பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர் (18/06/2021)

செல்வத்தை மனிதன் வரமாகக் கருதுகிறான். ஆனால், பணத்தால் மனத்தூய்மை குறையத் தொடங்குகிறது.
பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர் (18/06/2021)

* பராத்பரனே, ஸ்ரீ ராமச்சந்திரா! எத்தனையோ துணைகளுடன் நீ என்னைப் படைத்திருக்கிறாய். இருந்தாலும், எல்லாவற்றிற்கும் மூலகாரணமான உன்னைத்தான் நான் ஒவ்வொன்றுக்கும் நாடி நிற்கிறேன். என்னை நீ ரட்சித்தருள வேண்டும். 
-மகான் ஸ்ரீ தியாகராஜர்
* ஆத்மாவே எல்லா உயிரினங்களாகவும் ஆகியிருக்கிறது. (இதை உணர்ந்து இறைவனை) ஒருமையுணர்வைப் பெறுகின்ற ஒருவனுக்கு என்ன மனமயக்கம்? என்ன கவலை? (அவனுக்கு மனமயக்கமும் கவலையும் இல்லை).
-ஈசாவாஸ்ய உபநிஷதம் -7 
* பார்த்தவைகளும் கேட்டவைகளுமாகிய விஷயங்களில் இருக்கும் நாட்டத்தை ஒழித்தவனுக்கு, உலகப் பற்றின்மை உண்டாகிறது.
-பதஞ்சலி யோக சூத்திரம், சமாதி பாதம் -15
* தவம் செய்யாதவர்க்குத் தேவர்கள் வரம் தர மாட்டார்கள். 
-சிலப்பதிகாரம்
* நெருப்பை நீரினால் அணைக்கிறோம். அதுபோல், எழுகின்ற கோபத்தை அறிவால் அடக்குபவர்களே மனிதர்களில் சிறந்த மகாத்மாக்கள்.
-வால்மீகி ராமாயணம், சுந்தர காண்டம் -55.3
* பரம்பொருளே! உன்னில் நான் இணைவேனாக. என்னில் நீ இணைவாயாக. ஆயிரம் கிளைகளுடன் (வளர்ந்திருக்கின்ற மரம்போல் எங்கும்) பரந்திருக்கும் உன்னில் இணைவதன்
மூலம் நான் புனிதம் பெறுவேனாக.
-தைத்திரீய உபநிஷதம் - 1.4.5
* செல்வத்தை மனிதன் வரமாகக் கருதுகிறான். ஆனால், பணத்தால் மனத்தூய்மை குறையத் தொடங்குகிறது.
-ராமகீதை (ஸ்ரீ ராமருக்கு அவரது குரு வசிஷ்டர் கூறிய அறிவுரை)
* உண்மையான தனது நிலையை அறிந்தவன், வாழ்க்கையின் உன்னத குறிக்கோள்களை நோக்கி பணியாற்றுவதிலிருந்து வேறு எதனாலும் கவனம் திரும்பாதவன், தர்மத்தைக் கடைப்பிடிக்கும் உறுதி உள்ளவன் இத்தகைய மனிதன் உண்மையாகவே பண்டிதன் ஆவான். 
-விதுரநீதி
* தயவு இல்லாமல் அறம் ஏது? எல்லா உயிர்களிடமும் தயவு இருக்க வேண்டும். தயவுதான் தர்மத்தின் மூலமாகும். தயவு இல்லாதவனை சிவபெருமான் விரும்பமாட்டான். 
-பசவண்ணர் (கர்நாடக மாநிலத்தில் வாழ்ந்த மகான்) 
* செல்வம் உடையவர்களைக் காட்டிலும் தவம் உடையவர்கள்தான் - உயர்ந்த கல்வியறிவு உடையவர்கள்தான் - உலக மக்களால் பின்பற்றத்தக்கவர் ஆவர்.
-குமரகுருபரர்
* பால் கறவை அற்றுப் போன ஒரு மலட்டுப் பசு மாட்டை வைத்திருப்பதில் என்ன உபயோகம்? அதே மாதிரி உயர்ந்த கல்வியும், தெய்வபக்தியும் இல்லாத ஒரு மகன் பிறந்தால் என்ன பிரயோஜனம்? 
-சாணக்கிய நீதி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com