இறைவன் இருக்கின்றானா?

இறை மறுப்பாளர்கள், இமாம் அபூ ஹனீபா (ரஹ்) அவர்களிடம் "இறைவன் இருக்கின்றானா?' என்று கேட்டனர்.
இறைவன் இருக்கின்றானா?

இறை மறுப்பாளர்கள், இமாம் அபூ ஹனீபா (ரஹ்) அவர்களிடம் "இறைவன் இருக்கின்றானா?' என்று கேட்டனர்.
 இமாம் - எனக்குக் கிடைத்த ஒரு செய்தியைப் பற்றிச் சிந்திக்கிறேன்.
 இறைமறுப்போர் - என்ன செய்தி ?
 இமாம் - சரக்குகள் நிறைந்த கப்பல் ஒன்றில் மாலுமி இல்லை. காவலர்களும் இல்லை. ஏவலர்களும் இல்லை. அந்தக் கப்பல் பேரலைகளைக் கிழித்து கொண்டு தானாகவே ஓடுகிறது.
 இறை மறுப்போர் - செலுத்துவார் இன்றி அழுத்தும் அலை கடலில் நிலை குலையாது கப்பல் செல்கிறது என்பதை அறிவுடையவன் சொல்ல மாட்டான்.
 இமாம் - உங்கள் வாதப்படி செலுத்துவார் இன்றி செழுங்கடலில் கப்பல் செல்ல முடியாது என்றால், விண்ணும் மண்ணும் அவற்றிலுள்ள அனைத்தம் இயக்குவோர் இன்றி இயங்குமா?
 பதில் சொல்ல முடியாமல் திகிலுற்று திகைத்த இறை மறுப்பாளர்கள் இமாம் அவர்களின் கைகளைப் பற்றி ஏக இறைக் கொள்கையை ஏற்றனர்.
 மன்னர் ஹாரூன் ரசீத் இறைவன் இருப்பதற்கு இமாம் மாலிக் (ரஹ்) அவர்களிடம் ஆதாரம் கேட்டார். "மனிதர்கள் பேசும் மொழி வேறுபட்டு இருப்பதும், ஒலிகளும், ராகங்களும் மாறுபட்டு இருப்பதும் இறைவன் உள்ளதை உணர்த்தும் சான்றுகள்!' என்று பதில் அளித்தார்கள்.
 இக்கேள்வி இமாம் ஷாபி ஈ (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது. "முசுக்கட்டை மர இலைகளின் சுவை ஒன்றுதான். அந்த இலைகளைத் தின்னும் பட்டு பூச்சி, பட்டு நூலைத் தருகிறது.
 அந்த இலையைச் சாப்பிடும் தேனீ, தேனைத் தருகிறது. ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் அதை உண்டு விட்டு பாலைத் தருகின்றன. அதே இலையைத் தின்னும் மான்கள் மணமிக்க கஸ்தூரியைத் தருகின்றன. இவற்றை நிர்ணயிப்பவன் நிச்சயமாக உள்ளான்' என்று எச்சரித்தார்கள்.
 இமாம் ஹன்பல் (ரலி) அளித்த விளக்கம்: ஒரு பாதுகாப்பான பளிங்கால் ஆன கோட்டை, வெளிப்புறம் வெள்ளியைப் போன்று வெண்மையானது.
 உட்புறம் பொன் போன்ற நிறமுடையது. நுழைவாயில் இல்லை. திடீரென அந்தக் கோட்டையின் சுவர் பிளக்கிறது. செவி புலனும், கண் பார்வையும் உள்ள உயிர் வெளிவருகிறது. பொலிவான தோற்றம். இனிய குரல். கோழிக் குஞ்சை முட்டையிலிருந்து வெளிவரச் செய்பவன் யார்?'
 இமாமின் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாது கேள்வி கேட்டவர்கள் இன்னும் கேள்வி கேட்டு, கேலிக்குரிய போலிகளாகத் திரியாமல், பொன்னான ஏக இறைக் கொள்கையை ஏற்று ஏற்றம் பெற்றார்கள்.
 - மு.அ. அபுல் அமீன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com