தேவியின் திருத்தலங்கள் - 29:  வைத்தீஸ்வரன் கோயில்

"கிரீடம் வைரிஞ்சம் பரிஹர புர: கைடப பித:கடோரே கோடீரே - ஸ்கலஸி ஜஹி - ஜம்பாரி மகுடம்...'
தேவியின் திருத்தலங்கள் - 29:  வைத்தீஸ்வரன் கோயில்

"கிரீடம் வைரிஞ்சம் பரிஹர புர: கைடப பித:
கடோரே கோடீரே - ஸ்கலஸி ஜஹி - ஜம்பாரி மகுடம்...'

-செளந்தர்ய லஹரி 

மும்மூர்த்திகளின் இயங்கும் சக்தியாக இருப்பவள் அம்பிகை. நோயுற்றவர்களின் உள்ளத்தில் நிலவும், வெறுமை, சோர்வு, வெறுப்பு என்ற உணர்வுகளை நீக்கி, நம்பிக்கை மலரச் செய்கிறாள் அம்பிகை. தான் என்னும் அகங்காரத்தை நீக்கி, நமக்குள் சக்தியாக அமர்ந்து, நம்மை முழுதாக தனக்குள் ஐக்கியப்படுத்திக் கொள்கிறாள்.

எல்லாம் ஒரே பராசக்தி வடிவம்தான் என்றாலும், நோய் தீர்க்கும், தாலி பாக்கியம் தரும் தையல் நாயகியாக வைத்தீஸ்வரன் கோயிலில் அருளாட்சி செய்கிறாள் பார்வதி தேவி.

தலை சிறந்த பிரார்த்தனைத் தலம். "புள்ளிருக்கும் வேளூர்' என்று பாடல் பெற்றது. மிகவும் புராதானமானதும், அங்காரகனின் பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது. 

அங்காரகன் வழிபட்டதால் "அங்காரக புரம்' என்ற பெயரும் வைத்தீஸ்வரன் கோயிலுக்கு உண்டு.

இங்குள்ள சித்தாமிர்த தீர்த்தம் மிகவும் சிறப்பானது. சித்தர்கள் அமிர்தத்தால் ஈசனை அபிஷேகம் செய்து பல வரங்கள் பெற்றனர். அப்போது சிந்திய அமிர்தம் இக்குளத்தில் கலந்தது. இதில் பதினெட்டு தீர்த்தங்கள் கலந்துள்ளது. இதில் நீராடினால் உடலில் உள்ள அனைத்து நோய்களும் தீரும்.  4,448  வகையான நோய்களைத் தீர்க்கும் மருத்துவப் பீடம் இது.

ஒருமுறை அங்காரகனுக்கு வெண்குஷ்ட நோய் வந்தது. அப்போது, "இத்தலத்திற்கு வந்து இறைவனை வழிபட்டு, சித்தாமிர்த தீர்த்தத்தில் குளித்தால் நோய் குணமாகும்' என்று ஓர் அசரீரி ஒலித்தது.  

அதேபோல் அங்காரகன் இங்கு வந்து வழிபட, இறைவன் மருந்து தயாரித்தபோது அன்னை பார்வதி தைல பாத்திரத்துடன் வந்ததால் "தையல் நாயகி' என்று அழைக்கப்படுகிறாள். 

இங்கு அளிக்கப்படும் பிரசாதமான "திருச்சாந்துருண்டை' நோய் தீர்க்க வல்லது. திருநீறு குண்டத்தில் உள்ள விபூதியுடன், சித்தாமிர்த தீர்த்த நீரையும் சேர்த்துக் குழைத்து, "நமசிவாய' என்று ஓதிக் கொண்டு, முத்துக் குமாரசுவாமி சந்நிதியில் உள்ள அம்மியில் அரைத்து, அதனை அம்பாள் திருவடியில் வைத்து, பின்னர் பக்தர்களுக்கு எடுத்துத் தருகிறார்கள்.

உடல் நோய் மட்டுமன்றி, பிறவி நோயையும் அழிக்க வல்லது இச்சாந்துருண்டை. 

இங்கு தல விருட்சம் வேம்பு ஆகும். நான்கு கோபுரங்களோடு, உயர்ந்த மதில்கள் சூழ்ந்து, பிரம்மாண்டமாக இருக்கிறது கோயில். இறைவன் மேற்கு நோக்கியும், அம்பாள் தெற்கு நோக்கியும் காட்சி அளிக்கிறார்கள். தெற்கில் கணபதி, மேற்கில் பைரவர், வடக்கில் காளியும், கிழக்கில் வீரபத்திரரும் காவல் புரிகின்றனர்.

நான்கு புறங்களிலும் மண்டபங்கள், படிக்கட்டுகள், நடுவில் நீராழி மண்டபத்தோடு சித்தாமிர்த தீர்த்தம் விளங்குகிறது. சதானந்த முனிவர் இங்கு தவம் செய்தபோது பாம்பால் துரத்தப் பட்ட தவளை ஒன்று தண்ணீரில் குதித்து அவர் தவத்தைக் கலைத்தது. எனவே முனிவர் "இங்கு பாம்பும், தவளையும் வசிக்கக் கூடாது' என்று சாபம் கொடுத்ததால் இக்குளத்தில் தவளைகள் வசிப்பதில்லை.

"அங்காரகனின் நோய் தீர்த்த தலம்' என்பதால் இங்கு அவருக்குத் தனிச் சந்நிதி உண்டு. ஆயுர்வேதத்தின் தலைவனான தன்வந்திரி பகவான் இங்கு விஷ்ணு ரூபத்தில் அமர்ந்திருக்கிறார். எனவே இத்தலம் தீராத நோய்களையும் தீர்க்கும் மருத்துவப் பீடமாக இருக்கிறது.

இங்குள்ள ஐந்து கோபுரங்களும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளன. உடற்பிணி, திருமணத் தடை, குழந்தைப்பேறு இன்மை என்று சகல குறைகளையும் நீக்குகிறாள் அம்பிகை. "தைலம்மன் தாலி போல்...' என்று அம்மனின் மகிமை பிரசித்தமாகப் பேசப்படுகிறது. தாலி காக்க பெண்கள் அம்பிகையை வணங்கி தாலி போடும் வேண்டுதலும் நடக்கிறது.

இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. பக்தர்கள் பலருக்கும் இத்தலத்து ஈசனும், அம்பிகையும் குலதெய்வமாக இருக்கிறார்கள். 

கணவனின் உடல்பிணி நீங்க அம்பிகையை வேண்டும் பெண்கள், தங்கள் மாங்கல்யம் காக்க அன்னையை வணங்கி, தையல் நாயகிக்கு புடவை சாற்றுகிறார்கள். மஞ்சள் கயிற்றில் கோர்க்கப்பட்ட பொட்டு, தாலிகளையும் காணிக்கையாகச் செலுத்துகிறார்கள்.

அம்பாள் சந்நிதியில் உப்பு, மிளகு, கடுகு, கண்ணுரு ஆகியவையும் காணிக்கையாகச் செலுத்தப்படுகிறது. 

பங்குனியில் பிரம்மோற்சவம் மிகச் சிறப்பாக நடைபெறும். ஐந்தாம் நாள் விழாவில், செல்வமுத்துக் குமார சுவாமி தன் அன்னை, தந்தையிடமிருந்து வேல் வாங்கிச் செல்லும் நிகழ்ச்சி மிகச் சிறப்பானது.

குமரகுருபரர் இத்தலத்து முருகனை அழகு தமிழில் பாடியுள்ளார்.

அன்னையின் தோற்றம் கனிவுடன், மிக அழகாகக் காட்சி அளிக்கிறது. "நான் இருக்கிறேன் வா!' என்று அன்போடு அழைக்கிறாள். பக்தர்களின் துயர் தீர்க்க, தன் செல்வக் குமரனுடன் கோயில் கொண்டிருக்கிறாள்.

செவ்வாய் தோஷம் நீங்க இத்தலத்தில் முருகனை வணங்குதல் சிறப்பு. தன் செல்வனை நம்பி வரும் பக்தர்களின் குறைகளை அம்பிகை ஓடோடி வந்து தீர்க்கிறாள்.

இங்கு அனைத்து விழாக்களும் செல்வமுத்துக் குமரனுக்கே. முதலில் முருகனுக்கு பூஜை செய்த பிறகே, இறைவனுக்கும், அம்பிகைக்கும் பூஜைகள் நடைபெறுகின்றன. 

"அன்னையே உன் மனம் மெழுகு போல் பக்தர்களுக்காக உருகுகிறது. உன்னை வணங்குவது மூலம் உன்னுள் இருக்கும் அந்த ஈசனையும் வணங்குகிறேன். வார்த்தைகளில் விளக்க முடியாத மகிமை வாய்ந்த உன்னைப் போற்றுகிறேன்!' என்கிறார் ஆதிசங்கரர்.

ஏதோ ஒரு ஜென்மத்தில் நாம் செய்த வினையின் பலனே இந்த ஜென்மத்தில் நோயாக மாறுகிறது. ஜென்மத்தைக் கொடுத்த அம்பிகையே நம்மை இந்த நோய்த் தாக்குதலில் இருந்தும் மீட்பாள்.

அன்னையின் மீதான நம்பிக்கையே நோய்க்கான மருந்து..!

அமைவிடம்: நாகப்பட்டினம் மாவட்டம், 

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயில் அமைந்துள்ளது.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com