துயர் களையும் துள்ஜா பவானி!

மகாராஷ்டிர மாநிலம், உஸ்மானாபாத்  மாவட்டத்தில், துள்ஜாபூரில் அமைந்துள்ளது  ஸ்ரீ துள்ஜா பவானி திருக்கோயில் (ஷோலாப் பூரிலிருந்து 65 கி.மீ. தொலைவில் உள்ளது). 
துயர் களையும் துள்ஜா பவானி!
துயர் களையும் துள்ஜா பவானி!


மகாராஷ்டிர மாநிலம், உஸ்மானாபாத்  மாவட்டத்தில், துள்ஜாபூரில் அமைந்துள்ளது  ஸ்ரீ துள்ஜா பவானி திருக்கோயில் (ஷோலாப் பூரிலிருந்து 65 கி.மீ. தொலைவில் உள்ளது). சக்தி பீடங்களில் "உத்பலா' பீடமாகப் போற்றப்படுகிறது. 

தல வரலாறு: ஸ்கந்தபுராணத்தில் துள்ஜா பவானியைப் பற்றியக் குறிப்புகள் உள்ளன. கிருதயுகத்தில் கர்தம முனிவரின் மனைவி அனுபூதி கருவுற்றிருந்த போது கர்தமர் இறைவனடி சேர்ந்தார். கர்ப்பமாக இருந்ததால் அனுபூதி உடன் கட்டை ஏறமுடியவில்லை. 

அசரீரி வாக்கின் படி, குழந்தை பிறந்த பின்னர், அதை பவானி அம்பாளிடம் காக்கும்படி ஒப்படைத்துவிட்டு பாலகூட் மலைப்பிரதேசத்தில் முக்தி வேண்டி தலைகீழாக நின்று தவம் மேற்கொண்டாள் அனுபூதி. 

அப்போது, குகுர் என்னும் அரக்கன் அவளது தவத்தைக் கலைத்து, அவமானப்படுத்த நினைத்தான். தன் பக்தையை காக்கும் பொருட்டு அம்பிகை பிரத்யக்ஷமானாள். 

குகுர் அரக்கன் மகிஷமாக (எருமை வடிவில்) வந்து அம்பாளை எதிர்த்தான். பல்வேறு ஆயுதங்களைக் கொண்டு அரக்கனை அழித்தாள் அம்பிகை. அதைத் தொடர்ந்து, அனுபூதியின் வேண்டுதலின்படி துள்ஜாபூரிலேயே இருந்து பவானி தெய்வமாக அனைவருக்கும் அருள்புரிவதாக வரலாறு.

இத்திருக்கோயில் கி.பி. 1398-இல் புனர் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளதாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன.

குலதெய்வம்: துள்ஜா பூரில் கோயில் கொண்டு வீற்றிருக்கும் அம்பிகை "துள்ஜா  பவானி', "மகிஷாசுரமர்த்தனி' என்ற பெயர்களில் அழைக்கப்பட்டு மகாராஷ்டிர மாநிலத்திற்கே குலதெய்வமாகத் திகழ்கிறாள். 

சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் குலதெய்வமாக விளங்கிய அன்னை துள்ஜா  பவானி சத்ருக்களின் கோர தாண்டவத்தை அழிக்க அவருக்கு வெற்றி வாளை அளித்து ஆசீர்வதித்து அருள்புரிந்ததாகவும் வரலாறு கூறுகிறது.

கருவறையில் அம்பிகையின் தோற்றம்: 
பவானி அம்பாள் நின்ற கோலத்தில் தலையில் கீரிடம் தரித்து, தன் எட்டு கரங்களில் திரிசூலம், கத்தி, அம்பு, சக்கரம், சங்கு, வில், கிண்ணம் மற்றும் அரக்கனின் - கொய்த - தலையுடன் காட்சி தருகிறாள். 

திருவுருவச்சிலையின் வலது மேற்புறத்தில் சந்திரனும், இடது மேற்புறத்தில் சூரியனும் பொறிக்கப்பட்டுள்ளது. அன்னையின் வலது கால் மகிஷாசுரன் மீதும், இடது கால் தரையிலும் உள்ளது.

தசரா திருவிழா: தசரா என்று அழைக்கப் படும் நவராத்திரி திருவிழாவை இங்கு பிரத்யேகமாகக் கொண்டாடுகிறார்கள். இவ்வாண்டு நவராத்திரி விழா அக். 7-ஆம் தேதி தொடங்குகிறது. ஒன்பது நாட்களிலும் பல்லக்கு மற்றும் வாகனங்களில் அன்னையின் உற்சவ மூர்த்தி அலங்கரிக்கப்பட்டு, கோயில் பிரகாரத்தில் வலம் வருவார். சத்ரபதி சிவாஜியால் வழங்கப்பட்ட தங்க ஆபரணங்கள் யாவும் மூலஸ்தானத்தில் அம்பிகைக்கு சாற்றப்படுகிறது. 

அவ்வமயம் பல்லக்கை சூழ்ந்துகொண்டு, பக்தர்கள் யாவரும் அன்னையின் உருவச்சிலையின் மீது மஞ்சள்பொடி, குங்குமம் மற்றும் வண்ணப்பொடிகளைத் தூவி ""அம்பா மாதா கீ ஜெய், துள்ஜா  மாதா கீ ஜெய்!'' என்றும் கோஷங்களை முழங்கி, ஆரவாரத்துடன் கொண்டாடி மகிழ்கின்றனர். முக்கிய நிகழ்வாக, அம்பிகை, சத்ரபதி சிவாஜிக்கு வீரவாள் வழங்கும் வைபவம் நடைபெறுகிறது. 

இதர விழாக்கள்:     "ரங்க பஞ்சமி திருவிழா',  "பவானி ஜயந்தி விழா' ஆகியவை இதர முக்கிய விழாக்களாகும். விசேஷ நாட்களில் "சபீனா' என்று அழைக்கப்படும் வெள்ளி சிம்மாசனத்தில் அம்பிகை அலங்காரத்துடன் பவனி வரும் காட்சி பிரசித்தி பெற்றதாகும். 

கூப்பிட்டவர் குரல் கேட்டு ஓடோடி வந்து, துயர் களையும்  ஸ்ரீதுள்ஜா பவானி அம்மனை, இந்த நவராத்திரியில் மனதார நினைத்து வழிபடுவோம். பேரின்பப் பெருவாழ்வு பெறுவோம். 

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com