சூரியனுக்கு அருளும் சுந்தரத் திருநாள்

மகரிஷி காஷ்யபரின் மனைவி அதிதி பூரண கர்ப்பவதி. ஒருநாள் கணவருக்கு உணவு  பரிமாறிக் கொண்டிருந்தபோது, யாரோ அழைக்கும் சப்தம் கேட்டு, யாரென்று பார்க்கச் சென்றாள்.  
சூரியனுக்கு அருளும் சுந்தரத் திருநாள்

மகரிஷி காஷ்யபரின் மனைவி அதிதி பூரண கர்ப்பவதி. ஒருநாள் கணவருக்கு உணவு  பரிமாறிக் கொண்டிருந்தபோது, யாரோ அழைக்கும் சப்தம் கேட்டு, யாரென்று பார்க்கச் சென்றாள்.  

வாசலில் நின்ற ஓர் அந்தணன் "பசிக்கிறது...  சாப்பிடக் கொடு''என்றான்.

அதிதியும் ""சரி... கொண்டு வருகிறேன்'' என்று கூறினாள். ஆனால், கணவர் உணவு அருந்திய பிறகு, அந்த அந்தணனுக்கு சாப்பாடு கொண்டு வந்ததால்,  அந்தணன் ஆத்திரமடைந்தான். 


"தாமதமாய் வந்து என்னை உதாசீனம் செய்ததால், உன் வயிற்றில் வளரும் குழந்தை இறக்கும்!'' என்று சாபமிட்டான்.

அதிர்ச்சியுற்ற அதிதி, அந்தணனின் சாபம் குறித்து காஷ்யபரிடம் தெரிவித்தாள். அதற்கு காஷ்யபர், "அமிர்த உலகில் இருந்து அழிவில்லாத ஒரு மகன் நமக்குப் பிறப்பான்!'' எனக் கூறினார். 

அதன்படியே ஒளிமிக்க சூரியன் மகனாக  அவதரித்தான். சூரியன்  ஏழு குதிரைகள் பூட்டிய தேரில்  உலகைச் சுற்றி வருவதாலும், வாரத்தின் ஏழு நாள்களுடனும் தொடர்புடைவனான சூரியனுக்கு ரத சப்தமி விரதம் பின்பற்றப்படுகிறது. 

தஞ்சை மாவட்டம் செந்தலை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், கடவுளர்களும், ஜம்புக மகரிஷி போன்ற முனிவர்களும், விலங்குகளும் கூட வணங்கி பேறு பெற்ற சதுர் யுகம் கண்ட தலம். 

கலியுகத்தில் வானில் சென்று கொண்டிருந்த தேவகன்னிகை சந்திரலேகா ஒருநாள் அடர்ந்த செந்தலை வனத்தில் நுழைந்தாள்.  

இளமைத் துடுக்குமிக்க அவள், அங்கு தவம் புரிந்து கொண்டிருந்த முனிவரை இகழ்ந்து பேச, அம்முனிவர் "நீ மானிட மங்கையாய்ப் பிறப்பாய்' என்று சாபமிட்டார்.   

சந்திரலேகா மனம் வருந்தி சாப விமோசனம் தர வேண்டினாள். "சுந்தரனாம் சோமன் மேனி தீண்டும் போது, முன்வினை நினைவுகள் தோன்றி விமோசனம் பெறுவாய்!'  என அருளினார்.

அதன்படி மானிட மங்கையாய்ப் பிறந்தவள், செந்தலை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் இறைவனை முப்போதும் வணங்கி வந்தாள்.

தினமும் சந்திர தீர்த்தம் என்னும் குடமுருட்டியில் நீராடுவதும், வாகை மரத்தடி சுந்தரேஸ்வரரை வணங்குவதும், சோமாஸ்கந்த மூர்த்தியாய் தேவியுடன் அமர்ந்து இருக்கும் திருக்கோலத்தை வணங்குவதும் அவளது வழக்கத்தில் இருந்தது. 

ஒரு தை மாதம் வளர்பிறை சஷ்டியன்று இறைவனை வணங்க வந்தவளுக்கு, சோமாஸ்கந்தமூர்த்தியின்பால்  ஈர்ப்பு  அதிகரித்து, சுந்தர சோமனைத் தொட்டு வணங்க, சாப விமோசனம் அடைந்தாள்.   

முன்ஜென்ம நினைவுகள் திரண்டு வர உண்மை உணர்ந்தாள். அவள் தேவலோகம் செல்லும் முன், இறைவனிடம்  "நான் உன்னைத் தொட்டு வணங்கியதால் இடர் நீங்கிய என் வரலாறு  இங்கு உணரப்பட வேண்டும்!'' என்றாள்.    

சந்திரலேகாவின் வேண்டுதலின்படி, ஒவ்வொரு ரத சப்தமி தினத்திற்கு முந்தைய இரவில் சோமாஸ்கந்தர் அபிஷேக மண்டபத்திற்கு  எழுந்தருளுவார். இரவு சந்திரன் நன்கு ஒளிரும் போது அபிஷேகம் நடைபெறும்.  அப்பொழுது, ஒருசில நிமிடங்கள் சோமாஸ்கந்தரின் விக்கிரகத்தின் தலைப்பகுதி மட்டும் "கருமை'யாகி தேவகன்னிகை சந்திரலேகா தொட்ட கைவிரலின் ரேகைகள் வரிகளாகத் தோன்றி மறையும் அற்புதம் நடைபெறும்.

ஆண்டு தோறும் ரத சப்தமி அன்று சூரியன் உதிக்கும் வேளையில் கோபுர வாயிலில் சோமாஸ்கந்தர் காட்சி தந்து, குடமுருட்டி சென்று, தீர்த்தவாரி நடந்து, பின் வீதிவுலாவுடன் திருக்கோயிலுக்கு வருவது, சந்திரலேகாவின் சாபம் தீர்த்த வரலாறாகக் கருதப்படுகிறது. 

காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோயில், செய்யாறு எனும் திருவோத்தூர் வேதபுரீஸ்வரர் கோயில், நெல்லை நீலமணி நாதர் எனப்படும் செüந்தரவல்லித் தாயார் உடனாய கரியமாணிக்கப் பெருமாள் கோயில், திருநீர்மலை ரங்கநாதர் கோயில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் உள்ளிட்ட பல கோயில்களில், தை  அமாவாசையில் கொடியேற்றி சரியாக 7}ஆம் நாள் ரத சப்தமி பிரம்மோற்சவம் கொண்டாடப்படுகிறது.

ரத சப்தமி நாளில் செய்யப்படும் தர்மத்திற்கு பலமடங்கு புண்ணியம் உண்டு. "இந்நாளில் துவங்குபவை துலங்கும்!' என்கின்றன புராணங்கள்.   

இன்று ரத சப்தமி (பிப்ரவரி 19-ஆம் நாள்), புதுப்பயணம் துவங்கும் சூரியனுக்கு தெய்வங்கள் அருளும் இந்நாளில்  நல்லவை செய்ய நலமே விளையும்..! 

-இரா.இரகுநாதன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com