பொருநை போற்றுதும் - 132

ரெவின்யூ போர்ட் தலைவராக இருந்த எட்வர்ட் சாண்டர்ஸýக்கு 1798 செப்டம்பர் 21-ஆம் நாள் எழுதிய கடிதத்தில், ஒரு சில விஷயங்களை மாற்றிக் கூறினாலும்..
பொருநை போற்றுதும் - 132

ரெவின்யூ போர்ட் தலைவராக இருந்த எட்வர்ட் சாண்டர்ஸýக்கு 1798 செப்டம்பர் 21-ஆம் நாள் எழுதிய கடிதத்தில், ஒரு சில விஷயங்களை மாற்றிக் கூறினாலும், கட்டபொம்மனைத் தாம் அலைக்கழித்ததை ஜாக்சன் ஓரளவுக்கு ஒத்துக்கொள்கிறார். 

தம்முடைய கச்சேரியில் (சபை விசாரணை) செப்டம்பர் 5-ஆம் தேதிக்குள் சந்திக்கும்படி தகவல் அனுப்பியதாகவும், தகவல் அனுப்பிய மூன்றாம் நாள், தாம் ராமநாதபுரத்தை விட்டுப் புறப்பட்டதாகவும், ஆகஸ்ட் 27}ஆம் நாள் தாம் எங்கோ இருக்கும்போது அருகில் வந்துவிட்ட பாஞ்சாலங்குறிச்சிப் பாளையத்தார் அடுத்த நாள் காலையில் தம்மைச் சந்திக்க விழைந்ததாகவும், ராமநாதபுரத்தைத் தவிர வேறெங்கும் சந்திக்க இயலாது எனத் தெரிவித்து விட்டதாகவும் எழுதுகிறார். 

ராமநாதபுரத்தில் என்னதான் நடந்தது?

1798 செப்டம்பர் 19}ஆம் தேதி மாலை, கட்டபொம்மன் ராமநாதபுரத்தை அடைந்தார். அடுத்த நாள் காலை சந்திப்பு (இந்த நாள் 20}ஆம் தேதியன்று; 10}ஆம் தேதி என்பதாகவும் சில ஆசிரியர்கள் கூறுகின்றனர்). ராமலிங்க விலாசம் மாளிகையின் மேல்மாடியில் இருந்த ஜாக்சன், தம்பிகள், நண்பர்கள், வீரர்கள் ஆகியோரோடு வந்த கட்டபொம்மனைத் தனியாக மேல்மாடிக்கு வரும்படிச் செய்தி அனுப்பினார். 

கடிதங்கள் பல வந்ததைக் கட்டபொம்மன் ஒத்துக்கொண்டார். அனைத்துக் கடிதங்களையும் அலுவலர் ஒருவரைக் கொண்டு மீண்டும் படிக்கச் செய்தார் ஜாக்சன். கட்டபொம்மன் பொறுமை இழக்கவில்லை. குடிபடைகளைக் கொடுமை படுத்துவதாக ஜாக்சன் குற்றம் கண்டபோதும் கட்டபொம்மன் பொறுமை இழக்கவில்லை. அனைத்திற்கும் பணிவாகவே தக்க விடையிறுத்தார்; கிஸ்தியைப் பற்றிப் பேச்சு வந்தபோது, அது வழக்கமில்லை என்று மறுத்தார். ராமநாதபுரத்திலிருந்து வேறெங்கும் செல்லக்கூடாது என்று ஜாக்சன் கூறிய அதே தருணத்தில், மறைவாக நின்றிருந்த பிரிட்டிஷ் வீரர்கள் கட்டபொம்மனைச் சிறைபிடிக்க ஓடிவந்தனர். 

இந்த நிலையில் சண்டை மூண்டது. ராமலிங்க விலாசத்தின் வாயிலை நோக்கிக் கட்டபொம்மன் நகர, உபதளபதி க்ளார்க் என்பான் இடைபுகுந்து மறித்தான். கட்டபொம்மனின் உடைவாள் உடனே பாய, க்ளார்க்  அங்கேயே பலியானான். 

தொடர்ந்த அமளியில் ஊமைத்துரையும் வெள்ளையத்தேவனும் மிகுந்த வீரத்தோடு போரிட, இரண்டு பக்கமும் சேதங்கள் நேர்ந்திட, கட்டபொம்மனும் பிறரும் அங்கிருந்து வெளியேறினர். வெகு தூரம் வந்த பின்தான், தானாபதிப் பிள்ளை மட்டும் உள்ளே தங்கிப் போனார் என்பதை உணர்ந்தனர். 

தம்முடைய செப்டம்பர்  21}ஆம் நாள் கடிதத்தில், சில பல தகவல்களை மாற்றியுரைக்கிறார் ஜாக்சன். விசாரணையின் இடையில் கட்டபொம்மன் அவகாசம் கேட்டதாகவும், அதனைக் கொடுத்தபோது 150 கெஜங்கள் எட்டத்திலிருந்த வாயிலை நோக்கி ஓடியதாகவும், அப்போதும் உபதளபதி க்ளார்க் அவரை அழைத்ததாகவும், கட்டபொம்மனுக்குச் சேதம் வரக்கூடாது என்று கூறியதாகவும், ஆனால் எதையும் காதில் வாங்கிக்கொள்ளாத கட்டபொம்மன் உடைவாளால் க்ளார்க்கைக் குத்தி விட்டதாகவும் எழுதுகிறார்.

பாளையக்காரனின் தம்பியும் (ஊமைப் பையன் என்று குறிக்கிறார்) தப்பி விட்டதாகவும், மேலாளர் மட்டும் சிக்கிக்கொண்டார் என்றும், இந்தப்பாளையக்காரனைப்பிடிப்பதற்குத் தக்க படையைக் கம்பெனி அனுப்ப வேண்டுமென்றும், "இவனுடைய தலைக்கு 5,000 ரூபாய் பரிசு அறிவிக்கலாம்' என்றும் மேலும் குறிக்கிறார். 

பிற்காலங்களில், அதாவது 1807}08 வாக்கில், ஜாக்சன் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. நாளிதழில்கூட இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகள் பகிரங்கமாகக் கூறப்பட்டதாகத் தெரிகிறது. தன் மீது விசாரணை வந்த நிலையில்தான், "மெமாயிர் ஆஃப் தி பப்ளிக் காண்டக்ட் அண்ட் செர்விசஸ் ஆஃப் வில்லியம் காலின்ஸ் ஜாக்சன்' என்னும் தலைப்பிட்டு, தம்முடைய எண்ணங்களைப் பதிவிட்டு அறிக்கையை சமர்ப்பிக்கிறார் ஜாக்சன். 

இந்த அறிக்கையில், பாளையக்காரர்கள் மற்றும் கட்டபொம்மன் தொடர்பாகத் தாம் எழுதிய கடிதங்களையும் வெளியிடுகிறார். எனினும், முதலிலிருந்தே கட்டபொம்மன் மீது ஒரு வெறுப்பும், கட்டபொம்மனை மசிய வைத்து விட்டால் தம்முடைய "பேஷ் கஷ்' பொறுப்புக்கு முழுமை கிட்டிவிடும் என்னும் மதர்ப்பும் ஜாக்சனுக்கு இருந்ததை இந்தப் பதிவுகள் தெளிவாகவே காட்டுகின்றன. 

கட்டபொம்மனுக்கும் கிழக்கிந்தியக் கம்பெனிக்கும் இடையில் நிகழ்ந்தது நிலப்பிரபுத்துவப் போராட்டம்; அதனைச் சுதந்திரப் போராட்டம் என்று அடையாளப்படுத்த முடியாது என்றும், ஒருசில நேரங்களில் கம்பெனியாருடன் இணக்கமாகப் போகும் எண்ணம் கட்டபொம்மனுக்கு இருந்திருக்கிறது என்றும் வரலாற்றாசிரியர்கள் சிலர் (இங்கேயும் அங்கேயுமாகப் பதிவிடுபவர்களும்கூட கருதுகின்றனர்.

சேர்மகால் உள்ளிட்ட வளம் கொழித்த பகுதிகளில் வரி வசூலிக்கும் உரிமை யாருக்கு என்பதில்தான் கம்பெனியாருக்கும் கட்டபொம்மனுக்கும் தகராறு; இதில் நாட்டுச் சுதந்திரம் எங்கிருக்கிறது என்றும் கூடச் சிலர் வினாவெழுப்புகின்றனர். 

சொல்லப்போனால், பாளையக்காரர்கள் மீது கம்பெனியார் வைத்த பிரதான குற்றச்சாட்டே இதுதான் }குடிபடைகளிடம் நெல்லும் தானியமும் வரியும் பெற்று, அவர்களைத் துன்பப்படுத்துகின்றனர். வரிவசூலிப்புப் பிரச்னைகளில்தான் பாளையங்களுக்கும் கம்பெனிக்கும் முரண்பாடுகள் எழுந்தன என்பது உண்மை. 

ஆனால், நவாப்பின் பிரதிநிதியாக வரி வசூலிப்புக்குள் புகுந்த கம்பெனி, பின்னர் தானே முதலாளியாக மாறிக்கொண்டது என்பதையும், இந்த மண்ணிற்குத் தன்னைச் சொந்தக்காரனாகப் பிரகடனம் செய்துகொண்டது என்பதையும் எண்ணிப் பார்க்கவேண்டும்.  

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com