பொருநை போற்றுதும்! - 170

1801-இல், பூலித்தேவனும் கட்டபொம்மனும் ஏற்கெனவே இல்லாமல் போய்விட, ஊமைத்துரை போன்றோரும் தூக்கிலிடப்பட்ட நிலையில், திருநெல்வேலி என்னும் மாவட்டம் முழுமையும் மதராஸ் பிரிட்டிஷ் அரசாங்கத்தின்கீழ்
பொருநை போற்றுதும்! - 170

1801-இல், பூலித்தேவனும் கட்டபொம்மனும் ஏற்கெனவே இல்லாமல் போய்விட, ஊமைத்துரை போன்றோரும் தூக்கிலிடப்பட்ட நிலையில், திருநெல்வேலி என்னும் மாவட்டம் முழுமையும் மதராஸ் பிரிட்டிஷ் அரசாங்கத்தின்கீழ் வந்துவிட, தேச காவல் முறையானது அலுவல் பூர்வமாக ஒழிக்கப்பட்டது. 

ஸ்தல காவல் முறையை (அதாவது குடிக்காவல் முறை) ஆங்காங்கே கிராமங்களிலும் ஊர்களிலும் நெறிப்படுத்திக்கொள்ளவும் கலெக்டர் லூஷிங்டன் ஆணையிட்டுள்ளார். 

1802 மதராஸ் நெறிமுறைகள் 35-இன் படி, திருநெல்வேலியில் காவல் படை ஒன்று உருவாக்கப்பட்டது. தானாதார்கள் நியமிக்கப்பட்டு, இவர்களின் அதிகாரத்திற்குக் கீழே, பத்து கிராமங்களுக்கு ஒரு காவல் பணியாளர் என்னும் வீதத்தில் நியமனங்கள் செய்யப்பட்டன. மாவட்ட கலெக்டரே மாஜிஸ்டிரேட்டாகவும் காவல் கண்காணிப்பாளராகவும் இருந்தார். குற்றவியல் புகார்கள் அனைத்தும் முதலில் தாசில்தாருக்கே செல்லும். 

இதன் பின்னரும், குடிக்காவல் முறை தொடர்ந்தது. இரட்டைச் சுமையோடு தொடர்ந்தது. பயிர்களும் பொருள்களும் திருடப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது குடிக்காவல்காரரின் முதல் பொறுப்பு. 

அறுவடைக்குப் பின்னர், அரசுக்குச் சேரவேண்டிய நெல் அளவையும் தானிய அளவையும் (அதாவது, வரி) பாதுகாத்து அரசுக்குச் சேர்ப்பிக்க வேண்டியது இவரின் இரண்டாவது பொறுப்பு. 

அரசு இவருக்கு சம்பளம் கொடுக்கும்; இல்லையெனில், குடியிருப்பதற்கு வாடகையில்லா நிலம் கொடுக்கும். ஊர்மக்களும் கூலி கொடுப்பார்கள். இருந்தாலும், இந்தக் குடிக்காவல்காரர் மக்களின் சேவகரா, கலெக்டரின் சேவகரா என்பதில் குழப்பங்கள் நேர்ந்தன. 

1806 வாக்கில் சிக்கல் பெரிதானது. கலெக்டரிடமிருந்த மாஜிஸ்டிரேட் அதிகாரம், மாவட்ட நீதிபதியிடம் சென்றது. குற்றப் புகார்களும் நீதிபதியின் வரம்புக்குள் போயின. 

வருவாய் தொடர்பான பணிகளுக்காக (அறுவடை, நெல் அளவு, நில அளவு போன்றவை) குடிக்காவல்காரர்கள் தன்னுடைய அதிகாரத்திற்கு உட்படுவதாகக் கலெக்டர் ஆணையிட்டார். 

குற்றங்கள், புகார்கள், திருட்டுகள் தொடர்பான பணிகளுக்காகத் தன்னுடைய அதிகாரத்திலேயே இவர்கள் வருகிறார்கள் என்று நீதிபதி ஆணையிட்டார். 

சிக்கல் நீடித்த நிலையில், 1830-இல், (அப்போதைய) திருநெல்வேலி மாவட்டத்தின் இணை மாஜிஸ்டிரேட் ஹால் என்பார், குடிக்காவல் சீரமைப்பை ஏற்படுத்த முனைந்தார். 

கிராமத் தலைவரைக் கண்காணிப்பாளர் ஆக்கலாம் என்றும் குடிக்காவல் கட்டணம் எவ்வளவு இருக்கலாம் என்பதைக் கணித்து, கிராம விளைச்சலிலிருந்து அதனைக் கொடுக்க ஆணையிடலாம் என்றும் இவர் முன்மொழிந்தார். 

சில பல கணக்கெடுப்புகள், கணிப்புகள்ஆகியவற்றுக்குப் பின்னரும், அரசாங்கம் ஒப்புதல் அளிக்காததாலும் சீரமைப்பு எதுவும் நடக்கவில்லை. 

திருநெல்வேலியின் காவல் முறை பற்றிய பிரிட்டிஷாரின் பதிவு இவ்வாறு இருக்கிறது: 

"மிகவும் சரியானது என்று சொல்லமுடியாவிட்டாலும், திருநெல்வேலியின் குடிக்காவல் முறையானது, இப்பகுதி மக்களின் புத்திசாலித்தனத்திற்கான சான்று; இந்த புத்திசாலித்தனத்திற்குப் பொருத்தமானதும் கூட. இது பண்டைய இந்து முறையின் படியிலான திட்டம். வெளிநாட்டுப் படையெடுப்பாளர்களால் அவ்வளவாகச் சிதைவுறாத இந்து அமைப்புகள் இருக்கும் மாவட்டம் ஒன்றில் இம்முறை நன்றாகவே தொடர்கிறது'. 

குடிக்காவல், ஸ்தல காவல், தேச காவல் ஆகியவற்றைக் குறித்து நம்மவர்களைக் காட்டிலும், பிரிட்டிஷார் ஆழமாக ஆய்வு செய்துள்ளனர். 
இதிலிருந்தும், குடிக்காவல் முறைகளை சாதி வாரியாக வகைப்படுத்த முயன்ற அவர்களின் முயற்சிகளிலிருந்தும், இயல்பு முறைகளைச் சாதிச் சண்டைகளாகப் படம் பிடித்த முனைப்புகளிலிருந்தும், இம்முறைகள் நாடு பிடிக்கும் அவர்களின் ஆசைகளுக்குத் தடங்கல்களாக இருந்திருக்குமோ என்று தோன்றுகிறது. 

1861-இல், மாவட்ட மாஜிஸ்டிரேட்டுகளிடம் இருந்த காவல் அதிகாரங்கள், புதியதாக உருவாக்கப்பட்ட மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பொறுப்புக்கு மாற்றப்பட்டன. 

1862-இல், திருநெல்வேலியின் முதல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்றார். வெவ்வேறு வகையான குழப்பங்கள் உருவாக்கப்பட்டுக் குடிக்காவல் முறை முழுமையாக மறைந்து போனது. 

இப்பகுதிகளின் நதிகளும் நீரோடைகளும் அநேகமாகப் பொருநையாளோடு கலந்து விடுகின்றன. முக்கியமான விலக்குகளாகக் கருமேனியாறு, நம்பியாறு, அனும நதி ஆகியவற்றைக் குறிப்பிடலாம். 

மகேந்திரகிரி மலைச் சரிவுகளில் தொடங்குகிற நம்பியாறு, தாமரையாறு, கோம்பியாறு, பரட்டையாறு, கோடமடியாறு போன்ற நீரோட்டங்களைச் சேர்த்துக்கொண்டு, வெங்கைய நாயக்கன் அணைக்கட்டின் வழியாக மடைமாற்றப்படக்கூடிய கீழமணி முத்தாற்றின் உபரியையும் இணைத்துக் கொண்டு, திருக்குறுங்குடிப் பகுதியில் சமதளத்தை அடைகிறது. சுமார் 40 கி.மீ. தொலைவுக்குத் தெற்காகப் பாய்ந்து, கூத்தன்குழிப் பகுதியில் கடலில் கலக்கிறது. 

அனுமன் நதி (நெல்லை அனுமன் நதி; தென்காசிப்பகுதியிலும் அனுமன் நதி ஒன்றுண்டு; இது வீரகேரளம் புதூரில் சிற்றாற்றில் கலக்கும்) என்பது மகேந்திரகிரியின் கிழக்குச்சரிவுகளில் உருவாகி, பணகுடி, பெருங்குடிப் பகுதிகள் வழியாகச் சுமார் 32 கி.மீ. தொலைவுக்குத் தென்கிழக்காகப் பாய்ந்து, பெருமணல் அருகே கடலில் கலக்கிறது. 

18-19-ஆம் நூற்றாண்டுகளில் நம்பியாறும் சரி, அனுமன் நதியும் சரி, விளைச்சலுக்கும் மக்கள் பயன்பாட்டுக்கும் பெரிதும் உதவியிருக்கின்றன.  

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com