பஞ்சம் நீங்கியது!

மனிதரால் முற்றிலும் இயலாத காலத்தில், இறைவனை நாடி காப்பாற்றும்படி வேண்டினால், மக்களின் அழுகுரலைக் கேட்டு நிச்சயம் விடுவிப்பார். 
பஞ்சம் நீங்கியது!

கர்த்தர் ஆபத்து காலத்தில், பஞ்ச காலத்தில், அற்புதம் அதிசயம் மூலம் நம்மை விடுவிப்பவர். மனிதரால் முற்றிலும் இயலாத காலத்தில், இறைவனை நாடி காப்பாற்றும்படி வேண்டினால், மக்களின் அழுகுரலைக் கேட்டு நிச்சயம் விடுவிப்பார். 

இயேசு பிறப்பதற்கு முன்பு நடந்த சம்பவம் இது. சிரியாநாட்டின் அரசன், பக்கத்து நாடான சமாரிய நாட்டின் மீது படையெடுத்து வந்தான். சமாரியா தேசம் முழுவதும் முற்றுகையிடப் பட்டது. நகரத்தின் வாசல் மூடப்பட்டது. ஒருவரும் வெளியே வரவில்லை. 

போரிடுவதற்கு சமாரிய அரசனிடம் போதிய படை பலம் இல்லை. முற்றுகை மூன்று மாதங்கள் தொடர்ந்தது. நகரத்துக்குள் மக்களும் அரசனும் மாட்டிக் கொண்டனர். உணவு, தானியம், ஆடு, மாடுகள் உள்ளே போகவில்லை. கடுமையான பஞ்சம். 

இருந்த ஆடு, மாடுகள், கழுதை, குதிரை எல்லாவற்றையும் வெட்டி பசிக்கு உண்டனர். தானியங்கள் எல்லாம் காலியாயிற்று. ஒரு கழுதையின் தலை 80 வெள்ளிக் காசுக்கு விற்றது. கடுமையான பஞ்சம் பசி, பட்டினி. 

சிரியா நாட்டு ராஜாவோ, எவ்வளவு நாள்கள் நீடித்தாலும் முற்றுகையை கைவிடாமல், நல்ல உணவுப் பொருள்கள், ஆடு, மாடுகள், திராட்சை ரசம் எல்லாம் சேமித்து, தனது படை வீரர்களுக்கு கொடுக்கச் செய்தான்.

பஞ்சத்தில் சிக்கிய சமாரிய ராஜா தம் பாதுகாவலனை அழைத்து "தீர்க்கதரிசி எலிசாவிடம் சென்று கடவுளிடம் வேண்டும்படியும், முற்றுகையின் முடிவு என்னவாக இருக்கும்?' என்று அவரிடம் கேட்கச் சொன்னார். 

தீர்க்கதரிசி எலிசாவிடம் கேட்டபோது ""கர்த்தரின் வார்த்தையை கேளும்! நாளை இந்நேரம் சமாரியாவின் ஒலிமுக வாசலில் ஒரு சேக்காலுக்கு (ஒரு கூலிப் பணம்) ஒரு மரக்கால் வாற் கோதுமை மாவு விற்கப்படும். ஒரு சேக்காலுக்கு இரண்டு மரக்கால் வாற் கோதுமை விற்கப்படும்!'' என்றார் (2 இராஜாக்கள் 7 : 1). பாதுகாவலனால் நம்ப முடியவில்லை! 

அன்று இரவு கர்த்தர் ஒரு பெரிய சப்தத்தை உண்டாக்கி, சிரியா படைவீரர்களைக் கேட்கச் செய்தார்.  ஒரு பெரும் படை அவர்களைக் கொல்ல வருகிறது என ஒரு பெரும் பீதியையும் பயத்தையும் உண்டாக்கினார். 

அவ்வளவுதான்! சிரியா படையினர் எல்லாவற்றையும் அப்படியே விட்டு விட்டு, உயிர் பிழைத்தால் போதும் என ஓட்டம் பிடித்தனர். சமாரிய நாட்டின் பிரதான கதவு திறக்கப்பட்டது. வெளிவந்த மக்கள் சிரியா படைகளின் தானியங்களை வண்டியில் ஏற்றி விடிவதற்குள் நகரத்துக்குள் வந்தனர். வியாபாரம் களை கட்டியது. ""ஒரு சேக்காலுக்கு ஒரு வாற் கோதுமை மாவு; ஒரு சேக்காலுக்கு இரண்டு வாற்கோதுமை வாங்கலையோ!'' என்று கூவி விற்றனர்.

 ஆம்! பஞ்சம் நீங்கியது. இறைவனின் தீர்வு மகத்துவமானது! 
-முனைவர் தே. பால் பிரேம்குமார்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com