நாவில் மறைந்திருக்கும் சைத்தான்!
By DIN | Published On : 19th November 2021 02:27 PM | Last Updated : 19th November 2021 02:27 PM | அ+அ அ- |

நாவில் மறைந்திருக்கும் சைத்தான்!
நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: மெளனமாக இருங்கள்; அது சைத்தானை விரட்டி அடிக்கச் செய்யும் வழிகளுள் ஒன்றாகும். அது உங்கள் மார்க்க விஷயங்களில் உங்களுக்கு உதவி செய்யும்.
சந்தேகமில்லாமல் நாவானது சைத்தான் கையில் சிக்கிய கயிறுதான். மனிதனை எல்லாத் துன்பத்திலும் சிக்க வைத்து விடுவது அவனது நாவுதான். எதற்கெடுத்தாலும் குதர்க்கம் பேசும் பழக்கமும், அதிகம் பேசும் பழக்கமும் ஒருவருக்கிருந்தால், அவர் சைத்தானுக்கு உதவி செய்கிறார்.
அர்த்தமற்ற, ஆதாரமற்ற, யூகங்களில் ஆன பேச்சுகளால் எவ்வித பயனும் இல்லை. அல்லாஹ்வின் திக்ருவை மறந்த நாவுதான் வீண் பேச்சுக்களில் ஈடுபடும்.
நாவுதான் அனைத்து பாவங்களுக்கும் காரணமாகிறது என அபுபக்கர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
ஒருவரது பேச்சு அவருடைய தரத்தை நிர்ணயிப்பதாகும். ஆகவே, வார்த்தைகளை எண்ணி, யோசித்து விட்டுப் பேச
வேண்டும்.
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் உபதேசிக்
கிறார்கள்.
காரியமற்ற பேச்சில் ஈடுபடாதீர்கள். பேசவேண்டிய சந்தர்ப்பம் வந்தால், பயனுள்ள முறையில் பேசுங்கள். ஏனெனில் பலர் எந்தச் சந்தர்ப்பமுமின்றி பேசிக் கொண்டிருக்கின்றனர்.
அறிவுக்கூர்மை உள்ளவரோடு அல்லது அறிவற்றவர்களோடு சூடான விவாதத்தில் உங்களை நீங்கள் ஈடுபடுத்திக் கொள்ளாதீர்கள். அவர் அறிவுக்கூர்மை உள்ளவராக இருந்தால் உங்கள் மீது கோபப்படுவார்; உங்களை வெறுப்பார். அவர் அறிவற்றவராகவும், கல்வியைப் பெறாதவராகவும் இருந்தால் உங்களுக்குத் தீங்கு செய்ய முயற்சிப்பார்.
உங்களுடைய சகோதரர் உங்கள் முன்னால் இருக்கும்போது அவரைப் பற்றி எவ்வாறு பேசவேண்டும் என விரும்புவீர்களோ, அவ்வாறே அவர் இல்லாதபோதும் அவரைப் பற்றி பேசுங்கள். தேவைப்படும் போதுதான் பேச வேண்டும். அமைதியாக இருக்க வேண்டிய நேரத்தில் அமைதியாக இருப்பது மிக முக்கியம் ஆகும்.
ஒரு முஸ்லிம் பயனற்ற பேச்சுக்களில் இருந்து எந்தளவு தன்னை விலக்கி வைத்துக் கொள்வாரோ, அந்தளவு அவரது மதிப்பு அல்லாஹ்விடம் உயரும்.
நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:
நாக்கு இடறிவிடுவதால் ஏற்படும் காயத்தைவிட, கால் இடறி ஏற்படும் காயம் குறைவு. மனிதனுக்கு எதிரான சைத்தான் பற்களுக்கிடையில் நாவில் மறைந்திருக்கிறான். சந்தேகம், வெறுப்பு, பொறாமை, குரோதம் ஆகிய தீமைகளை வார்த்தைகளின் மூலம் மனிதர்களுக்கிடையே விதைக்கிறான். அதனால், மனித சமுதாயமே நிம்மதியற்றுப் போய் விடுகிறது. நல்ல தரமான, கண்ணியமான, உண்மையான வார்த்தைகளை அளவோடு பேசுவதால், அல்லாஹ்வின் அருளுக்கு உரியவராகி விடலாம்.
அவசியமற்ற வார்த்தைகள் பேசுவதைவிட அல்லாஹ்வை திக்ரு செய்வதில் நாவைத் திளைக்கச் செய்வது நன்மை பயக்கும்!
- ஹாஜி மு.முகம்மது அன்வர்தீன்