ்சதந்திரம்

இறந்துபோனவனிடம் உயிர் இருப்பதற்கு அடையாளமான உணர்ச்சி காணப்படுவதில்லை. அது போலவே அஞ்ஞானியிடம் ஆத்மா இருக்கும் அடையாளமே செயலில் காணப்படுவதில்லை.
-விவேகசூடாமணி

 பிரம்மத்திடம் ஒன்றுபட்ட யோகி ஒருவர் இருக்கிறார். அவர் தன் வீட்டில் இருந்தாலும், காட்டில் இருந்தாலும், நதிக்கரையில் இருந்தாலும் எல்லாவற்றிலும் இறைவனைக் காண்கிறார். அவர் பாலைவனத்தில் நீர் ஊற்றைக் கண்டவர் போன்று பெரிதும் உவகைக் கொள்கிறார்; ஒப்பற்ற இறைவனோடு ஒன்றுபடுகிறார்.
-ஸ்ரீ நாராயண குரு

 ""நான் உன்னுடையவன்'' என்று ஒருவன் ஒருமுறை என்னைச் சரணடைந்தால், எல்லாப் பிராணிகளிடத்திலிருந்தும் நான் அவனுக்கு அபயம் அளிப்பேன்!'' இது என் விரதம்.
-ஸ்ரீ ராமபிரான் (வால்மீகி ராமாயணம்)

 நதி, சமுத்திரத்தில் போய்க் கலந்துவிட்டால், அதுவும் சமுத்திரமாகவே ஆகிவிடுகிறது. அது போலவே பரமாத்மாவிடம் நிலைபெற்ற சித்தமும் அந்தப் பரம்பொருளாகவே ஆகிவிடுகிறது. பரமாத்மாவிடம் சென்ற மனம் மற்ற பொருள்களை நாடிச் செல்வதில்லை.
-ப்ரபோத சுதாகரம்

 சத்தியத்தை ஒரு கல்லுக்கும், பொய்யை ஒரு மண்பானைக்கும் ஒப்பிடலாம். மண்பானைமேல் கல்லை விட்டெறிந்தால் பானை உடைந்துவிடும். அது கல்லின் மேல் விழுந்தாலும் உடைந்துவிடும். எது எப்படி இருந்தாலும் கஷ்டத்திற்கு மண்பானைதான் உள்ளாகிறது.
-சீக்கிய மதம்

 பாலில் நெய் இருக்கிறது. எனினும், அது புறக்கண்களுக்குப் புலப்படுவதில்லை. பாலைப் பக்குவப்படுத்திக் கடைந்தால், உரிய நேரத்தில் வெண்ணெய் திரண்டு வரும். அதுபோல் மனம் பக்குவப்பட்டுவிட்டால் அதில் இறைவன் வந்து தங்குவான்.
- பட்டினத்தார் 

 சில சமயங்களில் சிங்கம் தன்னை அடைத்திருக்கும் கூண்டிலிருந்து தன் சுய பலத்தினால் வெளிவருகிறது. அது போன்று, சம்சாரக் கூண்டிலிருந்து தன் சுயபலத்தினால் ஒருவன் தப்பிக்க வேண்டும்.
-யோகவாசிஷ்டம்

 ஏழை விவசாயி ஒருவன், தன்னிடம் இருக்கும் சிறிய பரப்பளவு உள்ள நிலத்தை கண்ணும் கருத்துமாக இரவு பகலுமாகப் போற்றிப் பாதுகாத்து வருகிறான். அது போலவே, தசரதனும் தனது நாட்டை கண்ணும் கருத்துமாகப் போற்றிப் பாதுகாத்து வந்தான்.
-கம்ப ராமாயணம், பாலகாண்டம், அரசியற்படலம் -12

 உனக்கு முன்பிருந்த பழம்பெரும் ஆச்சார்யர்களின் கொள்கைகளில் நம்பிக்கை வைத்திரு. வெறும் போகத்துடன் திருப்தியடைந்து விடாதே. யோகத்திலும் மனதைச் செலுத்து.
-ஸ்ரீ ராமாநுஜர் (பிரபன்னாமிர்தம்)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com