தேவியின் திருத்தலங்கள் - 32:   தேள் மாலை அணிந்த நங்கவரம் சாத்தாயி அம்மன் 

"சூரியன் ஒன்றுதான். நீர்த்துளிகளில் பட்டு நிறைய சூரியன்கள் தெரிவதைப் போல்தான் பராசக்தியே பரம்பொருள்' என்கிறது தேவி உபநிஷத். அம்பிகை தன் பக்தர்களைக் காக்க பல்வேறு உருவங்கள் எடுக்கிறாள்.
தேவியின் திருத்தலங்கள் - 32:   தேள் மாலை அணிந்த நங்கவரம் சாத்தாயி அம்மன் 


"புநஸ்: த்வந்நிர் பந்தா -தகில -புருஷார்த்தைக - கடநா
ஸ்வதந்த்ரம் தே தந்த்ரம் க்ஷிதிதல - மவாதீதர - திதம்'

-செvந்தர்ய லஹரி

"சூரியன் ஒன்றுதான். நீர்த்துளிகளில் பட்டு நிறைய சூரியன்கள் தெரிவதைப் போல்தான் பராசக்தியே பரம்பொருள்' என்கிறது தேவி உபநிஷத். அம்பிகை தன் பக்தர்களைக் காக்க பல்வேறு உருவங்கள் எடுக்கிறாள்.

அவளே கிராமங்களில் மாரியம்மனாக, பக்தர்களைக் காக்கும் பரம தயாள ஸ்வரூபமாக இருக்கிறாள். கிராமங்களில் வயல்வெளிகளில் விஷப்பூச்சிகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். மருத்துவ வசதிகள் இல்லாத பழைய காலங்களில் மந்திரம், அம்பிகை உபாசனை மூலமே விஷம் இறக்கப்பட்டது.

தன்னை நம்பியவர்களின் நோய் தீர்க்கும் மருந்தாக அவளே இருந்தாள். தங்களின் மருத்துவராக இருக்கும் அம்பிகைக்கு தங்கள் கிராம வழக்கப்படி பெயர் வைத்து கொண்டாடினர் மக்கள்.

மருதாயி, செல்லாயி என்பதுபோல் சாத்தாயி அம்மனும் மக்களின் விருப்ப தெய்வமாக நங்கவரத்தில் கொலு வீற்றிருக்கிறாள்.

பொதுவாக வயல்வெளிகளின் நடுவில் அகன்ற ஆலமரம் இருக்கும். அந்த இடத்தில் வயல்பகுதிகளை விட உயரமான திடல் இருக்கும். அதைக் களத்துமேடு என்று அழைப்பார்கள். விளைந்த நெற்கதிர்களை அங்கு கொண்டு வந்து, சிறு கட்டுகளாகக் கட்டி தரையில் அடித்து நெல்மணிகளை உதிர்ப்பார்கள்.

ஒருநாள் பெண்மணி ஒருத்தி சுற்றிலும் சிதறிக் கிடந்த நெல்லை சேகரிக்கும்போது அங்கு ஒரு பள்ளம் தெரிகிறது. அதில் குவிந்து கிடந்த நெல்லை கைகளால் அள்ள முயலும்போது ஓர் அசரீரி:

'நான் சாத்தாயி அம்மன். ஆடி வெள்ளத்தில் கேரளத்திலிருந்து அடித்து வரப்பட்டு இங்கு கரை ஒதுங்கினேன். என்னுடன் கருப்புசாமியும் மற்றும் ஆறு பெண்களும் இருக்கிறார்கள். உலக்கை சப்தம் கேட்காத தொலைவில் ஊருக்கு வெளியில் எங்களுக்கு கோயில் கட்டச் சொல். நான் ஊர் மக்களைக் காப்பாற்றுவேன்'' என்று ஒலித்தது.

இதனை அப்பெண் ஓடிப்போய் ஊரில் சொல்ல, மறுநாள் ஊர் மக்கள் தாரை தப்பட்டையுடன் வந்து களத்துமேட்டில் குறிப்பிட்ட இடத்தைத் தோண்டினார்கள். அங்கு சாத்தாயி அம்மன் சிலையும், கருப்புசாமி சிலையும், மற்ற ஆறு அம்மன் சிலைகளும் இருந்தன.

அசரீரி கூறியபடி கோயில் கட்டி சிலைகளைப் பிரதிஷ்டை செய்தனர். கருப்புசாமிக்கு தனிச் சந்நிதி. அன்னையுடன் மற்ற ஆறு சிலைகளையும் கருவறையில் பிரதிஷ்டை செய்தார்கள். சுற்றிலும் உள்ள எட்டு ஊர்களுக்கு இவளே காவல் தெய்வம்.

சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான கோயில். தனிச் சிறப்பாக அம்பிகை கழுத்தில் தேள் மாலை அணிந்திருக்கிறாள். அன்னையின் சிலை தேள் மாலையுடனேயே காணப்படுகிறது. இந்த ஊரில் யாரையும் தேள் கடிக்காது என்றும், தேளை யாரும் அடிக்க மாட்டார்கள் என்றும் கூறப்படுகிறது. அப்படியே கடித்தாலும், அன்னையின் குங்குமம், விபூதியைப் பூசினால் விஷம் இறங்கி விடும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

சாத்தாயி அம்மன் ஆலயம் கிழக்கு நோக்கி இருக்கிறது. கருவறையில் சப்த மாதர்கள் பிராமி, மகேஸ்வரி, கெvமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி இவர்களுடன் நடுநாயகமாக சாமுண்டி தேவி "பிடாரி ஸ்ரீசாத்தாயி அம்மன்' என்ற பெயரில் வடக்கு நோக்கி காட்சி அளிக்கிறாள். தேவிக்கு நான்கு கரங்கள். பாம்பு, பம்பை, சூலம், கிண்ணங்களை கைகளில் தாங்கி பீடத்தில் அமர்ந்த நிலையில், முகத்தில் கனிவுடன் காட்சியருள்கிறாள்.

இங்கு தேவிக்கு தை மற்றும் ஆடிமாத வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு, அபிஷேக, ஆராதனைகள் நடை பெறுகின்றன. ஆலமரம் இங்கு தல விருட்சமாக இருக்கிறது.

அடைக்கலம் என்று வந்த இடங்களில் அம்பிகையின் வீரியம் அதிகமாக இருக்கும். அவளிடம் நிலைத்த ஈடுபாடு கொண்டு வழிபடுபவர்களின் அனைத்து விதமான துன்பங்களையும் தேவி நீக்குகிறாள்.

"நமக்கு இட்ட கடமையைச் செய்தால், அதையே அவளுக்கான தவமாக ஏற்று நம்மைக் காப்பாள் அன்னை. அவளுக்குத் தொண்டு செய்தாலும், செய்யாமல் இருந்தாலும், அவளை மனதில் இருத்தி ஆன்ம சமர்ப்பணம் செய்வதாலும் அவளை அடையலாம். அப்படி உன்னை நினைக்காமல் தன் இச்சையாக நான் எதைச் செய்தாலும் நீ என்னை வெறுக்கக் கூடாது' என்கிறார் அபிராமி பட்டர்.

அம்பிகையை மனதில் இருத்தி அவளை தியானிப்பவர்கள் தங்கள் உடமைகள் மட்டுமல்ல, தங்களையே ஆத்ம நிவேதனம் செய்கிறார்கள். தங்கள் உழைப்பின் முதல் வருமானத்தை அவளுக்கே விருப்பமுடன் அர்ப்பணம் செய்கிறார்கள்.

ஆத்மா எவற்றாலும் பாதிக்கப் படாதது. அவற்றில் முழுதாக பரம்பொருள் சக்தி நிறைந்திருக்கிறது. அந்தச் சக்தி வடிவங்களில் ஒன்றுதான் சாத்தாயி அம்மன்.

இந்த ஊரில் யார் வயலில் அறுவடை நடந்தாலும் முதலில் அம்மனுக்கு ஒரு மரக்கால் நெல் அளந்து விட்டுத்தான் மற்றவர்களுக்கு அளிக்கிறார்கள். அதேபோல் நெல்லை அரைத்து அரிசியாக்கியதும், அதில் அம்மன் கோயிலுக்கு வந்து பொங்கல் வைத்து வழிபடுவது இந்தப் பகுதியில் வழக்கமாக உள்ளது.

ஆலயத்திலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் அம்மன் கண்டெடுக்கப்பட்ட ஆதி ஆலமரம் அடர்ந்த விழுதுகளுடன் காணப்படுகிறது. திருவிழாவின் போது முதலில் இந்த ஆலமரத்தின் வேரில் காப்பு கட்டிய பின்னரே அம்மனுக்கு காப்பு கட்டுகிறார்கள்.

அமைவிடம்: கரூர் மாவட்டம், குளித்தலை வட்டத்தில், திருச்சியிலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது நங்கவரம் சாத்தாயி அம்மன் திருத்தலம். தினமும் இரண்டு கால பூஜை நடைபெறுகிறது. தன் ஊர் மக்களை மட்டுமல்லாமல் தன்னை நம்பி வரும் பக்தர்களின் துன்பங்களையும் நீக்கும் தாயாக இருக்கிறாள் அம்மன்.

(தொடரும்)

படம்: பொ. ஜெயச்சந்திரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com