166. பொருநை போற்றுதும்! வியப்புக்குரிய களக்காடு

பத்தமடைப் பாயும் அதன் பிரபல்யமும் நமக்குத் தெரியும். இந்த ஊருக்கான பாசன நீர், பத்து மடைகள் வழியாக வந்ததாகவும்,
166. பொருநை போற்றுதும்! வியப்புக்குரிய களக்காடு
166. பொருநை போற்றுதும்! வியப்புக்குரிய களக்காடு

பத்தமடைப் பாயும் அதன் பிரபல்யமும் நமக்குத் தெரியும். இந்த ஊருக்கான பாசன நீர், பத்து மடைகள் வழியாக வந்ததாகவும், அதனால், இப்பெயர் ஏற்பட்டது என்றும் ஊர்மக்கள் சொல்வதுண்டு. ஆனால், இது சரியான காரணமன்று என்று மறுப்போரும் உண்டு. 

கன்னடியன் கால்வாய் கட்டப்படுவதற்கு முன்னர், இவ்வூரில் பெரியதொரு குளம் இருந்தது. வயல்களுக்கான நீர், இந்தக் குளத்திலிருந்து நீர் இறைக்கப்பட்டு, நீர்ப்பத்தல் வழியாக (கமலையில் நீர் இறைத்து மடையில் ஊற்றப்படுகிற துளைக்குப் பத்தல் என்று  பெயர்) மடைகளில் பாய்ச்சப்
படும். இதனால், பத்தல்+மடை என்னும் பெயர் ஏற்பட்டது. 
இதுவே, "பத்தமடை' என்றும் ஆனது. நீர் இறைத்துப் பத்தலில் ஊற்றுவதால், நீரிறைக்கும் கருவிக்கும், நீர் ஊற்றப்படுகிற தொட்டிக்கும் கூட"பத்தல்' என்று பெயருண்டு. 

பத்தமடையின் பண்டைய பெயர், "குளத்துப்பத்தல் மடை' என்பதாகும்.     
 நான்குநேரி, வள்ளியூருக்கு அருகிலிருக்கும் "ஏர்வாடி', பண்டைய காலத்தில் விவசாயப் பெரும் பகுதியாகத் திகழ்ந்தது. இவ்வூர்க்காரர்கள் பலர், பாண்டிய மன்னருடைய படையிலும் பணியாற்றினர். ஊருக்கு நடுவில் நம்பியாறு பாய்கிறது. ஏர் உழுத மக்கள் பாடிக்கொண்டே உழுதார்கள் என்றும், அதனால் ஏர்+பாடி என்னும் பெயர் ஏர்வாடி ஆனது என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஊருக்கு நடுவில் ஆறு பாய்வதால், இந்தப் பகுதியில் விவசாயம் செழித்திருந்திருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. 
ராமநாதபுரம் பகுதியிலும் ஓர் "ஏர்வாடி' உண்டு. இந்த ஏர்வாடிக்கான பெயர், மதீனா நகரின் "ஏர்பாத்' பகுதியை நினைவுகூர்ந்து வைக்கப்பட்டதாகும். நான்குநேரி ஏர்வாடியின் ஒரு பகுதிக்குப் "புளியஞ்சுவனம்' (குறிப்பாக, இஸ்லாமியர் வாழ்ந்த பகுதி) என்பது பழைய பெயர். 

 நான்குநேரி என்னும் பெயர் பண்டை காலப் பதிவுகளில் (ஆங்கிலேயப் பதிவுகள் உட்பட), "நாகணைச்சேரி' என்றிருந்திருக்கிறது.     1819 வரை, இந்தப் பகுதியின் தலைமை ஆளுகைப் பீடம், களக்காடுதான். 1819-இல், மலையடிவாரப் பகுதிகளில் பெருந்தொற்று நோய் ஒன்று பரவ, ஆளுகைக்கான அலுவலகங்கள் நான்குநேரிக்கு மாற்றப்பட்டன.     
 நான்குநேரிக்கு அருகிலுள்ள கூந்தங்குளத்தில், பறவைகள் சரணாலயம் அமைந்திருக்கிறது. 40-க்கும் மேற்பட்ட  பறவை வகைகளும், எண்ணிக்கையில் ஆண்டுக்குச் சுமார் 1,00,000 பறவைகளும் இங்கு வலசை வருகின்றன. டிசம்பர் மாதம் தொடங்கி, மார்ச், ஏப்ரல் வரை பலவகைப் பறவைகளை இங்குக் காணலாம். நாரைகள், வாத்துகள், தட்டை வாயன்கள் போன்றவை தவிர, சைபீரியப் பகுதிகளிலிருந்து வருகிற பாட்டைத்தலை வாத்து, ஊசித்தலை வாத்து போன்றவற்றையும் காணலாம்.     

 "திருவரமங்கை' என்றும் அழைக்கப்படுகிற "வானமாமலை' திவ்யதேசம் அமைந்திருக்கிற நான்குநேரியைச் சுற்றிலும், தேரிக்காடு, கூந்தங்குளம், விஜயநாராயணம், நாசரேத், களக்காடு என்று வெவ்வேறு வகைகளில் பிரபலமான ஊர்கள் இருக்கின்றன.     

 நம்பியாற்றின் கரையிலிருக்கும் "ராஜாக்கள் மங்கலம்' என்னும் சிற்றூர், கல் தூண்களுக்குப் பெயர் பெற்றது. 20-ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில், ஊரில் நிறைய கல்பாறைகள் கிடக்குமாம். இவற்றில், ஒன்பதடி உயரத்திற்கும் நான்கடி அகலத்திற்கும் இருந்த தூண் ஒன்றை, உள்ளூர் மக்கள், இந்தப் பகுதியை ஒருகாலத்தில் ஆட்சி செய்த "ஹிரண்ய ராஜா' என்று போற்றியதாகத் தெரிகிறது. 

ராஜாக்கள் மங்கலமானது, அகழ்வாய்வாளர்களுக்குப் பெருவிருந்து படைக்கக்கூடும் என்று பிரிட்டிஷார் பதிவு செய்துள்ளனர். 2009-10-ஆம் ஆண்டுகளில் தொல்லியல் துறை நிகழ்த்திய ஆய்வுகளில், பாண்டியர் காலத்துத் திருக்கோயில் கட்டுமானப் பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டன. மதுரை திருமலை நாயக்கர் மகாலில் இவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.     
 களக்காட்டிற்கும் ராமாயணத்திற்கும் கூடத் தொடர்பு உண்டு. களக்காடு "சிதம்பரபுரம்' பகுதியில் உள்ளது, "ஐயனார் கோயில்'. இந்தக் கோயிலுக்கு அகலிகை சாபம் தீர்த்த கோயில் என்றும் பெயருண்டு. 

இங்குதான் அகலிகை கல்லாகக் கிடந்தாள் என்பதை உறுதி செய்வதுபோல், கோயிலுக்குப் பின்புறத்தில், அகலிகைப் பாறை ஒன்றும், ராமர் பாதத் தடமும் காணப்படுகின்றன. 

இங்குதான், "கெளதமர் சாபத்தால் கல்லாகக் கிடந்த அகலிகை, ராமர் பாதம் பட்டுப் பெண்ணானாள்' என்பது உள்ளூர் நம்பிக்கை. மேலும் வலு சேர்க்கும் விதத்தில், ஐயனாருக்குப் பின்னால், ஆயிரம் கண்ணுடைய இந்திரன் சிலையும் உண்டு. அகலிகைப் பாறையானது, களக்காடு புலிகள் சரணாலயப் பகுதிக்குள் இருக்கிறது.     

 களா மரங்கள் நிறைந்த இடம் என்பதாலேயே "களக்காடு' என்றும் திருக்களந்தை என்றும் பெயர்கள். "சோரக அடவி' என்றும் இவ்வூருக்கு ஒரு பெயருண்டு. சோர=திருட்டு; அடவி=காடு. சீதையை ராவணன் ஏமாற்று முறையில் கவர்ந்து கொண்டு போன பகுதி என்பதால் இப்பெயர். 
இந்தத் தகவலைத் தொடர்ந்து, களக்காடு அருள்மிகு சத்யவாகீச்வரர் திருக்கோயிலுக்கும் தலபுராண வரலாறு ஒன்றுண்டு. சீதை காணாமல் போய்விட, சிவபெருமானை வழிபட்டு உதவி வேண்டினார் ராமர். கண்டிப்பாக உதவுவதாகச்சிவனாரும் வாக்குக் கொடுத்தார். 

சீதையைச் சிறை மீட்ட பின்னர், சிவபெருமானுக்கு நன்றி தெரிவிப்பதற்காகச் சீதையையும் அழைத்துக் கொண்டு ராமர் இங்கு வந்து வழிபட்டார். வாக்கைக் காப்பாற்றிய சிவனார் என்பதால், இவருக்கு "சத்யவாகீச்வரர்' என்று திருநாமம். அம்பிகை, அருள்மிகு கோமதி அம்பாள்.   
 
 களக்காடு சிவன் கோயிலிலிருந்து சுரங்கப்பாதை ஒன்று திருப்புடைமருதூர் கோயிலுக்குச் செல்வதாகத் தெரிகிறது. இந்தச் சுரங்கப்பாதையின்  நடுவில் சுரங்க அறை ஒன்றிருந்ததாம். சுரங்கமாக இருந்தாலும், காற்றும் வெளிச்சமும் தடையில்லாமல் இந்த அறைக்கு வருமாம். கட்டுமான விந்தைதான்! 
களக்காடு திருக்கோயிலில் வியப்புக்குரிய விஷயங்கள் நிறையவே உண்டு. சிற்பத்தூண்கள், எழிலார்ந்த வண்ண ஓவியங்கள், இசைத்தூண்கள்ஆகியவற்றோடு மற்றுமொரு விந்தை ஆண்டுதோறும் செப்டம்பர் 20, 21, 22 -ஆகிய தேதிகளில் மூலவர் சிவலிங்கத்தின் மீது விழுகிற சூரிய கிரணங்கள்!!

களக்காட்டில் சிறியதொரு கத்தோலிக்க தேவாலயம் இருந்தது குறித்து பேட் துரை பதிவு செய்திருக்கிறார். 
 

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com