திருநீறு கலசம் தோன்றும் தெய்வீகத் திருக்குளம்!

திருநீறு கலசம் தோன்றும் தெய்வீகத் திருக்குளம்!

ஈசன், பிரம்மனின் தலையைக் கொய்த தலம், திருநீறு கலசம் தோன்றும் தெய்வீகத் திருக்குளம் அமைந்த தலம் எனப் பல்வேறு பெருமைகளைக் கொண்டத் தலமாக விளங்குவது,

ஈசன், பிரம்மனின் தலையைக் கொய்த தலம், திருநீறு கலசம் தோன்றும் தெய்வீகத் திருக்குளம் அமைந்த தலம் எனப் பல்வேறு பெருமைகளைக் கொண்டத் தலமாக விளங்குவது, ஈரோடு மாவட்டம், மடவிளாகம் கிராமத்தில் அமைந்துள்ள ஆருத்ர கபாலீசுவரர் திருக்கோயில்.
 தலபுராணம்: சிவபெருமானுக்கும், பிரம்மனுக்கும் ஐந்து தலைகள் இருந்தன. அதனால் பிரம்மன் மனதில், தான் ஈசனுக்கு சமம் என்ற அகந்தை ஏற்பட்டது. அவனுடைய ஆணவத்தை அடக்க விரும்பிய சிவபெருமான், அவனது ஒரு தலையை கிள்ளி விட்டார். பிரம்மனின் பச்சையான மண்டை ஓட்டைத் தாங்கியதால், ஈசன் "பச்சை ஓடு ஏந்திய நாதராக' விளங்கினார் (பச்சை+ஓடு+ ஏந்தியநாதர் = பச்சோட்டுநாதர்). இன்றும் சிவனின் அம்சங்களான சோமாஸ்கந்தர், பிட்சாடனர் முதலிய வடிவங்களில் கையில் திருவோட்டுடன் விளங்குவதைக் காணலாம்.
 இப்புராணம் நடந்த தலம், கண்டியூர் வீரட்டம் என்றும், ஈரோடு மாவட்டத்திலுள்ள மடவிளாகம் என்றும் இரு வேறு வரலாறுகள் கூறப்படுகின்றன. மடவளாகத்தில் இந்த நிகழ்வு நடந்ததால், சிவபெருமானுக்கு "பச்சை ஓடு நாதர்' என்கிற பச்சோட்டு நாதர், பச்சோடலிங்கம், "ஆருத்ர கபாலீஸ்வரர்' ஆகிய பெயர்கள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
 ஆலய அமைப்பு: இவ்வாலயம் கிழக்கு முகமாக அமைந்துள்ளது. கோயிலின் உள்ளே நுழைந்ததும் சூரியன், சந்திரன் சந்நிதிகள் மேற்கு முகமாக அமைந்துள்ளன. ஆருத்ர கபாலீசுவரர் எனும் பச்சோடநாதர் திருக்கோயில் முன்பாக நந்தி மண்டபமும், கொடி மரமும் அமைந்துள்ளன.
 இறைவன் கருவறையில் சதுர வடிவ ஆவுடையாராக, ஆருத்ர கபாலீசுவரர் சுமார் மூன்றடி உயரத்தில், சுயம்பு லிங்கத் திருமேனியாகக் காட்சி தருகிறார்.
 (கபாலீசுவரர் என்கிற பெயரில் ஈரோடு மற்றும் சென்னை மயிலாப்பூரிலும் திருக்கோயில்கள் அமைந்துள்ளன).
 தனிக் கோயில் கருவறையில் அன்னை பெரிய நாச்சியார் எனும் பெரியநாயகி அம்பாள் ஐந்தடி உயரத்தில் நின்ற கோலமாக எழிற்காட்சியளிக்கின்றார். அன்னைக்கு பிரகன்நாயகி, பிரகல நாயகி, விசாலாட்சி, கமலவள்ளி ஆகிய திருநாமங்களும் உள்ளன.
 கருவறைச் சுற்றில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, பிரம்மன், துர்க்கை, சண்டிகேஸ்வரர் சந்நிதிகள் அமைந்துள்ளன. அதனருகே வள்ளி, தெய்வானை உடனாய முருகப்பெருமான் சந்நிதியும் அமைந்துள்ளது.
 வெளிச்சுற்றில் வடகிழக்கே காலபைரவர், திருமால், தான்தோன்றீஸ்வரர் சந்நிதிகள் அமைந்துள்ளன.
 திருநீறு கலசம் தோன்றும் "நக புஷ்கரணி': கருவறையின் பின்புறம் சுயம்புவாக பாறைகளுக்கு இடையே அமைந்துள்ள திருக்குளமே "நக புஷ்கரணி' ஆகும். சிவபெருமான் தம் நகத்தால் கீறியதால் உண்டான சுனை என்பதால் "நக புஷ்கரணி' என்றழைக்கப்படுகிறது. இக்குளத்தின் நீரோட்டம் சிவபெருமானின் கருவறைக்குக் கீழே செல்வதாக நம்பப்படுகிறது.
 இத்திருக்குளத்தில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, மண் கலசத்தில் திருநீறு தோன்றும் அதிசயம் நிகழ்கிறது.
 இலக்கியங்கள்: "வாடாத பச்சோட லிங்கமும் வாழ்கொங்கு மண்டலமே' என கொங்கு சதகம் இத்தலத்தைப் புகழ்ந்து உரைக்கிறது. புலவர் லட்சுமண பாரதி "மட வளாக தலபுராணம்' ஒன்றையும் எழுதி இருக்கிறார்.
 சைவம் வைணவம் போற்றும் தலம்: ஆருத்ர கபாலீசுவரர் ஆலயத்தின் தென்பகுதியில் பிரமாண்டமான ரகுபதி நாராயணப் பெருமாள் திருக்கோயிலும் அமைந்திருக்கிறது. பெருமாளுக்கும் தாயாருக்கும் தனித்தனி சந்நிதிகள் உள்ளன.
 அமைவிடம்: ஈரோடு மாவட்டம், காங்கேயம் வட்டத்தில், ஈரோட்டிலிருந்து 47 கி.மீ. தொலைவிலும், காங்கேயத்தில் இருந்து முத்தூர் செல்லும் சாலையில் 7 கி.மீ. தொலைவிலும் மடவிளாகம் திருத்தலம்
 அமைந்துள்ளது.
 - பனையபுரம் அதியமான்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com