நிம்மதி நிறைந்த வீடு 

ஒரு குடும்பம் வாழ ஒரு வீடு இன்றியமையாதது என்பது இன்றைய உலக நிலை. இதனை இறைமறை குர்ஆனின் 16-80-ஆவது வசனம்
நிம்மதி நிறைந்த வீடு 

ஒரு குடும்பம் வாழ ஒரு வீடு இன்றியமையாதது என்பது இன்றைய உலக நிலை. இதனை இறைமறை குர்ஆனின் 16-80-ஆவது வசனம் "உங்கள் வீடுகளை அல்லாஹ் உங்களுக்கு நிம்மதி தருவதாக அமைத்தான்' என்று அறிவிக்கிறது. 

ஆடம்பர அலங்கார பெரிய மாளிகைகளில் மன நிம்மதி கிடைக்காது என்பதால் ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் தேவைக்குமேல் பெரிய வீடுகள் கட்டுவதைத் தடுத்தார்கள். 

இந்த வசனத்தில் இறைவன் வீடுகளை நமக்கு வெகுமதியாக அளித்ததை அறிவிக்கிறான். இந்த வீட்டில்தான், தாய், தந்தை, பெண் பிள்ளைகள், ஆண் பிள்ளைகள் வாழ்கிறார்கள். வீடு } ஒரு மனிதன் ஒதுங்கி இருப்பதற்கான இடமாக இருக்கிறது. வளமான வாழ்விற்கு வழிவகுக்கிறது. நிரந்தரமாக நிலைத்திருப்பதற்கும், ஓய்வு எடுப்பதற்கும் வசதியாக அமைந்துள்ளது. 

ஒரு மனிதன் வீட்டிற்கு வரும்பொழுது, நிம்மதி பெற்றதாக உணரும் அன்பும் கருணையும் பாசமும் நேசமும் அமைதியும் ஆனந்தமும் வீட்டில் நிலவ வேண்டும். அவ்வாறு அமையப்பெற்ற வீடு சிறப்பான வீடு.
30}21}ஆவது வசனம், "நீங்கள் சேர்ந்து வாழும் உங்கள் மனைவிகளை உங்களிடமிருந்தே அல்லாஹ் படைத்தான். உங்களுக்கிடையே அன்பையும் நேசத்தையும் உண்டுபண்ணி இருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் ஒன்று. சிந்தித்து உணரக் கூடிய மக்களுக்கு இவைகளில் நிச்சயமாகப் பல அத்தாட்சிகள் உள்ளன' என்று உரைக்கிறது. 

நிச்சயமாக இறையடியான் அவனுடைய வீட்டிற்குள் நுழையும் பொழுது இறைவனைத் துதிக்க வேண்டும். சாத்தானிடமிருந்து இறைவனின் பாதுகாப்பைக் கோரவேண்டும். அவனையும், அவன் குடும்ப உறுப்பினர்களையும், வீட்டில் வாழ்வோரையும் பாதுகாக்க இறைவனை இறைஞ்ச வேண்டும். 

தீங்கு, பாதிப்பு, குழப்பம், பிரச்னைகள் ஏற்படாதவாறு எல்லாம் ஏற்புடன் அமைய ஈர்ப்புடன் இறைஞ்ச வேண்டும். உண்ணும் உணவு, பருகும் நீர், தூக்கம், விழிப்பு போன்ற அனைத்தும் அமைதியாக நடைபெறவேண்டும் என்று வேண்ட வேண்டும்.

இல்லத்தில் நுழையும் பொழுதும், உணவு உண்ணும் பொழுதும் அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால், சாத்தான் இவ்வீடு அவனுக்கு உகந்தது இல்லை என்று அவ்வீட்டிலிருந்து விரண்டோடுவான். "அல்லாஹ்வை நினைவு கூராத வீட்டில் நிச்சயமாக சாத்தான் தங்குவான். சங்கடங்கள் உண்டாகும்' என்று உத்தம நபி (ஸல்) அவர்களின் சத்திய மொழி முஸ்லிம் 2018}இல் பதிவாகியுள்ளது. தொடர்ந்து முஸ்லிம் 779}இல் அல்லாஹ்வை நினைவு கூரும் வீடு உயிருள்ளது; நினைவு கூரப்படாத வீடு உயிரற்றது என்பதும் பதியப்பட்டுள்ளது.

வாழும் உயிருள்ள வீடு என்பது கிருபை மிக்க வீடு. அதில் வாழும் ஒவ்வொருவரும் வளமாய், நிம்மதியாய் வாழ்வர். அவ்வீட்டில் எப்பொழுதும் இறைவனைத் துதித்துக் கொண்டிருப்பர்.

குர்ஆன் ஓதும் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும். சூரத்துல் பகராவை (குர்ஆனின் 2}ஆவது அத்தியாயம்) ஓதும் வீடுகளை விட்டு சாத்தான் அகலுவான். உபரித் தொழுகைகளை வீடுகளில் தொழுவது வீட்டைத் துலங்க வைக்கும் (நூல் } முஸ்லிம் 778). 

வீட்டில் உபரித் தொழுகைகளைத் தொழுவது வீட்டில் உள்ளோரையும் தொழத் தூண்டும். இரவில் தூக்கத்தில் இருந்து எழும் கணவன், தானும் தொழுது மனைவியையும் எழுப்பி தொழ வைத்தால் அல்லது மனைவி முதலில் எழுந்தால் கணவனையும் எழுப்பி தொழ வைத்தால் அல்லாஹ் அருளை அள்ளித் தருவான் (நூல் } இப்னுமாஜா 1610, அபூதாவூத் 1336).

 பரஸ்பரம் சலாம் (முகமன்) கூறுவது வீட்டில் மகிழ்ச்சியை மலரச் செய்வதோடு அல்லாஹ்வின் மகத்தான அருளையும் அடைய வைக்கும் (நூல் } தப்ஸீர் அர்ராஜி 423/24, தப்ஸீர் அத்திப்ரீ 384/17). இப்படி முகமன் கூறுவது குழந்தைகளும் நல்ல பழக்கங்களைக் கடைப்பிடித்து வளர நல்ல நடைமுறையாய் அமையும்.

பிள்ளைகள் உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். அவர்களின் அறிவு வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும் ஆவன செய்ய வேண்டும். நிம்மதி நிறைந்த வீட்டில் நிம்மதியாய் நிறையுடைய இறைவனைக் குறைவின்றி போற்றிப் புகழ்ந்து துதித்து வணங்கி வாழ்வோம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com