தவிட்டுக்குப் பிள்ளை தரும் விராலிமலை தெய்வம்!  

வயலூர் முருகனைப் பாடி துயில் கொண்டிருந்த அருணகிரிநாதரை விராலிமலைக்கு வரச் சொன்னார் முருகப்பெருமான்.  
தவிட்டுக்குப் பிள்ளை தரும் விராலிமலை தெய்வம்!  
தவிட்டுக்குப் பிள்ளை தரும் விராலிமலை தெய்வம்!  

முருகப் பெருமானிடம் பிரணவ மந்திர உபதேசம் பெற்றவர்களில் தேவர்களுள் சிவபெருமான், முனிவர்களுள் அகத்தியர், மனிதர்களுள் அருணகிரிநாதர் ஆவர். அருணகிரிநாதர் "திருப்புகழ்' பாடி அஷ்டமா சித்தி பெற்ற திருத்தலம் விராலிமலை ஆகும்.

வயலூர் முருகனைப் பாடி துயில் கொண்டிருந்த அருணகிரிநாதரை விராலிமலைக்கு வரச் சொன்னார் முருகப்பெருமான்.  

செல்லும்போது நடுக்காட்டில் வழி தெரியாமல் தவித்தார் அருணகிரியார். அப்போது வேலவன், வேடுவன் உருவில் வந்து வழி காட்டினார். அருணகிரியாருக்கு "சந்தானக்கோட்டம்' என்ற இடத்தில் தன்னுடைய சுய உருவத்தைக் காட்டி ""அதோ தெரிகிறது பார் விராலிமலை!'' என்று கையால் சுட்டிக்காட்டியவர் சுப்பிரமணியர்.

திருப்புகழில் "புலிநுழை முழையுடைய விராலி' என்று பாடி பிரணவஞான உபதேசம் பெற்றதால் வினைதீர்க்கும் விராலிமலை ஞானத்தலமாக விளங்குகிறது. அருணகிரிநாதர் சிற்றின்பத்தில் இருந்து பேரின்பத்தை அடைய சுவாமி வழிகாட்டியதால் அருணகிரிநாதர் சந்நிதி பிரத்யேகமாக இங்கு அமையப்பெற்றுள்ளது. 

அருணகிரியார் திருப்புகழில், சோலைகளும், மயில்களும், சுனைகளும் மிகுந்த மலையில், தவத்தில் சிறந்த முனிவர்கள் மருத்துவ குணம் நிறைந்த குரா மரங்களின் உருவில், மரங்களோடு விரவியிருந்து சுவாமியை வழிபட்டனர் என்கிறார். அதனால் "விரவி - விரவிமலை' என்று பெயர் உண்டாகி, பின்னர் மருவி "விராலிமலை' என்றாயிற்று என்பர். இலை, பட்டை, வேர் என அனைத்திலும் மருத்துவ குணமுடைய விராலி என்னும் மூலிகைச்செடி இத்தலத்தில் அதிகமாக இருப்பதால் இப்பெயர் உண்டானது என்றும் கூறப்படுகிறது.

சரவணப் பொய்கையில் குழந்தையாக வந்த முருகனுக்கு வசிட்டரின் மனைவி அருந்ததி பாலூட்ட மறுத்ததால் - வசிட்டர் சாபம் தர, அதனால் முருகன் வசிட்டரைத் தண்டித்தார். பின்பு அருந்ததி, வசிட்டர் இருவரும் விராலிமலைக்கு வந்து முருகனை வழிபட்டு சாப விமோசனம் பெற்றனர்.

"விராலிமலைக் குறவஞ்சி' என்ற நூல் முத்துப்பழனிக்கவிராயர் என்பவரால் இயற்றப்பட்டுள்ளது. சதாசிவ பிரம்மேந்திரர், மடப்புறம் தட்சணாமூர்த்தி சுவாமிகள், தெற்குக்குடகு சதாசிவ சுவாமிகள், எச்சில்பொறுக்கி ஆறுமுக சுவாமிகள், சடைச்சாமியார் போன்ற பலர் இங்கு வாழ்ந்துள்ளனர்.

பிள்ளை வரம்: பிள்ளைச் செல்வம் வேண்டுவோர், தங்களுக்கு பிள்ளை பிறந்ததும், நேர்த்திக் கடனாக ஆறுமுகனாரிடமே பிள்ளையை கொடுத்து விடுவர். பிறகு தாய் மாமன் அல்லது சித்தப்பாக்கள் மூலமாக ஆறுமுகனாருக்குத் தவிட்டைக் கொடுத்துப் பிள்ளையை பெற்றுச் செல்லும் சடங்கு இங்கு பிரபலமானது.

ஊரின் நடுவே 207 படிகளுடன் மலை உச்சியில் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. தற்போது கோயில் இருக்குமிடத்தில் குரா மரம் ஒன்றிருந்ததாகவும், வேடன் ஒருவன் துரத்தி வந்த வேங்கை அந்தக் குராமரத்தினுள் புகுந்து மறைந்து விட்டதாகவும், அவ்விடமே ஆறுமுகனாரின் உறைவிடமாகக் கொண்டு வழிபடத் துவங்கியதாகவும் கூறுவர். மலையடிவாரத்தின் தென்பகுதியில் சரவணப்பொய்கை உள்ளது.

மலை வழியில், இடும்பன் சந்நிதி, பாறையைக் குடைந்தமைத்த மீனாட்சி சுந்தரேஸ்வரர், சந்தானக்கோட்டம், காசி விஸ்வநாதர் - விசாலாட்சி சந்நிதிகளும் உள்ளன. பிரகாரத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, அகத்தியர், அருணகிரிநாதர், சண்டிகேஸ்வரர், பைரவர் சந்நிதிகளும், காற்றாடி மண்டபமும் உள்ளது.

கருவறையில் முருகப்பெருமான் ஆறுமுகங்கள், பன்னிரு கரங்களுடன், வள்ளி, தெய்வானை சமேதராய் கல்யாணத் திருக்கோலத்தில் காட்சி அளிக்கின்றார்.

இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமியில் சங்காபிஷேகமும், வைகாசி மாதத்தில் 10 நாள்கள் விசாகத் திருவிழாவும் மறுநாள் தெப்பத்திருவிழாவும், ஆடி மூலத்தில் 3 நாள்கள் அருணகிரிநாதர் விழாவும், ஆவணி மூலத்தில் பிட்டுத் திருவிழாவும், புரட்டாசியில் நவராத்திரியும், ஐப்பசியில் 6 நாள்கள் கந்த சஷ்டி விழாவுடன், சூரசம்காரமும் நடைபெறும். தைப்பூச உற்சவம் பத்து நாள்களும், பங்குனி உத்திரத் திருவிழாவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.  திருக்கோயில் காலை 6 மணி முதல் பகல் 12 வரையும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.                                                                                                                                     
இவ்வாண்டு நவ.19-இல் திருக்கார்த்திகை தீபத்தன்று மகா அபிஷேகம் நடைபெறும். கார்த்திகைச் செல்வன் கழலடியை வணங்கி, அவனருள் பெறுவோம்!

அமைவிடம்: புதுக்கோட்டையிலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் விராலிமலை முருகன் திருத்தலம் அமைந்துள்ளது.
-ஆர். அனுராதா
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com