சிங்கிரிகோணாவில் தேவியருடன் நின்றருளும் நரசிம்மர்!

திருமாலின் தசாவதாரங்களில் ஒன்றான நரசிம்மாவதாரம் தனிச்சிறப்பு பெற்றது.
சிங்கிரிகோணாவில் தேவியருடன் நின்றருளும் நரசிம்மர்!

திருமாலின் தசாவதாரங்களில் ஒன்றான நரசிம்மாவதாரம் தனிச்சிறப்பு பெற்றது. எல்லா அவதாரங்களிலும் ஏற்றமுடைத்தது என வேத, உபநிஷத்துகளிலும், இதிகாச, புராணங்களிலும் உயர்ந்து கூறப்பட்டுள்ளது. ஸ்ரீ நரசிம்மரின் திருக்கோலங்கள் உள்ள திருத்தலங்கள் தமிழகம், ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் மட்டுமில்லாமல் வட இந்தியாவிலும் நிறைய உண்டு. அயல் நாடுகளிலும் காணப்படுகின்றன. 

பல பெருமாள் ஆலயங்களில் இவருக்குத் தனிச்சந்நிதி உண்டு. பெரும்பாலும் ஸ்ரீ லட்சுமி நரசிம்மராக அமர்ந்த கோலத்தில் அருள்புரிவார். வெகு சில திருத்தலங்களில்தான் நின்ற கோலத்தில் அருள்பாலிப்பார். அதிலும் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக நின்ற கோலத்தில் சேவை சாதித்து வரும் "சாந்த ரூப நரசிம்மரை' தமிழக எல்லையில், சித்தூர் மாவட்டத்தில் உள்ள சிங்கிரிகோணாவில் மட்டுமே தரிசிக்கலாம். கோணம் என்பது இரு மலைகள் கூடுகின்ற பிரதேசம். அத்தகைய மலைகளின் நடுவே அருவிச்சுனையுடன் கூடிய இயற்கை எழிலுடன் ஆலயம் அமைந்துள்ளது.

தல வரலாறு: கிருதயுகத்தில் ஹிரண்யகசிபுவை வதம் செய்த நரசிம்மர் உக்கிரம் தணியாமல், அஹோபிலத்திலிருந்து புறப்பட்டு பல மலைகளைக் கடந்து, இந்த வனத்துக்கு வந்தார். இப்பிரதேசம் அவரைக் கவர்ந்ததால், ஸ்ரீதேவி, பூதேவி உடனமைய, சாந்த ஸ்வரூபியாக இத்தலத்தில் எழுந்தருளினார்.  

இதனிடையே, ஸ்ரீநிவாஸனாக அவதாரம் எடுத்த திருமால், ஆகாசராஜாவின் மகளாக அவதரித்த பத்மாவதி தாயாரைத் தேடி, ஆகாசராஜாவின் ஆட்சிக்கு உட்பட்ட இந்த எல்லைக்கு வந்தார். அச்சமயம், அவருக்கு ஏற்பட்ட இன்னல்கள், சங்கடங்களை நீக்கி, ஸ்ரீநிவாஸன்}பத்மாவதி திருமணத்தை நரசிம்மர் நடத்தி வைத்ததாகவும் கூறப்படுகிறது. 

தற்போதுள்ள ஆலயம், கி.பி.16}ஆம் நூற்றாண்டில் நாராயணவனத்தை ஆண்ட மன்னர்களால் நிறுவப்பட்டிருக்கலாம் என்றும், இக்கோயிலின் நிர்வாகம் ஸ்ரீகிருஷ்ணதேவராயரின் மந்திரியான திம்மரசு எனும் ராயர் அப்பாச்சியிடம் இருந்ததாகவும் சரித்திரச் சான்றுகள் பகர்கின்றன.  

மூலமூர்த்தியின் சிறப்பு: கருவறையில் ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி சுமார் ஐந்தரை அடி உயரத்தில் நின்ற கோலத்தில் சங்கு சக்ரதாரியாய், வரத அபய ஹஸ்தங்களுடன், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் சாந்த முகத்துடன் காட்சி தருகிறார். அதியற்புதக் கோலம், திரும்பத் திரும்பப் பார்க்கத் தூண்டும் ரூபலாவண்யம். செஞ்சுலட்சுமி தாயாரை, தனி சந்நிதியில் நின்ற கோலத்தில் தரிசிக்கலாம். காட்டில் வசித்து வந்த இந்தப் பிராட்டியை நரசிம்மர் திருமணம் செய்து கொண்டதாகவும் கர்ணபரம்பரையாக கூறப்பட்டு வருகிறது.

இதர சந்நிதிகள்: மூலவர் அருகிலேயே யோக நரசிம்மர், ஜெய விஜயர்கள், பக்த ஆஞ்சநேயர், அஞ்சலி ஹஸ்த கருடாழ்வார் போன்ற தெய்வ மூர்த்தங்களையும், ஸ்ரீநரசிம்ம ரூபத்துடனே அமைந்துள்ள உற்சவ மூர்த்தியையும், ஆலயம் நுழையும் முன் பழைமையான பாம்பு புற்றையும் தரிசிக்கலாம். ஸ்ரீ நரசிம்மர் சர்ப்ப ரூபமாய் இப்புற்றில் வீற்றிருந்து அருள்வதாக பக்தர்களிடையே ஒரு நம்பிக்கை நிலவுகிறது.
புஷ்கரம்: ஆலயத்திற்கு எதிர்புறம் அருவிச்சுனைகளில் இருந்து கொட்டும் நீர்  "பாலாதீர்த்தம்' என்று அழைக்கப்படும் தீர்த்தக்குளமாக உள்ளது. 

உற்சவங்கள்: மூலவருக்குத் தினசரி திருமஞ்சனம் நடைபெறுவது சிறப்பு. பிரதி சுவாதி நட்சத்திரத்தன்று சுதர்சன நரசிம்மயாகம் நடைபெறுகிறது. அன்று பக்தர்கள் பெருமளவில் கூடுவார்கள். ஆண்டு தோறும் நரசிம்ம ஜயந்தி உற்சவம் விமரிசையாக நடைபெறும்.

ஆலய நிர்வாகம்: ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி ஆலய டிரஸ்ட் என்ற அமைப்பின் மூலம் பரம்பரை அறங்காவலர் குடும்பத்தினரால் சிறப்பாக நடத்தப்படுகிறது. பக்தர்களுக்காக நாள் முழுவதும் அன்னதானம் செய்யப்படுகிறது. "நாளை என்பதே நரசிம்மரிடம் கிடையாது' என்ற சொல்வழக்கிற்கு ஏற்ப தங்கள் வேண்டுதல்கள் உடனே பலன் அடைவதை இவ்வாலயத்திற்கு வரும் பக்தர்கள் அனுபவ பூர்வமாக கூறுகின்றனர். புத்தாண்டில் நோய்த் தொற்றில்லா நல்வாழ்வையருள ஸ்ரீசாந்த ரூப நரசிம்மரை பிரார்த்தனை செய்வோம்!

இருப்பிடம்: சிங்கிரிகோணா ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், நாகிலேறு வட்டம், நாராயண மண்டலத்தில், நாராயண வனம் என்ற பகுதியிலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது. சென்னையிலிருந்து செல்பவர்கள் திருவள்ளூர், ஊத்துக்கோட்டை வழியாகவோ அல்லது பெரியபாளையம் வழியாகவோ, தமிழக}ஆந்திர எல்லையில் சுருட்டப்பள்ளி}நாகலாபுரம் சென்று அங்கிருந்து சிங்கிரிகோணாவை அடையலாம்.

தகவல் தொடர்புக்கு: பி.பாஸ்கர் பாபு (சிங்கிரி கோணா) - 7207577287 /  9885296287. 
வி.ஆர்.கண்ணன் (சென்னை) } 9841023450. 

-எஸ்.வெங்கட்ராமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com