அண்டை வீட்டாரின் உரிமைகள்!

அண்டை வீட்டாருடன் நல்லுறவைப் பேணி வாழ்வதை இஸ்லாம் வலியுறுத்துகிறது.
அண்டை வீட்டாரின் உரிமைகள்!


அண்டை வீட்டாருடன் நல்லுறவைப் பேணி வாழ்வதை இஸ்லாம் வலியுறுத்துகிறது.  பக்கத்து வீட்டாருக்கு நன்மை செய்து வருவது முஃமினின் பண்பாக இருக்க வேண்டும். "அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்புவோர், தன் பக்கத்து வீட்டாருக்கு நன்மை புரியட்டும்' என நபி (ஸல்) அவர்கள் உபதேசித்துள்ளார்கள்.
அண்டை வீட்டாருக்கு நன்மை செய்து வருவதென்பது, "அவர் தேவைக்காக முறையிட்டால், இயன்ற அளவு உதவி செய்வது; விசேஷமான உணவு தயாரித்தால், அவருக்கும் வழங்கி மகிழ்விப்பது; அவர் நோய்வாய்ப்பட்டால், உடல்நலம் விசாரிப்பது; மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது; பக்கத்து வீட்டார் மரணித்துவிட்டால், அவர்களது நல்லடக்கம் வரை கலந்து கொள்வது; அவரது பிள்ளைகளுக்கு உதவி செய்வது போன்றவையாகும்.
பக்கத்து வீட்டாரின் இடத்தைப் பறிப்பது, தமது வீட்டு கழிவுநீரை அண்டை வீட்டிற்கு செல்ல வைப்பது, பெரும் சப்தங்களை எழுப்பி இடையூறு செய்வது, அவர்களது சோகத்தின் போது, தமது வீட்டில் மகிழ்வான விசேஷங்களை வேண்டுமென்றே கொண்டாடுவது, அவர்களது பிள்ளைகளை விரட்டுவது போன்றவை யாவும் அண்டை வீட்டாருக்கு செய்யும் தீங்குகளாகும். 
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்ணைக் குறித்து வினவப்பட்டது.  ""ஒரு பெண் இரவில் நின்று அதிகமாக தொழுகிறாள், பகலில் நோன்பு நோற்கிறாள்; ஆனால், அவள் அண்டை வீட்டாருக்குத் துன்பம் தருகிறாள்!'' என்று சொன்னபோது, ""அவள் நரகவாசி!'' என நபியவர்கள் பதிலளித்தார்கள்.
""ஏ, ஜுபைர்!  முஸ்லிம் சகோதரர்களை கண்ணியப்படுத்துவாயாக!  அண்டை அயலாருடன் அழகிய முறையில் பழகுவீராக! பாவம் புரிபவர்களுடன் எவ்விஷயத்திலும் சேர்ந்துவிடாதிருப்பாயாக!  எவர் இவைகளைப் பேணுவாரோ, அவர் சுவர்க்கத்தில் வேதனையின்றி, கேள்விக் கணக்கின்றி பிரவேசிப்பார்!'' என்று நபி
(ஸல்) அவர்கள் நபித்தோழர் ஜுபைர் (ரலி) அவர்களுக்கு உபதேசித்தார்கள்.
இறைவனுக்கு செய்ய வேண்டிய கடமைகள் இருப்பது போல், அடியார்களிடமும் நமக்குக் கடமைகள் இருக்கிறது.  அதில் நமது பக்கத்து வீட்டாருக்கு நிறைவேற்ற வேண்டிய உரிமைகளை நிறைவேற்றிட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com