தாய்க்குப் பணிவிடை பிள்ளையின் கடமை

இவ்வுலகில் பெண்தான் வயிற்றில் குழந்தையை பத்து மாதங்கள் சுமந்து, சிரமத்துடன் பெற்று, வளர்த்து ஆளாக்குகிறாள்.
தாய்க்குப் பணிவிடை பிள்ளையின் கடமை

இவ்வுலகில் பெண்தான் வயிற்றில் குழந்தையை பத்து மாதங்கள் சுமந்து, சிரமத்துடன் பெற்று, வளர்த்து ஆளாக்குகிறாள்.  இப்படிப்பட்ட அன்னைக்கு விருப்பமுடன் பணிவிடை செய்ய வேண்டியது ஒவ்வொரு பிள்ளைகளின் கடமையாகும்.

"தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது' என்கிற நபி மொழியை ஒவ்வொரு பிள்ளைகளும் உணர்ந்து அதன்படி நடக்க வேண்டும். பிள்ளைகள் தனது தாய்க்கு எவ்வாறு பணிவிடை செய்தனர் என்பதை இருவரது வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவங்களின் மூலம் காண்போம்.

இறைநேசச் செல்வர் "பாஎஸீது பிஸ்தாமி' சிறுவராக இருந்தபோது, உடல்நலமின்றி இருந்த அவரது தாயார் ஓர் நாள் இரவு மகனிடம் குடிக்கத் தண்ணீர் கேட்டார்.

இறைநேசச் செல்வர் தனது இல்லத்தில் தண்ணீரைத் தேடினார்.  ஒரு சொட்டு தண்ணீர்கூட வீட்டில் இல்லை.  எனவே, வெகுதூரம் சென்று, ஒரு கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதற்குள் தாயார் ஆழ்ந்து உறங்கி விட்டார்.  

உடல்நலம் குன்றியிருக்கும் தாயாரை எழுப்பாது, தண்ணீர் கோப்பையை கையில் ஏந்தியபடி நின்று கொண்டிருந்தார். தாயார் "தஹஜ்ஜத்' (நள்ளிரவில் வணங்குதல்) தொழும் வழக்கமுடையவர். அவ்வாறு தொழுவதற்கு எழும்போது, தனது மகன் கையில் தண்ணீர் கோப்பையுடன் நிற்பதைப் பார்த்த போதுதான், அவர்களுக்கு தண்ணீர் கேட்டது நினைவு வருகிறது.

இதேபோன்ற நிகழ்வு (மர்ஹதிம்) காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் சாஹிப் அவர்களது வாழ்விலும் நிகழ்ந்துள்ளது.  காயிதே மில்லத் அவர்களுக்கு, அப்பொழுது வயது ஐம்பதுக்கும் மேல் இருக்கலாம்.  
ஒருநாள் இரவு உணவு உண்டபின் தாயார் மகனிடம், ""தம்பி!  கொஞ்சம் எனது காலைப் பிடித்து விடுப்பா!'' என்றனர்.

மகனார் அவர்கள், தனது தாயாரின் காலைப் பிடித்து விடுகிறார்கள்.  தனது பிள்ளை பிடித்துவிட்ட சுகத்தில் உறங்கியும் விட்டார்கள் அன்னை.  தாயார் உறங்கி விட்டார்களே என்று, தானும் உறங்காது, தாயாரின் காலைத் தொடர்ந்து பிடித்துக் கொண்டே இருந்தார் காயிதே மில்லத் அவர்கள்.

தாயார், "தஹஜ்ஜத்' தொழ எழுந்தார்.  மகனைப் பார்த்து "நீ இன்னும் தொழவில்லையா? தொழுதுவிட்டு உறங்கு!'' என்றார். மேற்கண்ட இரண்டு உண்மைச் சம்பவங்களைப் படிக்கும் பிள்ளைகள் தாயார் சொல் கேட்டு நடப்பார்கள், நடக்க வேண்டும்.  தாயார் நம்மை சிரமத்துடன் பெற்று வளர்த்து, ஆளாக்க எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்திருப்பார்கள் என்பதை எண்ணிப்பாருங்கள்.

நாம் என்னதான் அவர்களுக்குப் பணிவிடை செய்தாலும், அவர்கள் நமக்காகப் பட்டபாட்டுக்கு ஈடு இணையே கிடையாது எனலாம். "அல்லாஹ்வுக்கு பணிந்து நடப்பதும், நம்மைப் பெற்று வளர்த்து ஆளாக்கிய அன்னைக்குப் பணிவிடை செய்வதும் ஒரே பலனை அளிக்க வல்லது' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

- ஹாஜி முகம்மது அன்வர் தீன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com