இறை உத்தரவின்படி எழுந்த சம்பத்கிரி! 

சம்பத்கிரியும் சப்தகிரியும் திருவண்ணாமலை மாவட்டம்  போளூரில் அமைந்துள்ள மலைகளாகும். செல்வம் அல்லது பொருள் என்பதன் வடமொழி வடிவம் "சம்பத்'.
இறை உத்தரவின்படி எழுந்த சம்பத்கிரி! 

சம்பத்கிரியும் சப்தகிரியும் திருவண்ணாமலை மாவட்டம்  போளூரில் அமைந்துள்ள மலைகளாகும். செல்வம் அல்லது பொருள் என்பதன் வடமொழி வடிவம் "சம்பத்'. கிரி என்றால் மலை. செல்வம்  இருக்கக்கூடிய மலை "சம்பத்கிரி'. கலியுகம் காக்கவந்த தெய்வமாக நரசிம்மர் சுயம்புவாக எழுந்தருளி அருள் வழங்குவது போளூர் சுயம்பு நரசிம்மர் கோயிலாகும். செல்வமாகிய பொருள் குடி கொண்ட ஊர் "பொருளூர்' - "போளூர்' என மருவி வழங்குகிறது.

சுயம்பு  நரசிம்மர்: ஒரு காலத்தில் மலை உடைக்கும் குழு ஒன்று அப்பகுதியில் பணியை செய்து கொண்டிருந்தது. அடுத்ததாக, சம்பத்கிரி மலையை உடைக்க வேண்டும். மேலிருந்து கீழாக மலையை உடைக்கும் பழக்கப்படி முதலில்மேலே சென்று உடைக்க போனார்கள். 

உளிபூஜை போட்டு குறியிட்டு உடைப்பது அவர்களின் வழக்கம்.  அப்படியே குழுவின் தலைவனும் பெருமாள்  பக்தனுமானவர் உளியை பூஜை செய்து  கல்லில் வைத்து முதல் தட்டு தட்டியவுடன், கல் தெறித்து அதிலிருந்து ரத்தம் வெளியாகித் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. 

தலைவனும், மற்றவர்களும் அதிர்ச்சி அடைந்து பயந்து மலையை விட்டு இறங்கி விட்டனர்.  

அன்றிரவு, பெருமாள் நரசிம்மர் உருவில் பக்தர் ஒருவரின் கனவில் வந்து "கலியுகத்தில் மக்களைக் காக்க  நான் சம்பத்கிரி மலையில் சாந்த மூர்த்தியாக சுயம்புவாய்  எழுந்தருளியுள்ளேன். என்னை வழிபடுவோருக்கு சகல செளபாக்கியமும் அருள இருக்கிறேன்!' எனக்கூறினார்.  மறுநாள் பக்தர் இத்தகவலை கிராமமக்களிடம் தெரிவிக்க, அனைவரும் மலையேறிச் சென்று பார்க்க, அங்கு நரசிம்மர் சுயம்புவாக எழுந்தருளியிருந்தது  கண்டு மெய்சிலிர்த்துத் தொழுதனர்.

அனைத்து கிராம மக்களும் ஒன்றாகக்கூடி  திருமஞ்சனம் செய்து  ஒரு மகா மண்டபம் கட்ட முடிவு செய்து, கட்டியும் முடித்தனர். சுயம்புவான நரசிம்மர் தெற்கே திருவண்ணாமலையை பார்த்து அமர்ந்திருந்தார். வயதானவர்கள் இவ்வளவு உயரம் வந்து தரிசிக்க இயலாதென ஆதங்கப்பட்டு வேண்டினர். 

அப்பொழுது, "மலையின் கீழே உற்சவருக்கு ஒரு கோயிலையும் கட்டுங்கள்! உரிய நேரத்தில் உற்சவ பேரமூர்த்தியாக நாம் அங்கும் வந்து எழுந்தருள்வோம்!' என உத்தரவு கிடைத்ததால், ஒரு கோயிலையும் கட்டினர்.  மகாலட்சுமிக்கு ஒரு சிறிய சந்நிதியையும் கட்டிய மக்கள் குறிப்பிட்ட நாளுக்காகக் காத்திருந்தனர்.

கை கொடுக்கும் கடவுள்: நரசிம்மர் அழைத்ததால் குலஸ்திய மகரிஷி மற்றும் புலஸ்திய மகரிஷி சகோதரர்கள் மலைக்கோயிலுக்கு வந்தனர். இரு ரிஷிகளும் ஆழ்ந்த பெருமாள் பக்தர்கள் ஆவர். இவர்களின் பக்தியில்  நரசிம்மர் ஈர்க்கப்பட்டார்.  தன்னை வெளிப்படுத்த  ஒரு மாம்பழத்தை இருவருக்கும் பொதுவாகக் கொடுத்து ""இப்பழத்தை ஒருவர் மட்டுமே சாப்பிடவேண்டும்!'' என்றார். 

"அந்த மாம்பழத்தை யார் சாப்பிடுவது..?' என சகோதரர்கள் இருவருக்கும் முரண்பாடு வந்தது. மாம்பழத்தைத் தான் மட்டுமே சாப்பிட எண்ணம் கொண்ட புலஸ்தியர், குலஸ்தியரின் கைகளை வெட்டிவிட்டார்.  

கைகளை இழந்த நிலையிலும் குலஸ்தியர், போளூரில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள பஹுநதி என்னும் செய்யாறுக்கு 48 நாள்கள் தொடர்ந்து சென்றார். நதியில் குளித்து, சம்பத்கிரியை வலம் வந்து, நரசிம்மரை வேண்டி நிற்க...  குலஸ்திய மகரிஷியின் கரங்கள் இரண்டும் தானே வளர்ந்தன. இறைவன் நிகழ்த்திய அற்புதத்தை எண்ணி அனைவரும் மகிழ்ந்தனர்.

குபேரனான புலஸ்திய மகரிஷியின் கரங்களால்  உற்சவ நரசிம்மர் சிலையை பிரதிஷ்டை செய்ய நினைத்த நரசிம்மர், அவரின் கனவில் தோன்றி "உற்சவர் சிலை செய்யாற்றில் கரைப்பூண்டியில்  உள்ளது!' என்று தெரிவிக்கிறார். அதன்படியே, புலஸ்தியர் உற்சவ மூர்த்தி சிலையை எடுத்து வந்து முறைப்படியும், இறைவன் உத்தரவுப்படியும், மலையின் கீழே கட்டப்பட்ட  கோயிலில் பிரதிஷ்டை செய்தார். 

விஜய நகர மன்னர்களின் காலத்தில் இக்கோயில் புதுப்பித்துக் கட்டப்பட்டு, ருக்மணி சத்யபாமா உடனுறை வேணுகோபால சுவாமிக்கும், கனகவல்லித்தாயாருக்கு  தனி சந்நிதியும்   நிறுவப்பட்டது. சக்கரத்தாழ்வார் சந்நிதியும், ஆஞ்சநேயர் கோயிலும் இங்குள்ளது.

மலையில் ஏறி சுயம்பு நரசிம்மரை தரிசிக்க 840 படிக்கட்டுகள் அமைத்தனர். ஏறத்தாழ 160 வருடங்களுக்கு முன்னர் சீனிவாச ராவ் என்பவரின் கனவில் பெருமாள் தோன்றி உத்தரவிட்டபடி, கோயிலுக்கு ஒரு பெரிய மணியை அவர் வாங்கி கொடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.

புனித தீர்த்தம்: இம்மலையில் அன்னகுகை என்ற ஒரு குகை உள்ளது. இங்கே இரண்டு நீர்ச்சுனைகள் உள்ளன. மலையின்மேல் பிரம்மா வழிபட்டு உருவாக்கிய  பிரம்ம தீர்த்தம் மற்றும் கீழே புலஸ்தியரால் உருவான  புலஸ்திய தீர்த்தம் ஆகியவை உள்ளன.  இப்போதும் பெளர்ணமி தினங்களில் நள்ளிரவில் பிரம்மா இங்கு வந்து நீராடி, நரசிம்மரை வழிபட்டுச் செல்வதாக ஐதீகம். 

இங்குள்ள குகையில், அரிதாஸ்கிரி ஞானானந்தகிரி சுவாமிகள், அச்சுதாசர், விட்டோபா, வெட்டவெளி சுவாமிகள் ஆகியோர் தவமிருந்ததாகவும், இன்றும் பல சித்தர்கள் உறைந்து வருவதாகவும் பக்தர்கள் கூறுகின்றனர்.  

பல பக்தர்கள் பிரதோஷ தினங்களில் பிரார்த்தனை செய்து கொண்டு, அபிஷேகம் செய்து பலன் பெறுகின்றனர். 

இதைத்தவிர சுவாதி நட்சத்திர நாளிலும், மாதப்பிறப்பு, ஏகாதசி, திருவோணம், புனர்பூசம், ரோகிணி, சப்தமி, பஞ்சமி பெளர்ணமி ஆகிய தினங்களிலும் சிறப்புப் பூஜைகள் நடைபெறுகின்றன.

சித்திரை வருடப்பிறப்பு, சித்ரா பெளர்ணமியில் காரைப்பூண்டியில் தீர்த்தவாரி, வைகாசியில் வரதர் 10 நாள் உற்சவம், ஆவணியில் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியில் ஸ்ரீவேணுகோபாலருக்கு சூரிய பூஜைகள் நடைபெறும். புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு அலங்கார வழிபாடுகள், ஐப்பசியில் கேதாரகெளரி விரத பூஜைகள் நடைபெறுகின்றன.

கார்த்திகையில் கண்விழித்தருள் செய்யும் நரசிம்ம மூலவர், மார்கழியில் மலை மீதிலிருந்து ஒருமாதம் கீழேவந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தொடர்ந்து, வைகுண்ட ஏகாதசி, கூடாரைவல்லி ஆகிய வைபவங்கள் முடிந்து தை 1-ஆம் தேதி மலைக்கு மீண்டும் எழுந்தருள்கிறார். 

போளூர், சம்பத்கிரி சுயம்பு நரசிம்மப் பெருமாள் பக்தர்கள் வேண்டும் அனைத்து பிரார்த்தனைகளுக்கும் செவிசாய்த்து பலன் தரும் இறைவனாக இங்கே தரிசிக்கலாம்.

அமைவிடம்: போளூர் பேருந்து நிலையத்திலிருந்து அரை கி.மீ. தொலைவிலேயே இத்திருத்தலம் அமைந்துள்ளது.  

தவமியற்றும் கழுகுகள்!

இம்மலையில் இரண்டு கழுகுகள் இன்றும் சுற்றி பறந்து வருகின்றன. இவை குலஸ்தியர் - புலஸ்திய மகரிஷிகளாவார்கள் எனவும், இருவருமே கழுகுகளாய் மாறி, சுயம்பு நரசிம்மரை மலையோடு சுற்றி வந்து வணங்கியபின், சம்பத்கிரிக்கு மேற்கிலுள்ள சப்தரிஷிகள் தவம் செய்து கொண்டிருக்கும் "சப்தகிரி'க்குச் சென்று தவத்தில் ஈடுபடுகின்றனர் எனவும் கூறப்படுகிறது.

மலையில் மூலவர் லட்சுமி நரசிம்மராகவும், தாயார் கனகவல்லி என்ற திருநாமத்தோடும் அருள்புரிந்து வருகின்றனர். 

இக்கோயிலில் வாரந்தோறும் சனிக்கிழமை உஷத் காலத்தில் அதிகாலை 4 மணி முதல் 6 மணிக்குள் பூஜை நடைபெறும். மற்ற நாள்களில் உற்சவருக்கும், வேணுகோபாலருக்கும் பூஜைகள் நடைபெறுகின்றன. பக்தர்கள் தங்கள் பிரார்த்தனைகள் நிறைவேற, நித்ய பிரதோஷத்தில் மலையை தரிசித்து கீழே உற்சவரை வணங்குவதும், பானகம் நைவேத்தியம் செய்வதும் பழக்கத்தில் உள்ளது. 

தொடர்புக்கு: 9942307594 / 7200201069.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com