ஈசனுக்கு பிடித்த இன்னொரு இடமான ஸ்ரீசைலம்!

ஈசனுக்கு பிடித்த இன்னொரு இடமான ஸ்ரீசைலம்!

ஜோதிர்லிங்கம், சக்திபீடம் என இரண்டு சிறப்புகளும் ஒருங்கே அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க தலமாகத் திகழ்கிறது ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுன சுவாமி திருக்கோயில்.

ஜோதிர்லிங்கம், சக்திபீடம் என இரண்டு சிறப்புகளும் ஒருங்கே அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க தலமாகத் திகழ்கிறது ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுன சுவாமி திருக்கோயில்.

12 ஜோதிர் லிங்கங்கள்: லிங்க வடிவில் அருள் பாலிக்கும் சிவபெருமானுக்கு நாடு முழுவதும் 12 இடங்களில் ஜோதிர் லிங்கங்கள் அமைந்துள்ளன. குஜராத்தின் சோம்நாத், ஆந்திரத்தின் ஸ்ரீசைலம், மத்தியப்பிரதேசத்தின் உஜ்ஜைனி ஸ்ரீகாளேசுவரர், கண்ட்வா ஓம்காரேசுவரர், உத்தரகாண்ட் கேதார்நாத் ஈசுவரர், மகாராஷ்டிரம் புணேயில் பீமசங்கர், காசி விஸ்வநாதர், நாசிக் திரியம்பகேசுவரர், பரளி வைஜிநாதர், அவுந்தா நாகநாதர், ராமேசுவரம் ராமநாதர், ஒளரங்காபாத் கிருஷ்ணேசுவரர் உள்ளிட்டவை 12 ஜோதிர்லிங்கங்கள் ஆகும்.

2-ஆவது ஜோதிர்லிங்கம், 3-ஆவது சக்திபீடம்: நாட்டின் இரண்டாவது ஜோதிர்லிங்கம் ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுன சுவாமி ஆவார். ஆந்திர மாநிலம், கர்நூல் மாவட்டத்தில் நல்லமல்லா மலைப்பகுதியில் கிருஷ்ணா ஆற்றின் கரையில் இக்கோயில் அமைந்துள்ளது. இத்தலத்தின் தாயார் பிரம்மராம்பிகை தேவி ஆவார். இந்தியா முழுவதும் உள்ள 51 சக்திபீடங்களில் ஒன்றாக இது அமைந்துள்ளது.

சிலாத மகரிஷி குழந்தை வரம் வேண்டி தீவிர தவத்தில் ஈடுபட்டார். இதையடுத்து சிவபெருமான் அருளால் நந்தி, பர்வதன் என்ற 2 மகன்கள் பிறந்தனர். அவர்களைக் காணவந்த முனிவர்கள் "நந்திதேவர் சிறிது நாள் தான் பூமியில் வாழ்வார்' எனக்கூறினர். இதனால் அவரது தந்தை சிலாத மகரிஷி வேதனையடைந்தார். இதைப்பார்த்த நந்திதேவர், "நான் சிவனை நோக்கி கடும் தவம் புரிவேன்' எனக்கூறி தவத்தில் ஈடுபட்டார். அவரது தவத்தை ஏற்ற சிவன், நந்தியை தனது வாகனமாக்கி, "அவரது அனுமதியின்றி எவரும் தன்னைக் காண முடியாது' என உத்தரவிட்டார்.

ரிஷியின் மற்றொரு மகனான பர்வதனும் கடும் தவமிருந்தார். சிவனின் பாதம் எப்போதும் தன்மீதே இருக்க வேண்டும் என கோரினார். அதன்படி பர்வதனை ஒரு மலையாக ஆக்கி, சிவலிங்கமாக அதன் மீது எழுந்தருளினார். அதுவே பின்னாளில் "ஸ்ரீசைலம்' என அழைக்கப்பட்டது.

சுவாமிக்கு மல்லிகை பூக்களால் வழிபாடு நடத்தப்படுகிறது. மல்லிகைபுரி அரசனின் மகள் சந்திரலேகா நாள்தோறும் மல்லிகைப் பூக்களால் அர்ச்சனை செய்ததால் "மல்லிகார்ஜுனர்' எனவும் அழைக்கப்பட்டார். காசியில் வாழ்ந்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ, ஸ்ரீசைலத்தை தரிசித்தாலே அதைவிட புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

தேவார மூவரால் பாடல் பெற்றது: சம்பந்தர், சுந்தரர், அப்பர் உள்ளிட்டோரால் பாடல் பெற்றது இத்தலம். புராண காலத்தில் ஒருமுறை சிவபெருமானிடம், உரையாடிய பார்வதி தேவி, "கைலாசத்தைத் தவிர உங்களுக்குப் பிடித்தமான இடம் எது?' எனக் கேட்டார்.

அப்போது சிவபெருமான் ஸ்ரீசக்கரம் அவதரித்த தெய்வீகத் தலமான ஸ்ரீசைலத்தை தேர்வு செய்தார். அத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் ஜோதிர்லிங்கம், சக்திபீடம் இணைந்துள்ளது தனிச்சிறப்பாகும்.

பாதாள கங்கை: இப்பகுதியில் ஓடும் கிருஷ்ணா நதி "பாதாள கங்கை' என அழைக்கப்படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து 852 படிக்கட்டுகள் கீழிறங்கி சென்றால் கிருஷ்ணா நதியை அடையமுடியும். அங்கு சிவலிங்கத்தை நனைத்தவாறு செல்கிறது கிருஷ்ணா நதி. மேலும் வெள்ளக்காலங்களில் பாதாள கங்கை பகுதி முழுவதும் நீரில் மூழ்கி விடும்.

கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் சத்பவன வம்ச அரசர்கள் காலத்தில் கட்டப்பட்டது இக்கோயில். விஜயநகரப் பேரரசர்கள் கோயிலில் பல்வேறு கட்டுமானங்களை மேற்கொண்டனர்.

சுமார் 2 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட இக்கோயிலில் பல்வேறு மண்டபங்கள் காணப்படுகின்றன. ராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சகஸ்ர லிங்கம் (1,000 லிங்கங்கள்) உள்ளன. கண்ணீருடன் காட்சி தரும் பக்தை மல்லம்மா சிலை, பாண்டவர்கள் மண்டபம் உள்ளிட்டவை அனைவரையும் கவர்கின்றன.

பக்தர்களே பூஜை செய்யலாம்: சுவாமிக்கு பக்தர்களே பூஜை செய்யலாம். ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் கோயில் செல்லும் வழியில் அடர்ந்த வனப்பகுதி உள்ளதால், இரவில் தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை.

மலைப் பாதையில் நடந்து சென்று கோயிலை அடைய 3 மணி நேரம் ஆகிறது. ஸ்ரீசைலத்துக்கு அருகே உள்ள ரயில் நிலையம் (81 கி.மீ. தூரத்தில் உள்ள) மர்க்காபூர் ஆகும். ஆந்திர மாநில முக்கிய நகரங்கள் மற்றும் சென்னை, பெங்களூருவில் இருந்து பேருந்து வசதி உள்ளது.

நேரம்: அதிகாலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரை, மாலை 4.30 முதல் இரவு 10 மணி வரை கோயில் திறந்திருக்கும்.

தொடர்புக்கு: 08524-288881, 288887.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com