இனி பயம் வேண்டாம்..!

தவறான செயல்பாடுகள், அறியாமை, தவறான ஆலோசனை உள்ளிட்டவற்றால் ஏற்படும் விளைவுகள் நமக்கு பயத்தைக் கொண்டு வருகின்றன.
இனி பயம் வேண்டாம்..!

தவறான செயல்பாடுகள், அறியாமை, தவறான ஆலோசனை உள்ளிட்டவற்றால் ஏற்படும் விளைவுகள் நமக்கு பயத்தைக் கொண்டு வருகின்றன. இது குறித்து பரிசுத்த வேதாகமத்தில் உள்ள ஒரு சம்பவத்தைப் பார்க்கலாம்.
 ஆதியில் தேவன், ஆதாம் - ஏவாளைப் படைத்தார். பின்னர், ஏதேன் தோட்டத்தை உருவாக்கினார். அதில் ஆதாம் -ஏவாள் ஆகிய இருவரையும் வைத்தார். அப்போது, தேவன் அவர்கள் இருவரையும் பார்த்து, "தோட்டத்தில் உள்ள அனைத்து கனிகளையும் புசிக்கலாம். ஆனால், தோட்டத்தின் நடுவே இருக்கிற நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை மட்டும் புசிக்கவேண்டாம்!'' என்றார்.
 அப்போதுதான் அவர்களுக்கு சோதனை வந்தது. ஏவாள் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருக்கையில் சர்ப்பம் வந்து பேசியது. அப்போது சர்ப்பம், "நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும், நீங்கள் நன்மை தீமையை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார்'' எனக் கூறியது.
 இதைக்கேட்ட ஏவாள், சர்ப்பத்தின் சொல்லைக் கேட்டு அந்த பழத்தைப் புசித்தாள். தான் புசித்ததோடல்லாமல், தனது கணவரான ஆதாமுக்கும் புசிக்கக் கொடுத்தாள்.
 அப்போது, இருவரின் கண்களும் திறந்தன. தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து, அத்தி இலைகளைத் தைத்து உடுத்திக் கொண்டனர். பின்னர், தோட்டத்தில் தேவனின் சப்தம் கேட்டது. அதுவரை தேவனோடு பயமின்றி சுதந்திரமாக ஏதேன் தோட்டத்தில் உலாவிய இவர்கள், தாங்கள் தேவனுக்கு விரோதமாக செய்த தவறு காரணமாக முதன்முறையாக தேவனை சந்திக்கப் பயந்து தோட்டத்தில் ஒளிந்து கொண்டார்கள்.
 அச்சமயம் தேவன், அவர்களை நோக்கி, "எங்கே இருக்கிறீர்கள்..?'' எனக் கூப்பிட்டார். அதற்கு ஆதாம், "நான் தேவரீருடைய சப்தத்தைத் தோட்டத்திலேயே கேட்டு, நான் நிர்வாணியாயிருப்பதனால் பயந்து, ஒளிந்துக்கொண்டேன்'' என்றான் (ஆதியாகம் - 3:10).
 இதனால் நடந்தது என்ன..? தேவனின் ஏதேன் தோட்டத்தில் இருந்து ஆதாம், ஏவாள் இருவரும் துரத்தப்பட்டனர். அதுவரை எந்தக் கவலையும் இல்லாமல் சந்தோஷமாக வாழ்ந்தவர்கள், நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த பாடுபட்டு அதன் பலனைப் பெறக்கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதனால், ஆயுளின் நாள்கள் குறைந்தன. கடைசி வரை அடுத்து என்ன நடக்குமோ என்ற பயத்தோடே வாழும் நிலை ஏற்பட்டது.
 நாமும் கூட சில நேரங்களில் சர்ப்பம் கூறியதைப் போன்று, வேலை செய்யும் இடங்கள், பள்ளி, கல்லூரிகள் போன்ற இடங்களில் மற்றவர்கள் கூறும் தேவையற்ற ஆலோசனைகளுக்கு செவிசாய்த்து, அதன்காரணமாக நிம்மதி இழந்து காணப்படலாம். நாம் செய்யவேண்டிய காரியம் ஒன்றே. இன்றே தேவனுடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்து நடப்போம். பயமின்றி வாழ்வோம்..!
 -ஒய்.டேவிட் ராஜா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com