நித்திய அமாவாசை க்ஷேத்திரம் 

நித்திய அமாவாசை க்ஷேத்திரம் 

தில்லை, புலியூர் என்றெல்லாம் அழைக்கப்பட்ட சிதம்பரத்தில் பதஞ்சலி முனிவரால் புற்று மணலால் உருவாக்கப்பட்ட சிறப்பு வாய்ந்த தலம்தான் அனந்தீஸ்வரர் ஆலயம்.


தில்லை, புலியூர் என்றெல்லாம் அழைக்கப்பட்ட சிதம்பரத்தில் பதஞ்சலி முனிவரால் புற்று மணலால் உருவாக்கப்பட்ட சிறப்பு வாய்ந்த தலம்தான் அனந்தீஸ்வரர் ஆலயம். இந்த ஆலயம் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தை விட மிகப் பழமை வாய்ந்த ஆலயம் என்று கூறப்படுகிறது. இந்த ஆலயத்தில் மூலவர் ஸ்ரீ அனந்தீஸ்வரர் பின்னால் நாகத்துடன் காட்சியளிப்பார். தனி சந்நிதியில் ஸ்ரீசெளந்தரநாயகி அம்பாள் அருள்பாலிக்கிறார்கள்.

இவருக்கு பதஞ்சலியின் பெயரால், அனந்தீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. பதஞ்சலிக்கு அனந்தன் என்றும் பெயருண்டு. அனந்தம் என்றால் நாகம் என்றும் பொருள். பதஞ்சலி முனிவர் நாகத்தின் உடலமைப்பைப் பெற்றிருந்ததால் தில்லை நடராஜரை தரிசனம் செய்ய முடியாமல் இருந்தார். 

இதனால், அவர் புற்று மணலால் ஒரு சிவலிங்கத்தைப் பிடித்து வைத்து பூஜை செய்து வந்தார். தை மாத அமாவாசை அன்று தில்லை நடராஜரின் தரிசனம் கிடைக்கப்பெற்றார். அதனால் ஒவ்வொரு தை அமாவாசை அன்றும் தில்லை நடராஜர் சோமாஸ்கந்த மூர்த்தியாக இந்த ஆலயத்திற்கு வந்து, எதிரே உள்ள பதஞ்சலி தீர்த்தத்தில் தீர்த்தவாரி தரிசனம் கொடுப்பார்.

இத்திருத்தலத்தில் பதஞ்சலி முனிவருக்கு தனிச்சந்நிதி உள்ளது. யோக சூத்திரத்தை எழுதியவர் பதஞ்சலி என்பதால், யோகாசன கலையில் தேற விரும்புவோர் இங்கு வேண்டிக் கொள்கின்றனர். இக்கோயிலிலுள்ள சில தூண்களில் யோகாசன முறைகள் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளன. 

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு நேர் பின்புறமாக மேற்குப் பக்கம் அமைந்த கோயில் இது. கோயிலுக்குள் நுழைந்ததும் பதஞ்சலி தீர்த்தம் உள்ளது. இத்தீர்த்தத்தின் இடப்புறம் ராஜசண்டி கேஸ்வரர் இருக்கிறார். ராஜயோகம் கிடைக்க இவரையும், செல்வம் பெருக அருகிலுள்ள விநாயகரையும் வணங்குகின்றனர். பிரகாரத்தில் அருகருகில் சூரியன், சந்திரன் உள்ளனர். எனவே, இத்தலத்தை நித்திய அமாவாசை தலமாகக் கருதுகின்றனர். 

திருவாரூர் தவிர, அனைத்து சிவாலயங்களிலுள்ள சுவாமிகளும் சிதம்பரத்தில் ஒருங்கிணைவதாக ஐதீகம். எனவே, நடராஜர் கோயிலில் நடக்கும் அர்த்தஜாம பூஜை மிகவும் விசேஷம். தினமும் அனைத்து முனிவர்களும் வந்து உச்சிக்காலத்தில் அனந்தீஸ்வரரையும், அர்த்தஜாமத்தில் நடராஜரையும் தரிசிக்கிறார்கள் என்பது தலவரலாறு. இங்குள்ள நடராஜர் அருகில் பதஞ்சலி முனிவர் இருக்கிறார். ஆனி திருமஞ்சனம் மற்றும் மார்கழி திருவாதிரை நாள்களில் இவர் புறப்பாடாவார்.

பரிகாரத் தலம்: நாக தோஷம் நீங்கவும், கல்வி, கலைகளில் சிறந்த இடம் பெறவும் பதஞ்சலியை வணங்குகின்றனர்.  முன்னோருக்கு முறையாக திதி, தர்ப்பணம் செய்யாதோரும், பித்ரு தோஷம் உள்ளோரும் நிவர்த்திக்காக இங்குள்ள சிவனையும், சூரிய சந்திரரையும் வணங்குகின்றனர். வாழ்வில் மங்கலம் உண்டாக, கன்னிப்பெண்களுக்கு நல்ல வரன் அமைய இங்குள்ள அஷ்டபுஜ துர்க்கைக்கு மஞ்சள் புடவை அணிவித்து வேண்டிக் கொள்கின்றனர்.

அமைவிடம்: சிதம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ. மேற்கில் அனந்தீஸ்வரன் திருக்கோயில் அமைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com