திருமணக் கோலத்தில் அருளும் திருமுருகன்!

மலையே மயில் வடிவில் அமைந்து, எந்நேரமும் திருமணக்காட்சியில் அருள்பவர் மயிலம் முருகன்.
திருமணக் கோலத்தில் அருளும் திருமுருகன்!

மலையே மயில் வடிவில் அமைந்து, எந்நேரமும் திருமணக்காட்சியில் அருள்பவர் மயிலம் முருகன். புராண காலத்தோடு தொடர்புடைய மயிலம் பொம்மபுர ஆதீனத்தின் திருப்புகழ் திருத்தலம் இது. வைகாசி விசாக நன்னாளில் இத்தலத்தைப் பற்றி அறிவோம்.
 முருகனோடு போர் செய்து, முடிவில் முருகப்பெருமானின் பேருருவத்தைக் கண்ட சூரபதுமன், நல்லறிவு பெறுகிறான். தன் தவறுக்கு வருந்தி மன்னித்திட வேண்டுகிறான். தன்னை மயில் வாகனமாக ஏற்றுக்கொள்ள வரம் கேட்கிறான்.
 அந்த வேண்டுதலை ஏற்ற முருகப்பெருமான் அதற்குரிய வழியைக் கூறினார். அதன்படி, வராக நதிக்கரையில் மயில் வடிவில் நின்று தவம் செய்தான். தவத்தின் பயனால் மயில் வாகனமானான். அதன், ஐதீகத்தின்படி இம்மலையும் வடக்கு நோக்கி அமர்ந்த நிலையில், மயிலாகக் காட்சி தருவதால் இத்தலம் "மயிலம்' எனப்போற்றப்படுகிறது.
 தல வரலாறு: கயிலாயத்தில் மேற்கு வாயிலின் சிவகணத் தலைவரான பணியாற்றியவர் சங்கு கன்னர். இவர் சிவபெருமானின் திருவிளையாடல்படி பூவுலகில் வீரசைவநெறி தழைக்கவும், சித்தர்களின் கொள்கைகளை தெளிவுபடுத்தவும், தென்னாட்டில் பிறக்க பணிக்கப்பட்டார்.
 அப்போது முருகனுடன் போர் செய்ய வேண்டிவரும் என்றும், அந்த சமயத்தில் சிவனின் அருளும், முருகனின் அருளும் கிடைக்கும் என்றார் கயிலைநாதன்.
 அதன்படியே இன்றைய மயிலம் மலைக்கு கிழக்கேயுள்ள விழுப்புரம் மாவட்டம், பொம்மையார் பாளையம் என்ற ஊரில் இளம் பாலகனாக சங்கு கன்னர் தோன்றினார். பால வயதிலேயே சித்து வேலைகளைச் செய்ததால் "பாலசித்தர்' என்று பெயர் பெற்றார். மயிலம் மலைக்கு வந்து தவமியற்றினார்.
 பாலசித்தர், முருகப்பெருமானைக் காண வேண்டும் என்ற பேராவலில் கடுந்தவம் புரிந்தார். ஆனால், முருகன் பாலசித்தர் மீதுள்ள சிறு கோபத்தில் காட்சி தர மறுத்தார். முருகனின் துணைவியர்களான வள்ளி-தெய்வானை இருவரும் முருகப்பெருமானிடம் எவ்வளவு எடுத்துச் சொல்லியும் முருகன் செவிசாய்க்க மறுத்தார். இதனால், கோபங்கொண்ட தேவியர் இருவரும், பாலசித்தரின் ஆசிரமம் வந்து சேர்ந்தனர்.
 தேவியர்களைக் காணாமல் தவித்த முருகன், வேடன் வடிவம் தாங்கி, அவர்களைத்தேடி மயிலம் மலைக்கு வந்து சேர்ந்தார்.
 வேடனைக் கண்ட பாலசித்தர், வந்தவர் யாரென்று அறியாமல், பெண்களைக் கவர வந்த கள்வன் என நினைத்து, வேடனுடன் போர் புரிந்தார். கடும் சண்டைக்குப் பிறகு, முருகன் தன் வேடத்தைக் களைத்தார். உண்மையை உணர்ந்த பாலசித்தர் முருகப்பெருமானை வணங்கி மகிழ்ந்து, வரம் வேண்டி நின்றார். மயிலம் மலை மீது நிரந்தரமாக திருமணக்கோலத்தில் காட்சி தந்து, நாடிவரும் பக்தர்களுக்கு அருள் வழங்கவேண்டும் என முருகனை வேண்டினார்.
 பாலசித்தரின் வேண்டுகோளின்படியே, இன்றும் திருமணக்கோலத்திலேயே பக்தர்களுக்கு காட்சியருளுகிறார் மயிலம் முருகப்பெருமான்.
 பாலசித்தரின் திருவருளால் அம்மலை அம்மாள் திருவயிற்றில் அவதரித்த சித்தர் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய தேசிகர். இவரே இம்மலையில் உள்ள திருக்கோயிலை நிர்வாகம் செய்யும் தொன்மையான பொம்மபுர ஆதீனத்தை நிறுவியவர். இவரைத்தொடர்ந்து இன்று இந்த பொம்மபுர ஆதீனத்தின் இருபதாம் பட்டம் ஆதீனத்தை நிர்வாகம் செய்து, மயிலம் முருகன் திருக்கோயில் மற்றும் சமயப்பணி, சமுதாயப் பணிகளையும் சிரமேற்கொண்டு வருகின்றனர்.
 ஆலய அமைப்பு: மலையடிவாரத்தில் சுந்தர விநாயகர், பாலசித்தர், அக்னி தீர்த்தம் உள்ளது. மலையின் மீது திருக்கோயில் அமைந்துள்ளது. மேலே செல்ல எளிதான படிகள் அமைந்துள்ளன. வாகனத்தில் வருவோர் வசதிக்காக மலைப்பாதையும் உள்ளது.
 மலைமீது ஐந்து நிலை ராஜகோபுரம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ஆலயத்தில் மூன்று சந்நிதிகள். விநாயகர், பாலசித்தர் அதிஷ்டானம், வள்ளி தெய்வானை உடனுறை சுப்பிரமணிய சுவாமி கிழக்கு நோக்கி அருள் புரிகின்றனர்.
 திருக்கோயிலுக்கு, திருக்கோயில் விழாவிற்கு, புதுச்சேரி மாசி மகத்திற்கு என இங்கு மூன்று உற்சவ மூர்த்திகள் விளங்குகின்றனர்.
 பிரார்த்தனைத் தலம்: முருகன் திருமணக்கோலத்திலேயே எந்நேரமும் காட்சி அளிப்பதால் திருமணம் தொடர்பான எந்த வேண்டுதல்களும் எளிதில் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
 விழாக்கள்: பங்குனியில் பிரமோற்சவம், தைப்பூசம், மாசி மகம், வைகாசி விசாகம், கிருத்திகை, பாலசித்தர் குரு பூஜை எனப் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
 வரும் வைகாசி விசாகத்தன்று (25.05.2021− செவ்வாய்க்கிழமை) மயிலம் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், இரவு முருகப்பெருமான் கிரிவலக்காட்சியும் நடைபெறும்.
 அமைவிடம்: விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டத்தில் திண்டிவனத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவில் மயிலம் உள்ளது.
 - பனையபுரம் அதியமான்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com