அம்பிகையின் அருள் பெருக்கும் ஆடி மாதம்! 

ஆடி மாதத்தின் முதல் நாள் தக்ஷிணாயன புண்ணியகாலம் துவங்கும் காலம் மட்டுமல்ல. அன்று ஆடிப் பண்டிகையும் கூட. பண்டிகை கொண்டாட்டத்துடனேயே துவங்குகிறது இம்மாதம்.
அம்பிகையின் அருள் பெருக்கும் ஆடி மாதம்! 


ஆடி மாதத்தின் முதல் நாள் தக்ஷிணாயன புண்ணியகாலம் துவங்கும் காலம் மட்டுமல்ல. அன்று ஆடிப் பண்டிகையும் கூட. பண்டிகை கொண்டாட்டத்துடனேயே துவங்குகிறது இம்மாதம். ஆடி மாதத்தை அம்மன் மாதம் என்றே அழைப்பர். ஏன்? ஆடி என்பதே ஒரு தேவமங்கையின் பெயர். அவளுக்கு ஏற்பட்ட சாபத்தால் வேப்பமரமாகி, அதே சாபத்தின் மூலம் அம்பிகைக்கு உரிய விருக்ஷமானாள். அதனால் "வேப்பமரம்' மிகவும் புனிதமானது என்கிறது புராணம். 

ஆடி மாதத்தில் தான் பூமாதேவி அவதரித்தாள். அந்த அம்பிகைக்கு விழா எடுப்பதன் மூலம், அம்பிகையின் அருளுடன் வளமான வாழவே, அம்மன் கோயில்களில் பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன. 

"ஆடிப் பட்டம் தேடி விதை' என்பது பழமொழி. ஆனி - ஆடி மாதங்களில் தான் மழை பெய்து ஆறுகளில் தண்ணீர் ஓடத் துவங்கும். அதனால் அப்பொழுது விவசாய வேலைகள் துவங்குவதால் விவசாயிகளின் இல்லத்தில் மகிழ்ச்சியும் ஆனந்தமும் குடிகொள்ளும். 

இம்மாதத்தில்தான் தன்னிரு திருக்கரங்களில் விவசாயத்திற்கு ஏற்ற கலப்பையையும், உலக்கையையும் கொண்டு விளங்கும் அன்னை வாராகிக்கு உரிய ஆஷாட நவராத்திரி விழாவும் கொண்டாடப்படுகிறது.

பண்டைய காலத்தில் பஞ்சபூதங்களை வணங்கி வந்தபோது, மழைக்குரிய தெய்வமாகப் போற்றப்பட்ட தெய்வமே மாரியம்மன். பருவ கால மாறுதலால் ஏற்படும் வெப்ப சலன மாறுபாடுகள் காரணமாக ஏற்படக்கூடிய அம்மை நோயை தீர்ப்பவளாக மாரியம்மனை வணங்குவர். 

அதனால் அவளுக்குகந்த கூழ் காய்ச்சி, அம்பிகையின் பக்தர்களுக்கு வழங்குவர். இது மிக்க மருத்துவ குணம் மிக்கது. இதை "ஆடிக்கஞ்சி' என்றும் அழைப்பர். அதிமதுரம், சீரகம், திப்பிலி, சின்ன வெங்காயம், திரிகடுகம், குன்னிவேர், உழிஞ்சி வேர், சீற்றாமுட்டி, கடலாடி வேர் - இவற்றை இடித்து, ஒரு வெள்ளைத் துணியில் கட்டி, காய்ச்சிய கஞ்சியில் இதனை சிறிது நேரம் போட்டு ஊறவைத்து, எடுத்துவிட, அதன் சாரம் கஞ்சியில் இறங்கும். பின்னர் மருத்துவ குணமிக்க இக் கஞ்சியை எல்லோருக்கும் கொடுப்பர். 

ஆடி மாதத்தில் வரும் பூரத்தன்று பூமாதேவியின் அம்சமாக அவதரித்தாள் ஆண்டாள். கண்ணனையே காதலித்து ஸ்ரீரங்கத்தில் அவர் திருக்கரங்களைப் பற்றி திருமாலுடன் இரண்டறக் கலந்தவள். 

அன்றைய தினத்தில் ஆண்டாள் அவதரித்த திருவில்லிப்புதூரிலும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலிலும் மற்றும் பல திருமால் ஆலயங்களிலும் ஆடிப் பூர விழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. 

இதேபோல் சிவன் கோயில்களில் அன்று அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் சிறப்பாக நடைபெறும். அன்று அன்னையை விரதமிருந்து வழிபட்டால் அஷ்டமா சித்திகளும் கைகூடும் என்பர்.

ஆடி மாதம் பதினெட்டாம் நாள் ஆடிப்பெருக்குக்காக வேளாண்மையின் உயிராக விளங்கும் காவிரி அன்னைக்கு வழிபாடு செய்வர். கொங்கு நாட்டுப் பெண்கள் அன்றைய தினத்தில் கன்னிமார் படையல் பூஜையை சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். 

இதற்கென்றே விற்கப்படும் பொருள்களை வைத்து, ஏழு கூழாங்கற்களை சப்த கன்னிகைகளாக அலங்கரித்து ஆவாகனம் செய்து, பொங்கல் நைவேத்தியத்துடன் பூஜை செய்வார்கள்.

ஆடி மாத சுக்லபட்ச பஞ்சமியன்று நாக பஞ்சமி விரதம் அனுசரிக்கப்படுகிறது. "அனந்தன்' என்கிற நாகம் இந்த பூமியைத் தாங்குவதாக புராணங்கள் கூறுகின்றன. அன்றைய தினம் கோயில்களில் இருக்கும் அரசமரத்தடி நாகர்களுக்குப் பாலூற்றிப் பூஜித்தால் நாக தோஷம் நீங்கி, நல்ல மக்கட்பேறு உண்டாகும் என்பது ஐதீகம்.

ஆடி மாத செவ்வாய்க்கிழமைகளில் "மங்களகெvரி விரதம்' அனுஷ்டிக்கப்படுகிறது. திருமணமான பெண்கள் செய்யக்கூடிய இந்த விரதம் அனைத்துவிதமான மங்கலங்களையும் அளிக்கக்கூடியது. 

மேலும் ஆடி செவ்வாயன்று "ஒvவையார் விரதம்' அனுஷ்டிக்கப்படுகிறது. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், திருமணத் தடை நீங்கவும், திருமணம் ஆனபெண்கள் கணவனின் ஆயுள் நீடிக்கவும், கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கவும் இந்த விரதத்தினைக் கடைப்பிடிக்கின்றனர். 
தென்மாவட்ட பெண்களிடம் இந்த விரதம் கடைப்பிடிக்கும் பழக்கம் இன்றும் உள்ளது. 
செவ்வாய்க்கிழமை இரவு பெண்கள் யாராவது ஒருவர் வீட்டில் கூடி, கொழுக்கட்டை செய்து, அதை ஒvவைக்கு படைத்து வழிபடுவார்கள். ஆண்கள் இந்த பூஜையை பார்க்கவோ, கொழுக்கட்டையை சாப்பிடவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இம்மாதத்தில் கொண்டாடப்படும் முக்கியமான நோன்பு, சுமங்கலிகள் கடைப்பிடிக்கும் வரலட்சுமி நோன்பாகும். ஆடிமாதம் பெvர்ணமிக்கு முன்புவரும் வெள்ளிக்கிழமையில் இந்த விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. 

குறிப்பாகப் பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக வாழும் வரம் அருளும் விரதம் இது என்பது ஆன்றோர்களின் வாக்கு.

அன்னை காமாட்சி தேவி, சிவபெருமானை நோக்கித் தவமிருந்து, ஈசனை அடையும் பேறு பெற்ற மாதம் இம்மாதம்தான். மேலும் ஹரியும், ஹரனும் ஒன்று என்பதை எல்லோர்க்கும் உணர்த்த, சங்கரநாராயணர் கோயில் என்றழைக்கப்படும் புன்னை வனத்தில் ஒற்றை விரலில் நின்று கடும் தவமியற்றியதும் இந்த ஆடி மாதத்தில் தான். இதுவே "ஆடித் தவசு' என்று பெரும் விழாவாக அவ்வூரில் கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டிலும் தீநுண்மியின் தாக்கம் தொடர்வது காரணமாக விழாக்கள் பெரிய அளவில் நடக்காவிட்டாலும், நாம் வீட்டில் இருந்தபடியே அம்பிகையை உளமாற துதித்தால் அம்பிகையின் அருள் நிச்சயம் கிடைக்கும்..!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com