பொருநை போற்றுதும்! 146: டாக்டர் சுதா சேஷய்யன்

சுதேசி நாவாய்ச் சங்கம் தொடங்கப்பட்டபோது, அந்த நிறுவனத்திற்கென்று எப்படிப்பட்ட திட்டங்கள் வரையப்பட்டன தெரியுமா? 
பொருநை போற்றுதும்! 146: டாக்டர் சுதா சேஷய்யன்

சுதேசி நாவாய்ச் சங்கம் தொடங்கப்பட்டபோது, அந்த நிறுவனத்திற்கென்று எப்படிப்பட்ட திட்டங்கள் வரையப்பட்டன தெரியுமா? 
* முதலில் தூத்துக்குடி - கொழும்பு மார்க்கத்திலும், பின்னர் தேவைப்படுகிற மார்க்கங்களிலும் கப்பல்களைச் செலுத்தி, பிரயாணத்தையும் வியாபாரத்தையும் செளகரியப்படுத்துதல்; 
* இந்தியர்கள், இலங்கையர்கள், ஆசியர் ஆகியோரைக் கப்பல் தொழிலில் பழக்குவித்து நற்பலன் அடையச் செய்தல்; 
* இந்தியர்கள், இலங்கையர்கள், ஆசியர் ஆகியோரைக் கப்பல் கட்டுவிப்பதிலும் கப்பல் செலுத்துவதிலும் பயிற்றுவித்தல்; 
* இந்தியர்கள், இலங்கையர்கள், ஆசியர் ஆகியோருக்குக் கப்பல் தொழிலை முறையாகக் கற்பிக்கக் கலாசாலைகள் ஏற்படுத்தல்; 
* கப்பல் தொழிலிலும், கப்பல் வழி வணிகத்திலும் இந்தியர்கள், இலங்கையர்கள், ஆசியர்கள் ஆகியோருக்கு ஐக்கியத்தை உண்டு பண்ணுதல்; 
* கப்பல்கள் மற்றும் யந்திரப் படகுகள் கட்டுவதற்கான தக்க துறைகளை நிர்மாணித்தல். 
எப்படி இருக்கிறது? ஏதோ கடலியல் பல்கலைக்கழக நிர்மாணம் போலிருக்கிறதா? ஆமாம், பண்டைய பாரதத்தின் கடலியல் செயல்பாடுகள் போன்று, "சுதேசி ஸ்டீம் நாவிகேஷன் கம்பெனி'யும் பிரமாண்டமாகச் செயல்படவேண்டும் என்றுதான் வ. உ. சி. விரும்பினார். அதற்காகத் தம்முடைய பொருளையும் வசதிகளையும் இழந்தார். மனைவி, மக்கள் நோயுற்றபோதும் கவலைப்படாமல், கடவுள் பார்த்துக்கொள்வார் என்று கூறிவிட்டு, நிறுவனத்தை நிலைப்படுத்துவதற்கு அலைந்தார். 
வ. உ. சி-யின் சுதேசி நாவாய்ச் சங்கத்தின் மாட்சியையும் வீழ்ச்சியையும் புரிந்துகொள்ள வேண்டுமெனில்,அப்போதைய மதராஸ் மாகாணத்தின் அரசியல்-பொருளாதார நிலைமையையும், நாடு முழுவதும் பரவிக் கொண்டிருந்த சுதந்திர தாகத்தின் வீச்சையும் தெரிந்து கொள்ளவேண்டும். 
அந்நியப் பொருட்கள் பகிஷ்கரிப்பில் பலரும் பங்கேற்றனர். சுதேசிப் பொருட்களையே பயன்படுத்த வேண்டும் என்னும் எண்ணம் மேலோங்கியது. பிரிட்டிஷ் பொருட்கள் வேண்டாம் என்று ஒதுக்கத் தலைப்பட்டபோது, எந்தக் குறிப்பிட்ட பிரிட்டிஷ் நபர் மீதும் மக்களுக்கு வெறுப்பு இருக்கவில்லை. 
தற்சார்பு (சுயச்சார்பு) என்பதே அப்போதைய குறிக்கோள். தற்சார்பு இருந்தால், வேற்று நாட்டவர்கள் நம்மை ஏய்ப்பதைத் தடுக்கலாம் என்பதே நோக்கம். 
சுதேசியத்தின் வழியாக நம்மை நாமே ஆண்டு கொள்வது நல்லது என்னும் எண்ணம் மேலோங்கியதேயன்றி, அடுத்தவரை அழிக்க வேண்டும் என்று இந்தியர்கள் நினைக்கவில்லை. 
1906 மார்ச் முதல் 1911 நவம்பர் வரை, மதராஸ் மாகாணத்தின் கவர்னராகப் பொறுப்பு வகித்தவர் வென்லாக் ஆறாவது பாரன் என்றறியப்பட்ட ஆர்தர்லாலி அவர்கள். இவருடைய காலத்தில் நன்மைகள் பலவற்றை மாகாணத்திற்குச் செய்தார். வேளாண்மைச் செயல்பாடுகள், தொழில்நுட்பக் கல்வி ஆகியவை தொடங்கப்பட்டன. தொழிலகங்கள் அமைப்பதற்கும் விதையூன்றப்பட்டது. 
வரலாற்று ஆய்வாளர்கள் லாலியை மறக்கவே முடியாது. தொல்லியல்ஆய்வுகளுக்கான களம் நிறுவப்பட்டது. தொல்லியல் துறையில் கண்காணிப்பாளர், உதவிக் கண்காணிப்பாளர் போன்ற பொறுப்புகளை மாகாணத்தில் லாலி ஏற்படுத்தினார். மதராஸ் ஆவண அலுவலகம் என்றே பிறரால் அறியப்பட்டுப் புகழ்பெற்ற மைய ஆவண அலுவலகம் இவருடைய காலகட்டத்தில்தான் தொடங்கப்பட்டது. 
1909 அக்டோபரில், எழும்பூரில் புதிய கட்டடத்தில், மைய ஆவண அலுவலகம் தொடங்கப்பட்டபோது, லாலி வெளியிட்ட ஆணைகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை (இதே கட்டடத்தில்தான், மைய ஆவணஅலுவலகமாக இருந்தது, இப்போது தமிழ்நாடு ஆவணக்காப்பகமாகச் செயல்படுகிறது). 1899-வரையிலான தலைமைச் செயலக ஆவணங்கள் அனைத்தையும் ஆவண அலுவலகத்திற்கு மாற்றுமாறு லாலி உத்தரவிட்டார். 
வருவாய் வாரியம், உயர்நீதிமன்றம், சர்ஜன் ஜெனரல் அலுவலகம், கணக்காயர் அலுவலகம், கர்நாடகச் சம்பளங்களுக்கான செலவின அதிகாரி போன்ற பல்வேறு அலுவலகங்களின் ஆவணங்களும் கலெக்டர் அலுவலகங்களின் ஆங்கிலப் பதிவுகளும் இங்கு வைக்கப்பட்டன. 
பொதுப்பணித்துறை (அப்போதைய மராமத்துத் துறை) தவிர, பிற துறைகள் யாவும், நடப்பு ஆண்டுக்கு எட்டு ஆண்டுகள் முந்தையதானஆவணங்களை மைய அலுவலகத்திற்கு அனுப்பிவிடவேண்டும். பொதுப்பணித்துறை, நடப்பு ஆண்டுக்குப் பதினாறு ஆண்டுகள் முந்தையதான ஆவணங்களை அனுப்பவேண்டும். 
ரயில்வே போக்குவரத்து உள்ளிட்ட செயல்பாடுகளிலும், மின்டோ-மார்லி சீர்திருத்தங்களிலும் அக்கறை காட்டிய லாலி, மதராஸ் கவர்னராக நியமிக்கப்பட்டபோது, தென் ஆஃப்ரிக்காவில் இருந்தார். 
மதராஸ் கவர்னராக நியமிக்கப்பட்ட நிலையில், அண்ணல் காந்தியடிகளைச் சந்தித்து வாழ்த்தும் பெற்றார். 
கோவையில் லாலி சாலை, ஊட்டியில் லாலி கழகம், ஆர்.கே.நாராயணின் எழுத்துகளில் தனியிடம் என்று லாலி நினைவுகூரப்பட்டாலும், அடக்குமுறை ஆட்சியிலும், இந்தியர்களுக்கு எதிரான நீதிமன்ற வழக்குப் பதிவுகளிலும்கூட லாலி பெரும் பங்காற்றினார். 
அர்பத்நாட் வங்கி வீழ்ந்தபோது, மக்களின் பணத்தை மீட்டுத் தருகிற முயற்சியில் மதராஸ் அரசு ஈடுபடும் என்று லாலி அறிவித்திருக்கலாம். இத்தனைக்கும், இவருக்கும் அதில் பங்குகள் இருந்தன. ஆனால், காலதாமதமாக இவர் செயல்பட்டபோது, மக்களின் வருத்தம் எல்லைமீறி இருந்தது. 
வெளிநாட்டவரால் ஏமாற்றப்படுகிறோம் என்னும் எண்ண அலை, நாடெங்கும் பொங்கிப் பிரவகித்துக் கொண்டிருந்த நிலையில்தான், வ. உ. சி-யின் சுதேசி முயற்சி எழுந்தது. 
சொல்லப்போனால், நெல்லைப் பகுதிகளின் சுதேசி எண்ணங்கள், வ. உ. சி-க்கும் முன்பாகவேதொடங்கிவிட்டன. 1905 செப்டம்பரிலேயே, திருநெல்வேலியில் வழக்கறிஞராக இருந்த ராமகிருஷ்ண ஐயர் என்பவர், சுதேசிக் கூட்டங்களை நடத்தினார். 
"உனக்கு நீயே துரோகியாக இருக்காதே' என்னும் தொடக்க மொழியும், "எழு, விழி' என்னும் நிறைவு மொழியும் கொண்ட ஐயரின் உரைகளும் நோட்டீஸ்களும் மக்களைக் கவர்ந்தன. ஆனாலும், பிரிட்டிஷாருக்கு நெருக்கமாக இருந்த நீதிபதி ஒருவரால், ஐயரின் முயற்சிகள் தடுக்கப்பட்டு, மிரட்டப்பட்டு, நிறுத்தப்பட்டன. 
1906 ஜுன் மாதம் முதல், சுதேசி இயக்கம் குறித்த கூட்டங்களில் வ. உ. சி பங்கேற்கத் தொடங்கினார். 1906 ஆகஸ்டில், சுதேசி இயக்கத்தின் ஓராண்டு நிறைவினைப் போற்றும் வகையில், ஹிந்து பத்திரிகையின் நிறுவனரும், சுதேசிப் பிரசாரகர்களில் ஒருவருமான ஜி. சுப்பிரமணிய ஐயரை வரவழைத்துக் கூட்டம் நடத்தினார். 
தம்முடைய உரையின் நிறைவில், தங்களுக்குள் இருக்கக்கூடிய அனைத்து வேற்றுமைகளையும் கருத்து வேறுபாடுகளையும் தொலைத்துவிட்டு, மக்கள் அனைவரும் ஒன்றுகூடி, தங்களின் நியாயமான கோரிக்கைகளை அரசிடம் வைக்கவேண்டும் என்று சுப்பிரமணிய ஐயர் கருத்துத் தெரிவித்தார். சுதேசி நாவாய்ச் சங்கம் ஒன்று தொடங்கினால் நன்றாக இருக்கும் என்று மேலும் கூறினார். 
வ உ சி-க்குப் பொறி தட்டியது.
(தொடரும்)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com