திருமணப் பிரார்த்தனைக்கு உகந்த நாதன்கோயில் ஸ்ரீஜகந்நாதர்

நாராயணன் உலகை இரட்சிப்பவன் என்ற பொருளில் "ஜகந்நாதன்' என்ற திருநாமத்தோடு பாரத நாட்டில் நான்கு முக்கிய தலங்களில் மக்களுக்கு அருள்கிறார். 
திருமணப் பிரார்த்தனைக்கு உகந்த நாதன்கோயில் ஸ்ரீஜகந்நாதர்
திருமணப் பிரார்த்தனைக்கு உகந்த நாதன்கோயில் ஸ்ரீஜகந்நாதர்

நாராயணன் உலகை இரட்சிப்பவன் என்ற பொருளில் "ஜகந்நாதன்' என்ற திருநாமத்தோடு பாரத நாட்டில் நான்கு முக்கிய தலங்களில் மக்களுக்கு அருள்கிறார். 

ஒடிஸா மாநிலம் புரியில்  உத்தர-ஜகந்நாதர் ஆகவும், தமிழகம் ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் தட்சிண-ஜகந்நாதர் ஆகவும், திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில் மத்திய-ஜகந்நாதர் ஆகவும், தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே நாதன்கோவில் எனப்படும் நந்திபுரத்தில் (புராதன பெயர்: திருநந்திபுர விண்ணகரம்) ஆதி ஜகந்நாதராகவும் அருள்பாலிக்கிறார். 

பஞ்ச விண்ணகர்: விண்ணகரம் என்பது  வைகுண்டத்தைக் குறிக்கும். திருமால் குடிகொண்டுள்ள இடம் விஷ்ணு+ நகர்= விண்ணகர் எனப்படும். திருவிண்ணகரம் (ஒப்பிலியப்பன் கோயில்), பரமேஸ்வர விண்ணகரம் (வைகுண்டப் பெருமாள் கோயில், காஞ்சிபுரம்), அரிமேய விண்ணகரம் (திருநாங்கூர்), காழிச்சீராம விண்ணகரம் (சீர்காழி) ஆகியவற்றுடன் இந்த திருநந்திபுர விண்ணகரையும் சேர்த்து "பஞ்ச விண்ணகர்' என்று அழைக்கின்றனர். 

திருநந்திபுர வரலாறு: நந்தி பெருமான் ஒருமுறை திருமாலை தரிசிக்க வைகுண்டம் சென்றார். அப்போது, வைகுண்டத்தைக் காக்கும் துவார பாலகர்களான ஜெய-விஜயர்கள், ""பெருமாள் மகாலட்சுமியுடன் தனிமையில் இருப்பதால் தற்போது அவரை தரிசிக்க இயலாது; பின்பொரு சமயம் வாருங்கள்!'' என்று கூறினர். 
அவர்களை மீறி அதிகார நந்தி வைகுண்டத்திற்குள் புக முயன்றார். தங்கள் கட்டுப்பாட்டை மீறிய அவரை, ""எப்போதும் இல்லாத அளவுக்கு உன் உடல் நெருப்பாகக் கொதிக்கட்டும்!'' என ஜெய-விஜயர்கள் சாபமிட்டனர்.
சாபத்தால் உடலெல்லாம் தகிக்க, தாங்க முடியாத நந்தி, பரமசிவனிடம் முறையிட்டார். 

பரமனும் ""நாதன்கோயில் எனப்படும் செண்பகாரண்யத்தில் திருமாலை நோக்கித் தவமிருந்து சாப விமோசனம் பெறலாம்!'' என்றார். தவம் புரிந்த நந்திக்கு பெருமாள் காட்சியளித்து அவரது சாபத்தைப் போக்கினார். அதனால் இந்த திவ்யதேசம் நந்திக்கு அருள் புரிந்த  "நந்திபுர விண்ணகரம்' என்றும் பெயர் பெற்றது.

ஜகந்நாதர்: இத்தலத்தின் மூலவர் அரக்கர்களின் கொடுமையிலிருந்து ஜகத்தோர் அனைவரையும் காத்தருள்வதால் "ஜகந்நாதர்' எனப் போற்றப்படுகிறார்.

தேவர்களுக்கு நாதனாக இருப்பதால் "நாத நாதன்' எனவும், நந்திபுரத்தில் குடிகொண்டிருப்பதால்  "நந்தி நாதன்', "விண்ணகரப் பெருமாள்' எனவும், ஸ்ரீதேவிக்குத் தன் மார்பில் இடம் கொடுத்ததால் "யோக ஸ்ரீநிவாசன்' எனவும் வணங்கப்படுகிறார். 

திருமணப் பிரார்த்தனை
திருமகள், திருமாலை இணைந்தமையால் திருமணப் பிரார்த்தனைக்கு இது உகந்த தலமாகும். தாயாருக்கு ஒன்பது வெள்ளிக்கிழமைகளில் தொடர்ந்து அர்ச்சனை செய்து, பாசிப்பயறு சுண்டல் நைவேத்யம் வைத்து வழிபட்டு வந்தால், நினைத்த காரியம் கைகூடும். பிரிந்திருக்கும் தம்பதிகள் இணையவும், தம்பதிகள் பிரியாமல் இருக்கவும்,  குடும்ப நலத்துக்கு உதவும் சுக்ல பட்ச அஷ்டமியில் இக்கோயிலில் ஸ்ரீ சூக்த ஹோமம் நடக்கிறது.
ஐப்பசி மாத சுக்ல பட்சத்தில் தாயாருக்குத் திருமஞ்சனம் செய்தால், குழந்தைப்பேறு உண்டாகும். பல்லவ மன்னன் நந்தி வர்மன், குழந்தை வரம் வேண்டி இங்கே வந்து பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு, தனக்குப் பிறந்த குழந்தைக்கு "நந்திபுர விண்ணகரப்பன்' என்று பெயர் சூட்டியதாகவும் சொல்லப்படுகிறது.


ஸ்ரீநிவாச உற்சவ  மூர்த்தியின் வலதுகரம் அபயமும்; இடதுகரம் "வா' வென வாஞ்சையோடு அழைக்கும் வகையில் அமைந்து அருள்கிறது. மூலவர் அமர்ந்த கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடனும், செண்பகவல்லித் தாயார் மற்றும் ஆண்டாள் சமேதராக உற்சவராகவும் சேவை சாதிக்கிறார். 
சிபிச் சோழனுக்கு அருளியவர்: இத்தலத்தில் தன்னிடம் வந்து அடைக்கலமான புறாவின் எடைக்குச் சமமாக, தானே தராசின் மறு தட்டில் அமர்ந்து தன்னை காணிக்கை ஆக்கிய சிபிச் சக்கரவர்த்தியை காண விரும்பிய பெருமாள் அவருக்கு நேரில் காட்சி அளித்தார். இதற்காக கிழக்கு நோக்கி இருந்த பெருமாள் மேற்கு நோக்கித் திரும்பி சேவை சாதித்தார்.

அத்திரி முனிவருக்கும் அனுசுயா தேவிக்கும் மகனாகப் பிறந்த தக்கன் தனது மகள்களான 27 பேரை (27 நட்சத்திரங்கள்) சந்திரனுக்கு மணம் செய்து வைத்தான். அவர்களில் ரோகிணியிடம் மட்டும் சந்திரன் அதிக அன்பு செலுத்தி வந்தான். தக்கன் கோபத்தில், "சந்திரன்  தேய்ந்து போக' சாபமிட்டான். நாதன்கோவில் வந்த சந்திரன் பெருமாளை நோக்கித் தவமிருந்தார். சித்ரா பெளர்ணமியன்று பெருமாள் சந்திரனுக்கு காட்சி கொடுத்தருளினார்.
செண்பகாரண்யம்: பவிஷ்ய புராணம் (பவிஷ்யேர்த்ர புராணம்) 7 அத்தியாயங்களில்  பிரம்மனுக்கும் நாரதனுக்கும் நடந்த உரையாடலாக இத்தலவரலாறு கூறப்படுகிறது. 

திருப்பாற்கடலில் பரந்தாமனின் பாதங்களையே பற்றியிருந்த இலக்குமி  அவர் மார்பில் நீங்காமல் தான்  வாசம் செய்யவேண்டும் என்று விரும்பி, செண்பகாரண்யம் என்னும் இப்பகுதியில் துவாபரயுகத்திலேயே வந்து கடும் தவம் செய்து திருமாலின் திருமார்பில்  உறையும் பாக்கியம் பெற்றாள். 
பாற்கடலில் திருமகளைப் பிரிந்திருந்த திருமால், ஐப்பசி மாத சுக்ல பட்ச வெள்ளிக்கிழமையில் அலைமகளுக்குக் காட்சி அளித்தார். அன்னை மனம் மகிழ்ந்தாள். "உன் விருப்பப்படி நீ எம் மார்பில் இனி உறைவாய்!' என்று ஆசீர்வதித்தார். கிழக்கு நோக்கியிருந்த திருமகளை எதிர்கொண்டு ஏற்றமையால் இங்கு பெருமாள் மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார் என்றும் கூறப்படுகிறது. தாயார் செண்பகவல்லியென வணங்கப்படுகிறாள்.                                                                                            
நோய் நீக்கிய தலம்: விஜயரங்க சொக்கப்ப நாயக்கர் என்னும் நாயக்க மன்னர், தனது அன்னைக்கு ஏற்பட்ட குண்ம நோயை நீக்க வேண்டி, இப்பெருமானிடம் இரந்து நிற்க, அவ்விதமே நோய் நீங்கியதால், இக்கோயிலுக்கு நாயக்க மன்னர் பல அரிய திருப்பணிகள் செய்தார். 

"நந்தி தீர்த்தப் புஷ்கரணி' என்ற தீர்த்தமும், "மந்தார விமானம்' என்னும் விமானமும் இங்குள்ளது. சிலேடைக் கவியில் வல்லவரான காளமேகப் புலவர் பிறந்த தலம் இது. 

பாலாலயம்: "எழில் ஆர் மண்ணில் இதுபோல நகர் இல்லை என, வானவர்கள் தாம் மலர்கள் தூய்,  நண்ணி உறைகின்ற நகர் நந்திபுரவிண்ணகரம் - நண்ணு மனமே!' என்கிறார் திருமங்கையாழ்வார். நண்ணுதல் என்றால் விரும்புதல், வசித்தல்  எனப்பொருளாகும். வானவர்கள் மலர்கள் தூவி, விரும்பி உறைகின்ற நகரான இந்த ஊரை விரும்பி வாருங்கள் என்பது மங்கைமன்னன் வாக்காகும். 
ஸ்ரீ வானமாமலை ஜீயர் சுவாமிகள் மடம் மூலம் நிர்வகிக்கப்படும் இத்திருக்கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்வதற்காக அக். 25-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு விமான பாலாலயம் செய்து திருப்பணிகள் துவங்க இருக்கிறது. இப்பணிகளில் பக்தர்களும் பங்கேற்கலாம்!   

அமைவிடம்: கும்பகோணத்திலிருந்து மன்னார்குடி செல்லும் வழியில் திப்பிராஜபுரம் - பழையாறைக்கு அருகே அமைந்துள்ளது நாதன்கோவில் திருத்தலம்!.

தொடர்புக்கு: 98412 90610 / 98437 95904.

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com