மயிலாடுதுறை அபயாம்பிகை 22

நல்ல எண்ணங்கள், சிந்தனையுடன், நம் செயல்கள் பிறரைத் துன்புறுத்தாமல் நல்லது செய்யுமானால், நமக்குத் துணையாக ஓர் ஒப்புயர்வற்ற சக்தி உடன் வருகிறது என்று பொருள்.
மயிலாடுதுறை அபயாம்பிகை 22

 தேவியின் திருத்தலங்கள் ஜி.ஏ.பிரபா
 கிரந்தீம் மங்கேப்ய கிரண - நிகுரும்பாம்ருத ரஸம்
 ஹ்ருதித்வாமாதத்தே ஹிமகர சிலா மூர்த்திம் மிவ ய:
 - செளந்தர்ய லஹரி
 நல்ல எண்ணங்கள், சிந்தனையுடன், நம் செயல்கள் பிறரைத் துன்புறுத்தாமல் நல்லது செய்யுமானால், நமக்குத் துணையாக ஓர் ஒப்புயர்வற்ற சக்தி உடன் வருகிறது என்று பொருள். அதன் கருணையால் கடினமான இந்த வாழ்வை எளிதாகக் கடந்து விடலாம்.
 எது அந்தச் சக்தி? அது எப்படி இருக்கும்?
 பதில் சொல்ல முடியாத கேள்வி என்றாலும் ஒரு சக்தி காற்றைப் போல் பரவி இருக்கிறது. ஒவ்வொரு நிமிஷமும் அதன் அருளால் ஓர் அற்புதம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. அதை ஏற்கும் விதத்தில் நம் மனதை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
 எண்ணற்ற விண்வெளி மண்டலங்கள் முதல் மனிதனின் ஒவ்வொரு அணு வரை அம்பிகையின் சக்தி நிரம்பி இருக்கிறது. அந்தச் சக்தியின் வீரியத்தைத் தூண்டிவிடும் வேலையைத்தான் ஆலயங்கள் செய்கின்றன.
 ஒவ்வோர் ஆலயமும் அவளின் ஒவ்வொரு மகிமையைக் குறிக்கிறது.
 "அன்னையே சந்திர காந்தக் கல்லை ஒத்துள்ளது உன் மேனி, உன் ஒவ்வொரு அங்கமும் அமிர்ந்த ரசத்தைப் பொழிகிறது. உன்னை மனதில் நிறுத்தி, உன்னையே தியானித்து நின்றால், கருடனைப் போல் வலிமை மிகத் தருவாய்' என்கிறார் ஆதிசங்கரர்.
 நாம் மனம் விட்டுக் குறைகளைச் சொன்னால் அபயம் என்று ஓடி வரும் அம்பிகை மயிலாடுதுறை ஸ்ரீ அபயாம்பிகை.
 மயிலாடுதுறை எனும் மாயவரம் மிகவும் தொன்மையானது. -ஆயிரம் ஆனாலும் மாயூரம் போலாகாது- என்று சிறப்பித்துக் கூறப்படுகிறது. பிரம்மாவால் உருவாக்கப்பட்டது மாயவரம். ஈசனை அன்னை மயில் உருவத்தில் வழிபடும் இரண்டு தளங்களில் ஒன்று மயிலாப்பூர், மற்றொன்று மயிலாடுதுறை.
 ஈசனை மதிக்காமல் தட்சன் நடத்திய யாகத்தில் கலந்து கொண்ட அம்பிகை, தட்சனால் அவமானப்படுத்தப்படுகிறாள். அன்னை யாகத் தீயில் விழுந்து உயிரை விடுகிறார். அந்த அன்னையின் உடலே ஐம்பத்தியொரு சக்தி பீடங்களாக அமைகின்றன.
 தந்தை, ஈசனை அவமானப்படுத்தியதால் வெகுண்ட அம்பிகை யாகத்தை அழிக்கிறாள். அப்போது அங்கு தன்னை தஞ்சமடைந்த மயிலுக்கு அபயம் அளித்துக் காத்ததால் அம்பிகை அபயாம்பாள் என்று அழைக்கப்படுகிறாள்.
 ஈசன் அம்பிகையை மயிலாகப் பிறக்கும்படி உத்தரவிடுகிறார். அதன்படி இத்தலத்திற்கு வந்த அம்பிகை மயில் வடிவில் ஈசனை நோக்கி தவம் இருக்கிறாள். ஐப்பசி மாதம் முழுவதும் மயிலாக அன்னை தவம் இருக்கிறாள். தேவியைப் பிரிய மனமில்லாத ஐயன் மயிலாக மாறி தானும் இங்கு வருகிறார். மயூர தாண்டவம் ஆடி அம்பிகையை ஆட்கொள்கிறார்.
 அன்னையின் பூஜையில் மகிழ்ந்து அம்பிகை சுய உருவம் எடுக்க அருள்கிறார்.
 இங்கு ஆதி மயூரநாதர் சந்நிதிக்கு அருகில் அம்பிகைக்கு தனி சந்நிதி இருக்கிறது. இங்கு லிங்க வடிவ ஈசன் அருகில் மயில் வடிவில் அம்பிகை வழிபட்ட நிலையில் காட்சி அளிக்கிறாள்.
 தன்னை நாடிவந்த மயிலைக் காத்த அன்னை வீரசக்தி வடிவமாக இருக்கிறாள். ஆடிப்பூரம், வெள்ளிக்கிழமைகளில் காவிரிக் கரையில் எழுந்தருளி காட்சி அளிக்கிறாள் அபயாம்பிகை.
 இங்கு காவிரி துலா ஸ்நானம் மிக விசேஷமாக கருதப்படுகிறது. கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள், மாந்தர்கள் தங்கள் பாவங்களைத் தங்களிடம் கரைப்பதால் சேர்ந்துள்ள பாவத்தை நாங்கள் எங்கு கழிப்பது என்று கேட்டபோது, கண்ணுவ முனிவர் மாயவரத்தில் உள்ள காவிரியில் துலா மாதம் என்று அழைக்கப்படும் ஐப்பசி மாதத்தில் நீராடச் சொல்கிறார். நரகாசுரனைக் கொன்ற பிரம்மஹத்தி தோஷம் நீங்க ஸ்ரீ கிருஷ்ணரை இங்குதான் நீராடச் சொல்கிறார் ஈசன்.
 துலா மாதத்தில் சப்த மாதர்கள், தேவர்கள், முனிவர்கள் இங்கு நீராட வருகிறார்கள். ஐப்பசி மாதத்தின் கடைசி நாளான கடைமுகம் அன்று நீராடுவது மிகச் சிறப்பு. அன்று காவிரியில் நீராடி அம்பிகையை வணங்கினால் அவள் நம்மை அனைத்து துன்பங்களிலிருந்தும் அபயம் அளித்துக் காப்பாள் என்பது ஐதீகம்.
 நான்கு பக்கமும் சுற்று மதில்களும், கிழக்கே பெரிய கோபுரமும் காணப்படுகிறது. வீதி உட்பட மொத்தம் ஐந்து பிராகாரங்கள் உள்ளன. இக்கோயிலின் ராஜகோபுரம் ஒன்பது நிலைகளுடன் அழகிய சிற்பங்களுடன் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது. உட்கோபுரம் மூன்று நிலைகளுடன் காணப்படுகிறது.,
 இங்குள்ள துர்க்கையம்மனின் காலுக்குக் கீழ் மகிஷனும், அருகில் அசுரர்களும் இருப்பது அரிதான ஒன்று. மயூர நாதர் சந்நிதியின் பின்புறம் சுப்பிரமணிய சுவாமி சந்நிதி உள்ளது. இவர் மீது அருணகிரிநாதர் திருப்புகழ் பாடியுள்ளார். ஆதி மயூரநாதர் சந்நிதியின் வடபுறம் அபயாம்பிகை தனி சந்நிதியில் நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறாள்.
 "அழைத்ததும் வருவாள் அபயாம்பிகை' என்பதற்கேற்ப அன்னை அருள் வழியும் கண்களுடன் எழில் ததும்ப நிற்கிறாள்.
 வைகாசியில் பிரம்மோற்சவம், துலா ஸ்நானம், ஆடி கடைசி வெள்ளியன்று லட்சதீபம் ஏற்றுவதும் இங்கு மிக விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. அன்னை மயிலாக தவம் செய்ததால் நடனம் பயில்பவர்கள் இங்கு வந்து அன்னையை வழிபடுவது மிகச் சிறப்பு. தங்கள் பிரார்த்தனை நிறைவேறியதும் ஈசனுக்கும், அம்பிகைக்கும் வஸ்திரம் சாற்றி வழிபடுகிறார்கள்.
 "அன்னையே உன் அருளுக்கு இணை எதுவும் இல்லை. நீ எங்களைக் காக்கவே பல்வேறு வடிவம் எடுத்து வருகிறாய். ஒவ்வொரு வடிவமும், மற்றதை விட அதிக அருட்சக்தியும், கருணையும் நிரம்பியதாய் இருக்கிறது.' என்கிறார் ஆதிசங்கரர்.
 "தாயே நான் உன்னிடம் எதுவும் சொல்ல வேண்டியதில்லை. நீயே அனைத்தும் அறிவாய். உன்னை நோக்கிக் கரம் குவிப்பது ஒன்றே என் வேலை' என்கிறார் நீலகண்ட தீட்சிதர்.
 உச்சிக் கிளியே அருட்கிளியே உணர்வு உணர்வாய்
 உயிருக்குயிராய் உதித்த கிளியே - - - -அருள் அமையும்
 மயிலா புரியில் வளரீசன் வாழ்வே அபயாம்பிகைத்தாயே.
 என்று போற்றித் துதிக்கிறது அபயாம்பிகை சதகம்.
 (தொடரும்)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com