தேவியின் திருத்தலங்கள்: மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி - 5

சொல்லுங்கள் அண்ணா. ஈசனின் சாபம் நீங்கி அவர் மீண்டும் இயல்பு நிலைக்கு வர என்ன வேண்டுமானாலும் செய்யத் தயார்..
தேவியின் திருத்தலங்கள்: மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி - 5


"தநூ: பெளஷ்பம் மெளர்வீ மதுகரமயீ பஞ்ச விஸிகா;

வஸந்த: ஸாமந்தோ மலையமரு - தாயோதன - ரத'

                                                   -செளந்தர்ய லஹரி

அன்னை தன் இருகை கூப்பி வேண்டுதலோடு மகாவிஷ்ணுவிடம் கேட்டார்:

"சொல்லுங்கள் அண்ணா. ஈசனின் சாபம் நீங்கி அவர் மீண்டும் இயல்பு நிலைக்கு வர என்ன வேண்டுமானாலும் செய்யத் தயார்!'' என்கிறார்.

மகாவிஷ்ணு கூறினார்: "தேவி, ஈசனின் சாபம் விலக வழி உண்டு. ஈசன் இங்கு வரும்போது அவரை மயானத்தில் தங்க வைத்துவிடு. பின் நவதானியத்தால் செய்யப்பட்ட சுண்டல், கொழுக்கட்டை ஆகியவற்றை ஒன்றாகப் பிசைந்து மூன்று உருண்டைகள் செய்து வை. முதல் கவளத்தை ஈசன் கையில் உள்ள திருவோட்டில் போடு. அதை பிரம்மாவின் தலை தின்று விடும். அடுத்த கவளத்தையும் அதேபோல் போடு. அதையும் தின்று விடும். மூன்றாவது கவளத்தை திருவோட்டில் போடுவதுபோல் கீழே போட்டுவிடு.

உணவின் சுவையால் ஈர்க்கப்பட்ட பிரம்மாவின் தலை ஈசனின் கையைவிட்டு இறங்கி உணவை உண்ண ஆரம்பிக்கும். அப்போது நீ ஆக்ரோஷ வடிவெடுத்து அந்த தலையை மிதித்து அழித்து விடு'' என்று கூறுகிறார். அன்னை அதேபோல் செய்ய ஈசனின் சாபம் நீங்குகிறது.

கிரேதாயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என்கிற நான்கு யுகங்களுக்கு முன்பு, "மணியுகம்' என்று ஒரு யுகம் இருந்தது. அதில் சிவனுக்கும், பிரம்மாவுக்கும் ஐந்து தலைகள் இருந்தன. அதில் கர்வம் கொண்ட பிரம்மா, "ஈசனுக்கு சமமான அதிகாரம் படைத்தவர் தானும்' என்கிற ஆணவம் அதிகரிக்கிறது.

ஒருமுறை பார்வதி தேவி பிரம்மாவை தொலைவிலிருந்து பார்த்து ஈசன் என்று நினைத்து வணங்கிக் கொண்டு வந்தார். அதைப் பார்த்த பிரம்மா, ""சகலமும் அறிந்த தேவிக்குத் தன் கணவர் யார் என்று தெரியவில்லையோ?'' என்று ஏளனமாகக் கூறினார். இதையறிந்து, கோபம் கொண்ட ஈசன் பிரம்மாவின் ஒரு தலையைத் துண்டித்து விட்டார்.

இதனால் கோபம் கொண்ட சரஸ்வதி, பார்வதியை நோக்கி ""ராணியாக வாழ்ந்த நீ, உன் அழகை இழந்து, வயதான கிழவியாய், கந்தல் ஆடையை அணிந்து மண்புற்றில் வாசம் செய்வாய்'' என்று சாபமிட்டு விடுகிறார். 
பிரம்மாவின் சாபப்படி அவரின் துண்டித்த தலையும் ஈசனின் கையில் ஒட்டிக் கொள்கிறது. பித்தனாக அலைகிறார் ஈசன்.

தேவி திருவண்ணாமலைக்கு வருகிறார். இரவு ஆகி விடவே "தாயனூர்' என்ற ஊரில் ஏரிக்கரை அருகே தங்கி விடுகிறார். மறுநாள் அந்த ஏரியில் குளித்தெழும்போது அவரின் வயதான தோற்றம் மாறுகிறது. அங்கிருந்து "மலையரசன் பட்டினம்' என்கிற மேல்மலையனூருக்கு வருகிறார். 

மலையரசனின் நந்தவனத்தில் புற்று உருவில் அன்னை பார்வதி தியானம் செய்கிறார். அந்தப் புற்றுக்கு மீனவர்கள், மஞ்சள் குங்குமம் சாற்றி, தீபமேற்றி வணங்கி வருகின்றனர். இவ்விஷயம் மலையரசனுக்குத் தெரிய வருகிறது.
அந்தப் புற்றை இடித்து அப்புறப்படுத்துமாறு கூறுகிறான். மீனவர்கள் எத்தனையோ தடுத்தும் கேளாமல் புற்றை இடிக்க, பூத கணங்கள் தோன்றி அங்கிருந்தவர்களை விரட்டி விடுகின்றனர். 

உண்மை தெரிந்த மன்னன் தன் தவறுக்கு மன்னிப்பு கேட்கிறான். அன்னை பூங்காவனத்து அம்மனாகத் தோன்றி "ஈசனின் சாபத்தைப் போக்கவே நான் இங்கு வந்துள்ளேன். இங்கு என்னை நாடி வருபவர்களுக்கு வேண்டிய வரங்களைத் தருவேன்'' என்று கூறுகிறார்.

மகாவிஷ்ணுவின் சொல்படி ஈசன் அன்னையிடம் வந்து பிட்சை கேட்கிறார். அன்னையும் மகாவிஷ்ணு சொன்ன படி உணவை இட, கீழே விழுந்த உணவை உண்ண பிரம்மாவின் தலை ஈசனின் கையை விட்டு விலகிக் குனிகிறது. அன்னை ஆக்ரோஷமாக தலையைக் காலால் மிதித்து அழித்து விட ஈசனின் சாபம் நீங்குகிறது.

இறைவனின் தோஷம் நீங்கியதால் அவர் ஆனந்தத் தாண்டவம் ஆடுகிறார். சிதம்பரம் சென்று ஸ்படிக லிங்கமாக மாறி விடுகிறார். ஈஸ்வரனுக்கு "தாண்டவேஸ்வரர்' என்றும், அம்பாளுக்கு "அங்காளம்மன்', "ஆனந்தாயி' என்ற பெயர்களும் வழங்குகின்றன. 

தீமையை அழிக்க ஆக்ரோஷமாக உருவம் எடுத்தாலும், அன்னை கருணையே வடிவானவள். இமவான் மகளாக இருந்தவள், தன் கணவனைக் காப்பாற்ற அங்காளம்மனாக உருவெடுத்தார். 

மேல்மலையனூரில் அம்மன் சுயம்பு மூர்த்தியாகத் தோன்றி இருக்கிறார். தன் கணவரைக் காப்பாற்ற அன்னை வந்து குடி கொண்டதால், இங்கு கணவனைப் பிரிந்த பெண்கள் வந்து அம்மனிடம் பிரார்த்தனை செய்து நேர்த்திக் கடன் செலுத்துகிறார்கள்.

தட்சன் தன் கணவனை அழைக்காமல் யாகம் செய்ததால் கோபம் அடைந்த தாட்சாயணி, அந்த யாக குண்டத்தில் விழுந்து தன்னை மாய்த்துக் கொண்டார். அந்த உருவமற்ற அம்சமே "அங்காளி' ஆகும். அங்காளியைத்  தன் தோளில்  சுமந்து ஆவேசமாக நடனமாடினார் ஈசன்.  அப்போது அம்பிகையின் கை துண்டாகி கீழே விழுந்தது. அது "தண்டகாருண்யம்' என்ற சக்தி பீடமாகியது. அதன் ஒரு பகுதியே "மேல் மலையனூர்'. அம்பிகை யாகத்தில் சாம்பலான இடம் என்பதால் இங்கு சாம்பலே பிரசாதமாக வழங்கப்படுகிறது.

அம்பிகையின் சக்தியாலேயே இவ்வுலகம் இயங்கினாலும், அனைத்துப் பெருமைகளையும் இறைவனுக்கு அளித்து விட்டு அமைதியாகப் புன்னகை பூக்கிறாள் அம்பாள். 

ஈசனின் சாபத்தையே மாற்றிய அகிலலோக சக்தி அவள். அவளின் சரிபாதி உடலில் இருப்பதாலேயே ஆனந்தமாக இருக்கிறார் இறைவன்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ளது மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில். இங்கு தினமும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். அமாவாசை, ஆடி வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுகிறார்கள்.

மயானத்தில் ஈசனின் கபாலத் திருவோட்டில் உணவு இட்டு, பிரம்மனின் தலையை அழித்த நிகழ்ச்சி "மயானக் கொள்ளை' என்று கொண்டாடப்படுகிறது. புற்றில் இருந்த அம்மனைக் கொண்டாடிய மீனவப் பரம்பரையினரே இன்றுவரை பூஜைகள் செய்து வருகின்றனர்.

அம்மன் புற்று மண்ணால் சுயம்புவாக உருவாகியவள். நான்கு திருக்கரங்களுடன், இடதுகாலை மடித்து வலது காலைத் தொங்க விட்டு, பிரம்மனின் கபாலத்தைக் காலில் மிதித்தபடி வடக்கு நோக்கியமர்ந்து அருள் பாலிக்கிறாள். 

கோயிலுக்குத் தெற்கே பெரிய உருவமாக மல்லாந்து படுத்த நிலையில் "பெரியாயி' காட்சி அளிக்கிறாள். அவளை வழிபடுபவர்களுக்கு தீய சக்திகள் தொல்லை தராது. இங்குள்ள நூற்றி எட்டு விநாயகர்களைத் தரிசித்தால் வாழ்வில் சகல நன்மைகளும் கிடைக்கும்.

தல விருட்சமாக வில்வ மரம் திகழ்கிறது. சித்த சுவாதீனம் இல்லாதவர்கள், பிரிந்த கணவன்}மனைவி இணைய, குழந்தைப்பேறு, திருமணம் தாமதமாகுதல் என பல தடைகளும் அம்மனை வழிபடுவதால் விலகும் என்பது ஐதீகம். "மயானக் கொள்ளை முடிந்த பிறகு பிரசாதமாகக் கொடுக்கப்படும் சாம்பலை வீட்டில் கொண்டு வந்து வைத்தால் தீய சக்திகள் நெருங்காது' என்கிறார்கள் பக்தர்கள்.

தன்னை நம்புபவர்களை மட்டுமல்லாமல், அல்லலில் உள்ள அன்பர்களையும் தன்னிடம் ஈர்க்கும் வல்லமை பெற்றவள் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன். 

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com