முனிவர்கள் ஆராதித்த முக்கண்ணன்

தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் ஒன்று கிளியனுர் அருள்மிகு ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி உடனுறை ஸ்ரீஅகத்தீஸ்வரர் திருக்கோயில்.
முனிவர்கள் ஆராதித்த முக்கண்ணன்

தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் ஒன்று கிளியனுர் அருள்மிகு ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி உடனுறை ஸ்ரீஅகத்தீஸ்வரர் திருக்கோயில். அகத்திய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, அவருக்கு அருள் பாலித்தவர் இத்தல மூலவர். ராகு, கேது பகவான்கள் இங்கு வழிபட்டுள்ளனர். சுகப்பிரம்ம மகரிஷி, ஆதிசேஷன், காலவ மகரிஷி உள்ளிட்டோரும் இத்தல இறைவனை பூஜித்துள்ளனர். சுகப்பிரம்ம மகரிஷி பூஜித்தமையால் இத்தலம் "சுக புரி' எனவும் வழங்கப்படுகிறது. 

வரலாற்றுச் சிறப்பு: சுமார் 1200 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது இவ்வாலயம். கிள்ளி என்பது பழங்கால சோழ மன்னரின் பெயர். அக்காலத்தில் கிள்ளியநல்லூர் என வழங்கப்பட்டு காலப்போக்கில் மருவி "கிளியனுர்' ஆனது. 

திருஞானசம்பந்தர் காலத்தில் செங்கற் கோயிலாக இருந்து பின் இடைக்கால சோழர்கள் காலத்தில் கற்கோயிலானது. ஆலயத்தில் காணப்படும் சோழர்கள் மற்றும் விஜயநகர மன்னர்கள் காலத்து கல்வெட்டுகள் ஆலயத்தில் அவ்வப்போது நடந்தேறிய திருப்பணி செய்திகளைத் தெரிவிக்கின்றன.

திருக்கோயில் அமைப்பு: பலகனி துவாரங்கள் (சாளரம்) வழியாக ஈசனை வழிபடும் அமைப்பில் மேற்கு நோக்கிய சந்நிதி, கோஷ்ட மூர்த்தங்களும், நால்வர் சந்நிதிகளும் அமையப்பெற்றுள்ளன.  கிழக்கு நோக்கிய அம்பிகை சந்நிதியும், மேற்கு வாயிலில் அகத்திய முனியும்  வீற்றிருந்து அருள்கின்றார். ஆலயத்தின் எதிரே உள்ள ஏரியே தீர்த்தக்குளமாக விளங்குகிறது.

விழாக்கள்: பிரதோஷ வழிபாடுகள், கிருத்திகை, சிவராத்திரி, பங்குனி உத்திர திருக்கல்யாணம் போன்ற வைபவங்கள், இங்கு விமரிசையாக நடைபெறுகின்றன. 

பரிகாரச் சிறப்பு: காசிக்கு இணையாக கூறப்படும் இத்தலம் ராகு, கேது கிரக  தோஷங்கள் நீங்குவதற்கும், பக்தர்களின் குறைகள், பிணிகள் அகலுவதற்கும்  உகந்ததாகக் கூறப்படுகிறது. 

பேருந்து வசதி: திண்டிவனம், புதுச்சேரி போன்ற ஊர்களிலிருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் கிளியனூர் வழியாகச் செல்கின்றன. 

தொடர்புக்கு: ஹரிஹர குருக்கள் - 9976440754.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com