பொருநை போற்றுதும் - 126

சுந்தரலிங்கம் என்னும் மாவீரனைப் பற்றி நமக்குக் கிடைக்கும் விவரங்கள் மிகச் சொற்பமே ஆகும். 
பொருநை போற்றுதும் - 126

சுந்தரலிங்கம் என்னும் மாவீரனைப் பற்றி நமக்குக் கிடைக்கும் விவரங்கள் மிகச் சொற்பமே ஆகும். 

முத்துக் குடும்பனார், கரையாளர் குடும்பனார், சின்னக்காலாடி, சாத்தான் காலாடி, சங்கரக்குடையான், மாடக்குடும்பனார் போன்றவர்கள் ஏறத்தாழ 100 பேர், தற்காப்புப் படைகள் வைத்திருந்தனர். பாளையப்பட்டுத் தலைவர்களுக்குத் துணையாக இப்படைகள் செயல்பட்டன. 

ஒவ்வொரு பாளையத்தோடும் நான்கைந்து படைகள் இணைந்திருக்கும். பாளையங்களுக்குள் உரசல்கள் நேர்ந்தபோது, சார்ந்திருக்கும் இடத்தைப் பொறுத்து, இப்படைகளுக்குள்ளும் உரசல்கள் இருந்துள்ளன. இருப்பினும், கம்பெனியின் ஆதிக்கத்தை எதிர்க்கவேண்டிய சூழல் உருவானபோது, இத்தகைய தற்காப்புப்படைகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து கொண்டன. இந்தப்படைகளும் படைகளின் தலைவர்களும் பெரிதும் மதித்த மாவீரன், சுந்தரலிங்கம் என்பார். 

இவருடைய தந்தையார் "கட்ட கருப்பண்ணன்' என்பவரும் வீரராக இருந்து படையில் பங்கேற்றவர். "கட்ட கருப்பண்ணன் மகன் சுந்தரலிங்கம்' என்றே நம்முடைய சுந்தரலிங்கம் அறியப்பட்டார். தற்காப்புப்படைகள் அனைத்தும் இவரின் தலைமையை ஏற்றுக் கொண்ட நிலையில், அவை யாவற்றின் தளபதியாகச் சுந்தரலிங்கம் செயல்பட்டார். 

இப்படிப்பட்ட சூழலில்தான், தம்முடைய தந்தையார் மற்றும் ஆசிரியர் நாகனார் ஆகியோரின் அறிவுரைப்படி, வீரபாண்டிய கட்டபொம்மனின் படையில் தம்மையும் தம்முடைய படைகளையும் சுந்தரலிங்கம் இணைத்துக் கொண்டதாகத் தெரிகிறது. 

சுந்தரலிங்கத்தின் வரலாற்றைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், 18}ஆம் நூற்றாண்டின் கடைப்பகுதியில் நிகழ்ந்த பாளையப்பட்டுச் சம்பவங்களையும், வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாற்று நிகழ்வுகளையும் தெரிந்து கொள்ளவேண்டும்.  

நெல்லைப் பகுதிக்குக் கலெக்டராக இருந்த லூஷிங்டனுக்கும், வீரபாண்டிய கட்டபொம்மனுக்கும் இடையில் மோதல்கள் வலுப்பெற்றுக் கொண்டிருந்தன. "நெல்லையைக் கம்பெனியின் ஆதிக்கத்திற்குள் கொணர வேண்டுமானால், ஏதாவது செய்யவேண்டும்' என்று கவர்னருக்குக் கடிதம் எழுதினார் லூஷிங்டன். 

1798 முதல் 1803 வரை, மதராஸ் மாகாணத்தின் கவர்னராக இருந்தவர், பொவிஸ் முதலாம் எர்ள் என்றும், இரண்டாம் பாரன் க்ளைவ் என்றும் அழைக்கப்பட்டவரான "எட்வர்ட் க்ளைவ்' (இவருடைய தந்தையார் லார்ட் ராபர்ட் க்ளைவ் பற்றி நம்முடைய வரலாற்றுப் பாடப் புத்தகங்கள் நிறையப் பேசியுள்ளன). 

ஏற்கெனவே, நெல்லைப் பகுதியின் கிளர்ச்சிகளையும் எழுச்சிகளையும் கட்டுப்படுத்துவதற்காக மேஜர் பானர்மன் தலைமையில், ஆங்கிலேயப் படை ஒன்று பாளையங்கோட்டையில் முகாமிட்டிருந்தது. 
1776}77 வாக்கில் மதராஸýக்கு வந்து, "மதராஸ் நேடிவ் இன்ஃபன்ட்ரி'க்குள் சேர்த்துக் கொள்ளப்பட்டவர் இந்த ஜான்அலெக்ஸôண்டர் பானர்மன். 

டச்சு ஆதிக்கத்திலிருந்து அப்போதைய இலங்கையை ஆங்கிலேய ஆதிக்கத்திற்குள் கொணர்ந்த 1796 படையெடுப்பிலும், திப்பு சுல்தானைவீழ்த்திய 1799 போரிலும் இவருடைய பங்கு கணிசமானது. இதனால் இவருக்குப் பதவி உயர்வுகளும் வழங்கப்பட்டன. 

1789 செப்டம்பர் 8}ஆம் நாள், மதராஸ் ஆர்மியில் பணியாற்றிய ஜேம்ஸ் வெஸ்ட் என்பாரின் மகளான ஆன்வெஸ்ட் என்பவரைப் பாளையங்கோட்டையில் இவர் மணந்ததாகத் தெரிகிறது (பின்னாட்களில் மலேசியப் பினாங்குப் பகுதியின் கவர்னராக இவர் ஆக்கப்பட்டார்; காலராவினால் 1819}இல் இறந்துபோன இவருக்குப் பினாங்குப் பகுதியில் வைக்கப்பட்டிருக்கும் சிலையில் "ஆஹா ஓஹோ' என்று எழுதப்பட்டிருப்பதைப் பார்த்து விட்டு, "நெல்லைக்காரர்கள் என்ன நினைப்பார்களோ?' என்றே வரலாற்றாசிரியர் எஸ். முத்தையா பதிவு செய்கிறார்). 

கம்பெனிக்காரர்களின் நேசத்திற்குரியவராக இருந்த பானர்மனுக்கு சர்வ அதிகாரங்களையும் வழங்கி, பாஞ்சாலக் குறிச்சிக்குச் செல்லுமாறு கவர்னர் க்ளைவ் கட்டளையிட்டார். திருச்சியிலிருந்து மேஜர் ஜெனரல் ப்ளாயிட், வெவ்வேறு பகுதிகளிலிருந்த மேஜர் ஸ்மார்ட், கேப்டன் காலின்ஸ், கேப்டன் ராபர்ட், லெஃப்டினண்ட் டல்லாஸ் போன்றோரும் அவரவர் படைகளைப் பாளைக்குக் கொண்டு சேர்க்க, அனைத்திற்கும் தலைவராக பானர்மன் பொறுப்பேற்றார். 

பாஞ்சாலங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் பானர்மன் படையெடுக்கப் போகிறார் என்னும் தகவல், 1799}ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14}15}ஆம் தேதிகளில் நெல்லைப் பகுதிகளில் அறிவிக்கப்பட்டது. 
இருப்பினும், கட்டபொம்மனைக் கொல்லாமல் உயிருடன் பிடித்து மதராஸýக்கு அழைத்து வரவேண்டுமென்னும் கட்டளையையும் கூடவே இட்டதால், பாளையங்கோட்டையில் இருவரும் சந்தித்துக் கொள்ளலாம் என்று பானர்மன் எண்ணினார். 

இதுகுறித்த தகவலை ஆகஸ்ட் 20}ஆம் நாள் கட்டபொம்மனுக்கு அனுப்பினார். "பானர்மனுடைய திட்டத்தில் சதி இருக்கலாம்' என்று சந்தேகப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மன், தன்னுடன் நட்பில் இருந்த டேவிசன் என்பாரிடம் ஆலோசனை கேட்டதாகவும், தாமதமின்றிப் பாளை செல்லும்படி அவர் அறிவுறுத்தியதாகவும் தம்முடைய நூலில் ம.பொ.சிவஞானம் பதிவு செய்கிறார். 

என்ன காரணமோ, கட்டபொம்மன் இதற்கு உடன்படாமல் வாளா இருந்தார். "தாமதம் தாழ்வுக்கு ஏது என்பதை இவர் (கட்டபொம்மன்) உணராதிருந்தது ஊழ்வினையின் கொடுமையே' என்று "பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்' என்னும் தனது நூலில் கவிராஜ பண்டிதர் ஜெகவீரபாண்டியனார் பதிவு செய்வதை இங்கு நினைவுகூர வேண்டியுள்ளது.

(தொடரும்)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com