பொருநை போற்றுதும்! - 168

திருநெல்வேலி சென்னா' என்றொரு மூலிகை, மிகவும் பிரசித்தமானது. எகிப்திய சென்னா, கார்டூம் சென்னா, அலெக்ஸாந்திரிய சென்னா, கிழக்கிந்திய சென்னா என்றெல்லாமும் இம்மூலிகைக்குப் பெயர்கள் உள்ளன.
பொருநை போற்றுதும்! - 168

"திருநெல்வேலி சென்னா' என்றொரு மூலிகை, மிகவும் பிரசித்தமானது. எகிப்திய சென்னா, கார்டூம் சென்னா, அலெக்ஸாந்திரிய சென்னா, கிழக்கிந்திய சென்னா என்றெல்லாமும் இம்மூலிகைக்குப் பெயர்கள் உள்ளன. ஆனாலும், திருநெல்வேலி சென்னா என்பதுதான் மருந்தியல் மற்றும் வணிக உலகங்களில் மிகவும் பரிச்சயமான பெயர். 

1905-ஆம் ஆண்டு வாக்கில், அரேபியாவிலிருந்து விதைகளை இறக்குமதி செய்த ஜி.ஏ.ஹ்யுஸ் என்னும் ஆங்கிலேயர், தச்சநல்லூர் பகுதிகளில் விதைகளைத் தூவிவிட்டார். நிறைய வளர்ந்து, இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டதால், திருநெல்வேலி என்னும் பெயர் ஒட்டிக் கொண்டது. சீமை நிலவாகை, சூரத் நிலவாகை, சீமை நில ஆவாரை, சூரத் நில ஆவாரை போன்ற பெயர்களும் இதையே குறிக்கும். 

திருநெல்வேலி சென்னாவுக்கு ஐரோப்பியச் சந்தையில் மதிப்பு அதிகம். இந்த மூலிகையில், "சென்னோ ûஸட்' அல்லது "சென்னா க்ளைகோûஸட்' என்று வழங்கப்படுகிற வேதிப்பொருள் உள்ளது. மலச்சிக்கலைத் தீர்க்கும் மருந்துகளிலும், அறுவை சிகிச்சை மற்றும்  குடல் சிகிச்சை செயல்முறைகள் சிலவற்றிலும் இந்த வேதிப்பொருள் நிரம்பப் பயன்படுத்தப்படுகிறது. மானூர் பகுதிகளில் விளைவிக்கப்படும் திருநெல்வேலி சென்னா, பெரும்பான்மையும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதைக் கொண்டு, மூலிகைத் தேநீர் தயாரிக்கப்படுகிறது.  

இந்த சென்னாவைச் "சீமை' என்னும் முன்னொட்டோடு குறிப்பிடவேண்டும் என்றால், உள்நாட்டு வகை ஏதாவது உண்டா? உண்டு. நில வாகை, நில ஆவாரை, ஆவாரை இலை என்னும் பெயர்களால் சுட்டப்படுவது உள்நாட்டு வகை. அரேபிய அல்லது எகிப்திய வகை இறக்குமதி செய்யப்பட்டுப் பயிரிடப்பட்டவுடன், உள்நாட்டு வகையை அடையாளப்படுத்திக் காட்டுவதற்காக, "நாட்டு' என்னும் முன்னொட்டைச் சேர்த்துவிட்டார்கள். நாட்டு நிலவாகை, நாட்டு நில ஆவாரை என்று அழைக்கப்படுகிற இதற்கு, அகத்தியர் நிலவாகை என்றும் பெயருண்டு. 

தரையில் படர்ந்து கிளைத்து வளர்ந்து, மஞ்சள் வண்ணப்பூக்களைக் கொடுக்கும் அகத்தியர் நிலவாகைக்கும், திருநெல்வேலி சென்னாவின் மருத்துவ குணங்கள் அனைத்தும் உண்டு. காண்பதற்கும் இரண்டும் ஒரே போன்று இருக்கும். அனுபவசாலிகள் தனித்தனியாக அடையாளம்  காண்பார்கள். 

நெல்லைப் பகுதியில் விளைவிக்கப்பட்டு ஏற்றுமதியான பருத்திக்கு, லண்டன் சந்தைகளில் "தின்னி' அல்லது "டின்னி' (டின்னவேலி என்பதன் மரு) என்பதே பெயராக இருந்தது. சொல்லப்போனால், நெல்லை, ராமநாதபுரம், மதுரை போன்ற தென்னாட்டுப் பருத்தி அனைத்திற்கும் இப்பெயரையே பயன்படுத்தினர். 

ஆங்கிலேயர்கள் இப்பகுதிகளுக்கு வந்தபோது, மரங்கள் அடர்ந்த பாதைகளே போக்குவரத்துக்குப் பயன்பட்டிருந்தன. "சாலை' என்னும் பெயரால், இப்பாதைகள் அழைக்கப்பட்டன. மண்ணால் ஆன பாதைகளாக, இயல்பாக இருந்த கரிசல், செம்மண் பகுதிகளுக்குள் ஊடுருவி இவை சென்றது ஆங்கிலேயருக்குப் போதுமானதாக இல்லை. வணிக வண்டிகளும் ராணுவத் துருப்புகளும் சென்று வருவதற்கு ஏதுவாகச் சாலைகளை அவர்கள் மாற்றியமைத்தனர். 

ஆனால், ஏதோ நம்மவர்களுக்குப் பராமரிப்பு தெரியாதது போலவும், "பராமரிப்புக்குப் பணம் செலவழிக்க இந்தியர்கள் தயாராக இல்லை' என்றும், "பிரச்னை பராமரிப்பில் இல்லை, இந்தியர்கள் சாலைகளைச் சரியாகக் கட்டவில்லை' என்றும் பதிவு செய்திருப்பதை வாசிக்கும் போது வருத்தமாகத்தான் இருக்கிறது. 

கோவில்பட்டியிலிருந்து பாளையங்கோட்டைக்குச் செல்லும் சாலையில், கரிசல் மண்ணுக்கு இடையூடாக அது செல்வதால், ஆண்டில் நான்கு மாதங்களுக்குத் துப்பாக்கித் துருப்புகளை வழிநகர்த்த முடியவில்லை என்று ஆதங்கப்பட்டிருக்கிறார்கள். 

1827 வாக்கில், சாலைகளைச் சீரமைத்து ராணுவ வசதிகளைப் பெருக்குவதற்காக ஆண்டுக்கு ரூ.2,300 செலவழிக்கலாம் என்னும் திட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்குப் பின்னர், வண்டிகளுக்குப் போக்குவரத்து வரிவிதித்து, சுங்கச் சாவடிகளை அமைக்கலாமா என்று மதராஸ் அரசாங்கம் ஆலோசித்துள்ளது. சாலைகள் சீரற்று இருப்பதாகவும், இவற்றில் பயணித்து அவதிப்படுவோருக்கு வரி என்பது கூடுதல் சுமை என்று கலெக்டர் மறுதலித்துள்ளார். 

1836-இல், சாலைகளில் இருப்புத் தடங்களை அமைத்து, அவற்றில் மாடுகள் பூட்டிய கூண்டுகளை இழுத்து வரச் செய்யலாம் என்றும், இவ்வாறாக மதுரைக்கும் பாளைக்கும் இணைப்பு ஏற்படுத்தலாம் என்றும் கேப்டன் காட்டன் (பின்னாட்களில் சர் ஆர்தர் காட்டன் என்றழைக்கப்பட்டவர்) முன்மொழிந்துள்ளார். ஆனால், அப்படியொரு திட்டம் மதராஸ் நகர்ப் பகுதிகளில் பரிசீலிக்கப்பட்டுத் தோல்வியடைந்ததால், இதுவும் கைவிடப்பட்டது. 

1847-48 வாக்கில், மதராஸ் மாகாணம் முழுமைக்குமான "சாலைக் கண்காணிப்பு அலுவலர்' என்னும் பதவி உருவாக்கப்பட்டு, ஆண்டுக்கு ஏறத்தாழ ரூ.4 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டாலும், நெல்லைக்கு ஒன்றும் தரப்படவில்லை. 

1846-இல், கோயிலில் சேரும் உபரித் தொகையை (கோயில் செலவுகளும் திருப்பணிகளும் போக) சாலைச் சீரமைப்புக்குப் பயன்படுத்தலாம் என்னும் பொது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியிலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் சாலையைக் கட்டமைக்க, இப்படியொரு நிதி, ரூ. 1 லட்சம் என்னும் அளவில் வழங்கப்பட்டுள்ளது. 

பின்னர், ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து சாத்தூர், எட்டையபுரத்திலிருந்து தூத்துக்குடி சாலைகளுக்கும் இவ்வாறாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

1853-க்குப் பின்னர், குளங்களிலும் நீர்நிலைகளிலும் எடுக்கப்பட்ட புல், நீர்க்களை போன்றவற்றை ஏலம் விட்டுக் கிட்டிய பணத்தில் சாலைகளுக்குச் செலவு செய்ய கலெக்டர் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

1841 முதல் 1855 வரை திருநெல்வேலி மாவட்டப் பொறியாளராகத் திகழ்ந்த கேப்டன் ஹார்ஸ்லி அவர்கள்தாம், பல்வேறு சாலைகள் வேயப்பட்டதற்கும் பாலங்கள் கட்டப்பட்டதற்கும் காரணகர்த்தா. நெல்லையின் மீது நிரம்பப் பிரியம் கொண்டவராகவே இருந்திருக்கிறார். 

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com