வலையில் சிக்கிய மீன்கள்!

இல்லாமை மிகவும் கொடியது. இல்லாமையால் மனிதன் ஏழையாகி வறுமை, பசி, பட்டினி, நோய்வாய்ப்பட்டு வேதனைப்படுகிறான். இல்லாமை எனும் தீமைக்குக் காரணம் சாத்தான்.
வலையில் சிக்கிய மீன்கள்!


இல்லாமை மிகவும் கொடியது. இல்லாமையால் மனிதன் ஏழையாகி வறுமை, பசி, பட்டினி, நோய்வாய்ப்பட்டு வேதனைப்படுகிறான். இல்லாமை எனும் தீமைக்குக் காரணம் சாத்தான். இல்லாமையை இருக்கிறதாக ஆக்கிய ஒரு நிகழ்ச்சி வேதாகமத்தில் உண்டு. 

இயேசுவின் தெய்வ வார்த்தைகள் மக்களை அவர் பின் தொடர்ந்து செல்ல வைத்தது. கன்னேசரத்து கடற்கரைக்கு இயேசு வந்த போது, அவருடன் மக்கள் கூட்டம் பின் தொடர்ந்து வந்தது.  இயேசு மக்களுடன்  உரையாட இடம் தேடினார்.  

அப்போது கடலில் இரவெல்லாம் மீன் பிடிக்கச் சென்ற பேதுரு, அந்திரேயா, யோவான், யாக்கோப்பு உள்ளிட்டோர் தம் படகுகளை கரைகளில் தள்ளி, தம் வலைகளை எடுத்து அலசிக் கொண்டிருந்தார்கள்.  
அவர்கள் நான்கு பேரும் அப்பகுதியில் வாழும் பரம்பரை மீனவர்கள். நால்வரும் அண்ணன் தம்பியாய், நல்ல நண்பர்களாகவும் இருந்தனர். 

அன்றைய நாளின் கொடிய நிகழ்ச்சி என்னவெனில், வழக்கத்துப்படி இரவெல்லாம் வலை வீசியும் ஒரு மீன் கூட கிடைக்கவில்லை. அவர்கள் இறுக்கமான மனதுடன் இருந்தனர்.  
கடற்கரையில் மக்கள் கூட்டத்துடன் வந்த இயேசு, பேதுருவின் படகையே போதிக்கும் இடமாகத் தேர்வு செய்தார். 

பேதுருவின் படகில் ஏறி நின்று மக்களுடன் பேசினார். அவர் பேசி முடித்தவுடன் பேதுருவின் நிலையை அறிந்து கொண்டார்.  "ஒரு மீனும் அகப்படவில்லையா? ஆழத்துக்கு மீண்டும் படகைத் தள்ளி வலையைப் போடு!'' என்றார். 

பேதுருவோ "தேவனே..! இரவெல்லாம் மீன் பிடிக்க வலையை வீசினோம்.  ஒரு மீனும் சிக்கவில்லை. உம் வார்த்தைப்படியே மீண்டும் வலையைப் போடுகிறேன்!'' என்று சொல்லி, படகை ஆழத்துக்குத் தள்ளி வலையை வீசினார். 

என்ன ஆச்சரியம்..! வலையில் திரளான மீன்கள் பிடிபட்டன. வலையை இழுக்க முடியவில்லை. படகை கரைக்குத் தள்ளி வலையை இழுத்தனர். அதில் பெரிய பெரிய மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை. மீன்களைத் தம் படகுகளில் அடுக்க உதவும்படி நண்பர்களை சைகையில் அழைத்தனர். (லூக்கா 5.1-5)

பேதுரு தம் வாழ்வில் இவ்வாறு திரளான மீன்களைப் பிடித்ததே இல்லை. பேதுரு, இல்லாமையை இருக்கிறதாக்கிய இயேசுவின் பாதத்தில் வீழ்ந்து பணிந்தான். பின்னர், பேதுருவும் அவர் நண்பர்களும் இயேசுவின் பின்னே அவரின் சீடர்களாகச் சென்றனர். நம் வாழ்வு குறை நிறைந்தது. நிறை வேண்டுமானால் தெய்வத்திடம் சொல்லுவோம். நம் வாழ்வின் குறைவெல்லாம் தீர்ந்து நம் பாத்திரம் நிரம்பி வழியும். என்றும் இறையருள் நம்மோடு!

-முனைவர் தே. பால் பிரேம்குமார்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com