தேவியின் திருத்தலங்கள் - 28 : நத்தம் ஆனந்தவல் அம்பிகை

உலக வாழ்வில் நாம் அன்பு வைத்தவர்களைப் பிரிய நேரிடும். ஆனால் அம்பிகை நம்மேல் வைக்கும் அன்பு என்றும் அவளுடன் நிலைத்து வாழ வைக்கும். அவள்மேல் வைக்கும் பிரியம்தான் நிலையானது.
தேவியின் திருத்தலங்கள் - 28 : நத்தம் ஆனந்தவல் அம்பிகை

 'விதந்த்ரீ மாஹேந்த்ரீ விததிரபி ஸம்மீலித - த்ருசா
 மஹா சம்ஹாரே சஸ்மிந் விஹரதி ஸதி த்வத்பதி - ரஸெள'

- செளந்தர்ய லஹரி

 உலக வாழ்வில் நாம் அன்பு வைத்தவர்களைப் பிரிய நேரிடும். ஆனால் அம்பிகை நம்மேல் வைக்கும் அன்பு என்றும் அவளுடன் நிலைத்து வாழ வைக்கும். அவள்மேல் வைக்கும் பிரியம்தான் நிலையானது.

 தன் குழந்தைகளுக்காக ஓடி வருகிறாள் அம்பிகை. "அம்மா..!'- என்று மனம் உருகி அழைத்தால் உடனே அருகில் நிற்பாள் அம்பிகை.
 அப்படி தன் பக்தனுக்காக நாகத்தின் தீண்டலை அம்பிகை ஏற்றுக் கொண்ட திருத்தலம் நத்தம். இங்கு ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பிகை சமேத ஸ்ரீ திருவாலீஸ்வரர் ஆலயம் உள்ளது.

 ஆனந்தவல்லி அம்பாள் என்னும் பெயருடன் அழகுறக் காட்சி அளிக்கிறாள் அம்பிகை.

 ராகு தோஷம்: தேவியின் பக்தன் ஒருவனை ராகு தோஷம் பீடித்துக் கொண்டது. எனவே, ராகு பகவான் சர்ப்ப வடிவில் அவனைத் தீண்ட வந்த போது பக்தன் அம்பிகையைச் சரண் அடைந்தான்.

 அம்பாள் ராகுவைத் தடுக்க முயன்றாள். அப்பொழுது ராகுவான சர்ப்பம் அன்னையைத் தீண்டி விடுகிறது. தேவி மூர்ச்சை அடைகிறாள்.

 சக்தியின் செயல் நின்று போனதால், உலகம் ஸ்தம்பித்துப் போனது. தேவர்கள் ஈசனிடம் சென்று முறையிடுகிறார்கள். ஈசன் அம்பிகையை நெல்லிவனம் (நத்தம் கிராமம்) சென்று தவம் செய்யச் சொல்கிறார். அதேபோல் அன்னையும் மூர்ச்சை தெளிந்து எழுந்து இங்கு வந்து ஈசனை நோக்கித் தவம் செய்ய அம்பிகையின் உடலில் பரவி இருந்த நஞ்சை ஈசன் ஏற்றுக் கொள்கிறார். எனவே ஈசனின் உடல் கருமை நிறமானது.

 எனவேதான் இங்குள்ள லிங்கத் திருமேனி தைலக் காப்பு இல்லாதபோது கருமை நிறமாகவும், பால் அபிஷேகம் செய்யும்போது கருநீல நிறமாகவும் காணப்படுகிறது. இது ராகு-கேது சர்ப்ப தோஷங்கள் நீக்கும் தலமாகவும் விளங்குகிறது.

 இங்கு அழகு கொஞ்சும் ரூபத்தில் தெற்கு நோக்கிக் காட்சி அளிக்கிறாள் தேவி. தெற்கு வாயிலில் உள்ள கோயில்கள் பரிகாரத் தலங்களாக விளங்குகின்றன. தெற்கு வாயில் எமன் திசை. அதை நோக்கி அம்பிகை வீற்றிருக்கிறாள் என்பதால் எமனின் பாசக் கயிற்றிலிருந்து அம்பிகை தன் பக்தர்களைக் காக்கிறாள் என்பது ஐதீகம்.

 ஆனந்தவல்லி அம்பாள் இங்கு காலில் சதங்கையுடன் நாட்டியக் கோலத்தில் காட்சி அளிக்கிறாள். பிரம்மனுக்கு ஆனந்தத் தாண்டவம் ஆடிய கோலத்தில் தேவி காட்சி தந்ததால் "ஆனந்தவல்லி' என்ற திருநாமத்துடன் நாட்டியநாயகியாக விளங்குகிறாள். இந்த அம்மனை வெள்ளிக்கிழமைகளில் சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால் கலைத்துறையில் சிறந்து விளங்கலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

இங்கு வில்வம், கொன்றை, மரமல்லி தல விருட்சங்களாக விளங்குகின்றன.
 இங்குள்ள காரியசித்தி கணபதியின் தோற்றம் வேறு எங்கும் காணக் கிடைக்காதது. தாமரை மொட்டின்மேல் அமர்ந்த கணபதி, தன் மேலிரண்டு கரங்களில் கோடரியும், ருத்ராட்சமும், கீழிரண்டு கரங்களில் தந்தமும், மோதகமும் ஏந்தி இருக்கிறார். இந்தியாவிலேயே தொந்தி இல்லாமல் காட்சி தரும் கணபதியை இங்குதான் காண முடியும். இவருக்கு நெற்றிக்கண் உண்டு.
 இந்த ஆலயத்தில் ஒவ்வொரு மாதமும் சங்கடஹர சதுர்த்தி அன்று சங்கட நிவாரண ஹோமம் நடத்தப்படுகிறது.

 ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஆலயம், ராஜராஜ சோழன் காலத்தில் கட்டப்பட்டது என்பதை இங்கு கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது.

 வாழ்வில் ஒவ்வொரு மனிதரும் எதிர்பார்ப்பது, காரியத் தடைகள் விலகி, ஆனந்தமாய் வாழ வேண்டும் என்பதே. இதை நமக்குப் பரிபூரணமாக வழங்குவது அம்பிகையும், அவளின் குமாரனான விநாயகரும்தான்.
 இவர் குழந்தை சுவாமி என்றாலும் பக்தர்களைக் கை தூக்கி விடுவதில் அவர் முதன்மையாகத் திகழ்கிறார். தன் மகனுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தில் அம்பிகை மகிழ்ந்து தன் பக்தர்களுக்கு ஆனந்தத்தை அளிக்கிறாள்.

 திருமீயச்சூரை அடுத்து இங்குதான் அம்பிகைக்கு விசேஷ நாள்களில் அன்னப்பாவாடை சாற்றப் படுகிறது. அன்னத்தால் படையல் என்பது சாதம், சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர்சாதம், வடை, பாயசம் படைப்பது.
 இதில் சர்க்கரைப் பொங்கல் மீது குளம்போல் செய்து அதில் சுத்தமான நெய் ஊற்றி, நெய்க்குளம் செய்வார்கள். இதில் அம்மனைப் பார்ப்பது லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்த பலனைத் தரும்.
 அம்பிகை உறையும் ஸ்ரீபுரம் நம் இதயம்தான். அதில் நல்ல எண்ணங்கள், அன்பு, கனிவு, உயிர்கள் மீது கரிசனம், நம்பிக்கை, பொறுமை இவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

 "தாயே! உன் வடிவழகே காண்பதற்கு நிறைவாய் இருக்கிறது. உலகமே பிரளயத்தில் சிக்கி அல்லலுறும் போது நீயே எங்களைக் காக்கிறாய். உன் உருவமே என் நெஞ்சில் நிறைந்திருக்க அருள் புரிவாய்..!'
 என்கிறார் ஸ்ரீஆதிசங்கரர்.

 நம்மை விரும்பும் அம்பிகை, நமக்கு ஒரு துன்பம் எனும்போது ஓடி வருவாள். நம்முடைய அன்புக்குரியவர் எனும்போது, அவரின் துன்பம் நீக்க ஓடி வர வேண்டும். அப்படி ஜென்ம, ஜென்மமாக நம்மைக் காத்து அருள்பவள் அம்பிகை. அவள் உறவையே விடாது பிடித்துக் கொள்ள வேண்டும்.
 நத்தம் ஸ்ரீகாரியசித்தி விநாயகர் நமது காரியத் தடைகளை நீக்குகிறார். ஆனந்தவல்லித் தாயார் அந்தக் காரியங்கள் நிலைத்து நின்று நாம் ஆனந்தமாக வாழ வழியருளி வருகிறாள்..!

 அமைவிடம்: சென்னை செங்குன்றம் பேருந்து நிலையத்திலிருந்து கும்மிடிப்பூண்டி, பொன்னேரி செல்லும் பேருந்துகளில் ஏறி, காரனோடை பாலத்தை அடுத்த பஞ்செட்டி என்னும் இடத்தில் இறங்கி மேற்கே செல்லும் கிளைச் சாலையில் 2 கி.மீ. தூரம் நடந்து சென்றால் நத்தம் திருத்தலத்தை அடையலாம்.

 ஆட்டோ வசதி வேண்டுமெனில் ஜனப்பன் சத்திரம் கூட்டுச் சாலையில் இறங்க வேண்டும்; அங்கிருந்து 5 கி.மீ. தொலைவில் கோயில் உள்ளது.
 நேரம்: காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கும்.
 (தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com