அறிஞர்கள் வியந்த ஞானக்குழந்தை!

வேதாகமத்தில் இயேசுவின் இளமைப் பருவத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி குறிப்பிடப்பட்டுள்ளது.
அறிஞர்கள் வியந்த ஞானக்குழந்தை!

வேதாகமத்தில் இயேசுவின் இளமைப் பருவத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போது ஒரேயொரு தேவாலயம் ஜெருசலேம் நகரில் மட்டுமே இருந்தது. நாசரேத்தில் உள்ள மக்கள் ஆண்டு தோறும் ஜெருசலேம் ஆலயத்துக்கு சென்று "பஸ்கா' எனப்படும் பண்டிகையைக் கொண்டாடி விட்டு வருவது வழக்கம். 

இயேசுவுக்கு பன்னிரண்டு வயது இருக்கும் பொழுது, அவருடைய தாய் தகப்பன் இயேசுவை அழைத்துக்கொண்டு நடைப்பயணமாக ஜெருசலேம் சென்றனர். 

இப்பண்டிகையைக் கொண்டாட மக்கள் குடும்பம் குடும்பமாய்ச் செல்வார்கள். போகும் வழியில் தோத்திரப் பாடல்களைப் பாடிக் கொண்டே செல்வார்கள். பொதுவாக இப்பாடல்கள் 100 ஆண்டுகளுக்கும் மேலாக எகிப்தில் அடிமைகளாக வாழ்ந்த தங்கள் முன்னோர்களை இறைவன் மீட்டு, அவர்களுக்கு "கானான்' என்னும் தேசத்தை அளித்துக் காத்த வரலாற்றை நினைவூட்டுவதாக அமைந்திருக்கும். பெரியவர்கள், இளைஞர்கள், குழந்தைகள் எல்லோரும் தத்தம் வயதுக்கு ஏற்றபடி ஒவ்வொரு குழுவாக பாடிக் கொண்டு வருவார்கள். அது ஓர் இனிமையான பண்டிகை. ஜெருசலேம் நகரில் பகலிரவு முழுவதும் தங்கியிருந்து, பண்டிகையைக் கொண்டாடி விட்டு, மறுநாள் காலையில் ஊருக்குத் திரும்புவார்கள். 

அதன்படி இயேசு குடும்பமும் பஸ்கா பண்டிகைக்கு சென்று, மிக மகிழ்ச்சியாக கொண்டாடி விட்டு, மறுநாள் தொழுகையும் நிறைவுற்ற பின்னர், அனைவரும் ஊருக்குப் புறப்பட்டனர். 

தாய் மரியாளும் தந்தை யோசேப்பும் தங்கள் மகன் இயேசு குழந்தைகளின் குழுவோடு வந்து கொண்டிருக்கிறார் என்று நினைத்து முன்னால் சென்று கொண்டிருந்தனர். 

வழியில் ஓரிடத்தில் மரியாளும் யோசேப்பும் நின்று இயேசுவைத் தேடினர். குழந்தைகளின் குழுவில் அவர் காணப்படவில்லை. 

கலக்கமுற்று அங்கேயே நின்று உறவினர்கள் எல்லோரிடமும் விசாரித்தனர், "யாரும் பார்க்கவில்லை'; "தெரியவில்லை' என்றே பதில் அளித்தனர். 

தொடர்ந்து மூன்று நாள்கள் தேடியும் சரியான தகவல் கிடைக்கவில்லை. எனவே தாயும் தந்தையும் திரும்பவும் ஜெருசலேம் நகருக்கு சென்று தேடினர். அங்கும் கிடைக்காததால் தேவாலயம் சென்று முழங்கால் மண்டியிட்டு ஜெபித்தனர். 

அப்போது, ஆலயத்தின் உள்ளிருந்து இயேசு அதிகாரத்துடனும் அறிவுடனும் பேசும் சப்தம் கேட்டது. ஆலயத்திலிருந்த ஆசாரியர்கள், வேத அறிஞர்கள் ஆகியோரிடம் இயேசு விவாதித்துக் கொண்டிருந்தார். 
இயேசுவின் பேச்சு அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. அவரின் தேவ ஞானம் அறிஞர்களுக்குப் புதுமையாய் இருந்தது. அவர்கள் இயேசுவைப் பார்த்து வியந்து கொண்டிருந்தார்கள் (லூக்கா 2: 41-52). 
மரியாள் ஓடிப்போய் இயேசுவை அணைத்துக் கொண்டார். ""மகனே! மூன்று நாள்களாகத் தேடினோமே... எங்கிருந்தாய்? ஏன் இப்படி எங்களைத் தவிக்கச் செய்தாய்?'' என்று கேட்டார். 

அதற்கு இயேசு ""என் பிதாவினிடத்தில்தான் (இறைவன் இருக்குமிடம்) நான் இருப்பேன் என்று நீங்கள் அறியவில்லையா?'' என்று வினவினார். 

அதன் பொருள் யோசேப்புக்கும் மரியாளுக்கும் சற்று தாமதமாகத்தான் புரிந்தது. பிள்ளை  இயேசு ஞானத்திலும் வளர்ச்சியிலும் தேவ கிருபையிலும் அதிகமாய் விருத்தியடைந்திருந்தார். அதையறிந்து தாயும் தந்தையும் மகிழ்ந்தனர். 

இறைவன் நமக்கு கொடுக்கும் பிள்ளைகளை மரியாளைப்போல் வளர்க்க வேண்டும். நல்ல வளர்த்தி, நல்ல பிள்ளைகளைத் தரும். என்றும் இறையருள் நம்மோடு! 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com