தேவியின் திருத்தலங்கள்: 43. சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன்

மாரி என்று பல்வேறு இடங்களில் சக்திக்கு கோயில்கள் இருந்தாலும், கொங்கு நாட்டில் அமைந்துள்ள பண்ணாரி மாரியம்மன் கோயில் மிகச் சிறப்பு பெற்ற தலமாக விளங்குகிறது. 
சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன்
சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன்


"கதைர் - மாணிக்யத்வம் ககநமணிபி: ஸுந்த்ர - கடிதம் 
 கிரீடம் தே ஹைமம் ஹிமகிரிஸுதே கீர்த்தயதி ய:' 

-சௌந்தர்ய லஹரி  

மாரி என்று பல்வேறு இடங்களில் சக்திக்கு கோயில்கள் இருந்தாலும், கொங்கு நாட்டில் அமைந்துள்ள பண்ணாரி மாரியம்மன் கோயில் மிகச் சிறப்பு பெற்ற தலமாக விளங்குகிறது. 

மலையாள மாந்திரீகன் ஒருவன் மைசூர் சாமுண்டீஸ்வரி மேல் மந்திர உச்சாடனம் செய்து, அவளின் அருட்சக்தி தனது நாட்டில் எழுந்தருளும்படி வேண்டினான். அன்னையும் சம்மதித்து, தான் அங்கு வருவதாகக் கூறினாள். 

ஆனால், அவனிடம் ஒரு நிபந்தனை விதித்தாள். ""உன்னைப் பின் தொடர்ந்து என் சக்தி பரிவாரங்களுடன் வருவேன். என் கால் சதங்கை ஒலி கேட்கும். நீ திரும்பிப் பார்க்காமல் செல்ல வேண்டும். அப்படி நீ திரும்பிப் பார்த்தால், நான் அந்த இடத்திலேயே நிலை கொண்டு விடுவேன்'' என்று கூற மாந்திரீகனும் அதற்குச் சம்மதிக்கிறான்.

"தோரணப் பள்ளம்' என்னும் இடத்தில் வரும்போது அன்னை அந்தச் சிற்றோடையில் கால் வைத்ததால், சலங்கை சப்தம் கேட்கவில்லை. ஐயத்துடன் மாந்த்ரீகன் திரும்பிப் பார்க்க... அம்பிகை ""இதற்குமேல் வர மாட்டேன்!'' என்று கூறி அதே இடத்தில் (பண்ணாரி பகுதியில்)தங்கி விட்டாள். 

"பண்-அரே' என்றால் பாறைகள் நிறைந்த வனப் பகுதி என்று பொருள். இது மருவி "பண்ணாரி' என மாறியிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். அதேபோல் மற்றொரு கதையும் சொல்லப் படுகிறது.

ஒருமுறை சலவைத் தொழிலாளி ஒருவர், நிறைமாத கர்ப்பிணியான தன் மனைவியுடன் துணி துவைக்கச் சென்றார். அப்போது, அந்தப் பெண்ணுக்கு பிரசவ வலி எடுத்து, அந்த இடத்திலேயே இரு பெண் குழந்தைகள்  பிறந்தன. 

ஒரு குழந்தையைத் தூக்க முடிந்தது. மற்றொரு குழந்தையை தூக்க முடியவில்லை. அவ்வளவு கனம். அதை ஒரு தாழிக்குள் வைத்து விட்டு, ஊருக்குள் சென்று ஜனங்களை அழைத்து வந்து தூக்க முயற்சித்தும் முடியவில்லை. 

கடப்பாரை கொண்டு தாழியை அசைக்க முற்பட்டபோது, குழந்தையின் மார்பில் பட்டு  ரத்தம் கசிந்தது. அந்தத் தழும்பு இன்றளவும் உள்ளது. 

அந்தத் தாழியில் உள்ள குழந்தைதான் அம்மனாக எழுந்தருளியது. அம்மனின் அசரீரி கூறியபடி, மக்கள் பச்சை மாவு எடுத்து வடக்கு திசையில் சென்றனர். சலவைத் தொழிலாளியின் மனைவி வறுமை காரணமாக அரிசி மாவுக்குப் பதிலாக புளியங்கொட்டையில் மாவு செய்து எடுத்துக்கொண்டு தெற்கு நோக்கிச் சென்றாள். "புளி மாவுக்காக அம்மன் தெற்கு நோக்கித் திரும்பினாள்' என்பது ஐதீகம். 
 
சுமார் 300 வருடங்களுக்கு முன் அப்பகுதியில் ஒரு விவசாயி கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டு வந்தான். அவனது காராம்பசு, தினசரி மந்தையிலிருந்து விலகி புதர்களுக்கு மறைவில் நின்று தானாகப் பால் சொரிந்தது.  இதைக் கண்டு அதிசயித்த அந்தப் பகுதி மலைவாசி மக்கள் புதர்ப் பகுதியை ஆராய்ந்தனர். அங்கு ஒரு புற்றும், சுயம்பு அம்மன் உருவமும் வேங்கை மரத்தடியில் இருப்பதைக் கண்டனர்.

அன்றிலிருந்து அம்பிகை இங்கு வழித்துணையாக வீற்றிருந்து அருளாட்சி செய்கிறாள். இங்கு அம்மன் தெற்கு நோக்கியவாறு, சிறு பெண் வடிவத்தில் காட்சி அளிக்கிறாள். இங்கு விபூதி கிடையாது. புற்று மண்ணே பிரசாதமாக வழங்கப் படுகிறது. வேங்கை மரம் தல விருட்சமாகவும், தெப்பக் கிணறு தீர்த்தமாகவும் அமைந்துள்ளது.

அம்பிகைக்கு ஆண்டுதோறும் அக்கினி குண்டம் வளர்த்து, அதில் பக்தர்கள் தீ மிதிப்பது வழக்கம். அதற்காக மரங்களை வெட்டிக் கொண்டு வந்து போடுவார்கள். விறகுகளைக் "கரும்பு' என்றும், நெருப்புத் துண்டங்களைப் "பூ' என்றும் சொல்வார்கள். 

ஒருமுறை, காட்டிலாகா அதிகாரி ஒருவர் ""இங்கு மரங்களை வெட்டக் கூடாது!'' என்று தடுத்துவிட, அவருக்குத் திடீரென்று வாந்தி பேதி ஏற்பட்டது. எந்த மருந்தாலும் குணமாகாத அவருக்கு, அம்மனின் தீர்த்தமும், புற்று மண்ணும் தரப்பட்டு, நோய் தீர்ந்தது. இதையடுத்து, அவர் குண்டத்திற்கு மரம் வெட்ட அனுமதி அளித்தார். 

அதேபோல் மற்றொரு அதிகாரி கோயிலில் திருவிழா நேரங்களில் நடக்கும், மேள, தாளம், ஆடல், பாடல்களை நடத்தக் கூடாது என்று தடுத்திருக்கிறார். அப்போது பாம்புகளை அணிகலன்களாக அணிந்த இரு பெண்கள் அவர்முன் தோன்றினர். அவர்களைக் கண்டு பயந்த அதிகாரி, அம்மனைப் பணிந்து, தன் உத்தரவைத் திரும்பப் பெற்றவுடன், அப்பெண்கள் மாயமாய் மறைந்தார்கள். இதுபோன்று அம்மனின் சக்தியை உணர்த்தும் செவிவழிக்கதைகள் பலவுள்ளன.

சத்தியமங்கலத்திலிருந்து, மைசூர், கொள்ளேகால், தாளவாடி போன்ற ஊர்களுக்குச் செல்லும் கனரக வாகனங்கள் பண்ணாரி வழியேதான் செல்கின்றன. அவர்களுக்கு வழித்துணையாக பண்ணாரியம்மன் இருக்கிறாள் என்பது  நம்பிக்கை.

இங்கு பங்குனி மாதத்தில், உத்திர நட்சத்திரத்தில் திரு விழாக்கள் ஆரம்பமாகும். அமாவாசையை ஒட்டி வரும் திங்கள்கிழமைகளில், சுற்றிலும் உள்ள கிராம அதிகாரிகள் கோயிலுக்கு வந்து, அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்து "திருவாக்கு' கேட்பார்கள். அம்மன் வாக்கு அளித்ததும், அம்மன் புறப்பாடும், திருவீதிவுலாவும் நடக்கிறது, கம்பம் நடு விழாவும், பூச்சாற்றலும், ஏழாவது நாள் பெரிய திருவிழாவும் நடக்கிறது.

இதில் பண்ணாரி அம்மனின் குண்டம் உற்சவம் மிகச் சிறப்பு வாய்ந்தது. அம்மன் சந்நிதிக்கு நேர் எதிரே, தெற்கில் குண்டம் அமைந்துள்ளது. மனிதர்கள் மட்டுமின்றி கால்நடைகளும் இதில் இறங்குவது இக்குண்டத்தின் தனிச் சிறப்பு. ஐந்து லட்சம் பக்தர்களுக்கு மேல் இங்கு குண்டம் இறங்குகிறார்கள்.

கண் பார்வை பெற, அம்மை நோய் தீர, குழந்தைப் பேறு, திருமணம் என்று அனைத்துப் பிரார்த்தனைகளையும் அம்பிகை நிறைவேற்றுகிறாள். 

தங்கள் வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள், பூக்குழி இறங்குதல், மெரவனை, வேல் குத்துதல்,  அம்மனுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் தீபம் ஏற்றுதல் என்று தங்கள் சக்திக்கேற்ப நேர்த்திக் கடனைச் செலுத்துகிறார்கள். 

அமைவிடம்:  ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்திலிருந்து மைசூர் செல்லும் சாலையில் திம்பம் மலை அடிவாரத்தில் பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. 
(தொடரும்)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com