தேவியின் திருத்தலங்கள் 39: திருகோலக்கா

இந்தப் பிரபஞ்சத்தின் அடிப்படை நாதமாக ஓம்கார ஓசையே நிறைந்திருக்கிறது. நல்ல அதிர்வுகள் கொண்ட ஓசை உடலின் ஆற்றலை மேம்படுத்துகிறது. நம் சக்தியைத் தூண்டி, தூய்மைப் படுத்தும் அபூர்வ சக்தி படைத்தது.
தேவியின் திருத்தலங்கள் 39: திருகோலக்கா



"தடித்வந்தம் ஸக்த்யா திமிர - பரிபந்த்தி - ஸ்புரணயா 
ஸ்புரந் - நாநாரத்னாபரண - பரிணத்தேந்த்ர - தனுஷம்' 

-செளந்தர்ய லஹரி

செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் என்கிறார் வள்ளுவர்.

ஓசை இல்லையேல் உலகம் இல்லை. செவிகளே ஓசையை உள்வாங்கி, அதன் தன்மையை உணர வைக்கிறது.

இந்தப் பிரபஞ்சத்தின் அடிப்படை நாதமாக ஓம்கார ஓசையே நிறைந்திருக்கிறது. நல்ல அதிர்வுகள் கொண்ட ஓசை உடலின் ஆற்றலை மேம்படுத்துகிறது. நம் சக்தியைத் தூண்டி, தூய்மைப் படுத்தும் அபூர்வ சக்தி படைத்தது.

ஒரு குழந்தையின் மழலை நம்மை மெய் மறக்க வைக்கிறது. அதன் இனிமையில் நம் மன அழுக்குகள் மறைகிறது. அதன் மழலை ஓசை தெய்வத்தின் அருகில் நம்மை அழைத்துச் செல்கிறது.

அந்த மழலையின் ஓசையில் மயங்கித்தான் அம்பிகை ஓடி வந்தாள். மூன்று வயதுச் சிறுவனின் பாடலில் மயங்கி, பொற்றாளத்தில் ஓசையும் வரச் செய்தாள் உலக நாயகி.

"திருகோலக்கா' என்ற தலத்தில் அமர்ந்து பேச்சு வராத குழந்தைகளுக்கு குரல் அளிக்கும் "ஓசை கொடுத்த நாயகி'யாக  கருணையுடன் காட்சி அளிக்கிறாள்.

மகாவிஷ்ணுவைத் திருமணம் செய்து கொள்ள மகாலட்சுமி இங்கு ஈசனை நோக்கித் தவம் செய்தார். அந்தத் தவத்தில் மகிழ்ந்து ஈசன் அவருக்கு மகா விஷ்ணுவை மணமுடித்துத் தந்ததால் "திருகோலக்கா' என்று இத்தலத்திற்குப் பெயர்.

கொன்றை மரங்கள் நிறைந்த தலமாக விளங்கியதால் ஈசனுக்கு "கொன்றைவன நாதர்' என்று பெயர்; அன்னையின் பெயர் "அபிதகுஜாம்பாள்' என்றாலும் "ஓசை கொடுத்த நாயகி' என்றே அறியப்படுகிறாள்.

சீர்காழியில் தன் மூன்று வயதில் அம்பிகையிடம் ஞானப்பால் அருந்திய திருஞான சம்பந்தர், தன் சிவதரிசன யாத்திரையை ஆரம்பித்து, அவர் முதலில் சென்ற தலம் திருகோலக்கா.

சம்பந்தர் இங்கு வந்து ஈசன் சந்நிதி முன் நின்று, தன் பிஞ்சுக் கைகளைத் தட்டித், தாளம் போட்டுக் கொண்டே பதிகம் பாட ஆரம்பித்தார்.

"மடையில் வாளை பாய மாதரார் 

குடையும் பொய்கைக் கோலக் காவுளான்' -என்ற பதிகத்தைப் பாடும்போது, பிஞ்சுக் குழந்தையின் கைகள் தட்டித் தட்டிச் சிவந்து போனது. மனம் உருகிய ஈசன், குழந்தையின் கை வலிக்குமே என்று  சம்பந்தர் முன் நேரில் தோன்றி "நமசிவாய' என்று எழுதப்பட்ட பொற்றாளத்தை அளிக்கிறார். ஆனால், அது ஒலி எழுப்பவில்லை. 

சின்னக் குழந்தை ஏமாந்து போய் நின்றது. அதன் வாடிய முகத்தைப் பார்த்த அன்னை உருகினார். உடனே குழந்தையின் கையில் இருந்த பொற்றாளத்திற்கு ஓசை கொடுத்தார். ஓசையுடன் தாளம் தட்டிப் பாடிய குழந்தையின் மலர்ந்த முகத்தைப் பார்த்து மகிழ்ந்தார் அம்பிகை.

ஆலயத்தில் சம்பந்தர் பொற்றாளத்துடன் நிற்கும் உற்சவர் விக்கிரகம் நேர்த்தியாகவும், அழகாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பேச்சு வராத குழந்தைகளை இங்கு அழைத்து வந்து, "வாக்வாதினி' அர்ச்சனையுடன், இரண்டு லிட்டர் தேனை அம்பிகைக்கு நிவேதனம் செய்து, அந்தத் தேனை வாய் பேச முடியாதவர்களின்  நாவில் தேய்த்து, "மடையில் வாளை பாய' என்ற பதிகத்தைப் பாடி, பிரார்த்தனை செய்து வர, பலன் கிடைக்கிறது என்கிறார்கள்.

அம்பிகையை வழிபட்டு பலன் அடைந்தவர்கள் கோயிலில் உள்ள பதிவேட்டில் தங்கள் ஊர், பெயர் போன்ற விவரங்களைக் குறித்துச் செல்கிறார்கள்.

அம்பிகைக்கு "ஓசை கொடுத்த நாயகி', "தொனிப்ரதாம்பாள்' என்ற பெயர்களும் வழங்கப் படுகிறது. கொன்றை தல விருட்சமாகவும், ஆனந்த தீர்த்தம், சூரிய புஷ்கரணி என்ற இரு தீர்த்தங்களும் உள்ளன. 

ஒருமுறை, தன் ஊமை மகன் பேச வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்ட ஒரு தாய், தன் மகன் பேசியதால் மகிழ்ந்து, தனது காணிக்கையாக பொற்றாளம்  ஒன்றை கோயிலுக்குச் சமர்ப்பித்துள்ளார்.

சீர்காழியில் முலைப்பால் உற்சவம் நிகழும்போது, இங்கு தாளம் வழங்கும் விழா நடை பெறுகிறது.

"தாளமுடையார் கோயில்' என்று அழைக்கப்படும் இக்கோயிலில் கோபுரம் இல்லை. கிழக்கு நோக்கி அமைந்துள்ள கோயிலுக்கு இரண்டு நுழைவாயில்கள். முகப்பு வாயிலுக்கு எதிரே ஆனந்த தீர்த்தம் உள்ளது. இரண்டாவது நுழைவாயில் வழியாக உட்புகுந்தால் பலிபீடம், நந்தி உள்ளது. இவற்றைக் கடந்தால் உள்ளே இறைவன் "தாளபுரீஸ்வரர்' லிங்க வடிவில் எழுந்தருளி இருக்கிறார். இந்திரன் மற்றும் சூரியன் இங்கு இறைவனை "சப்தபுரீஸ்வரராக' வணங்கி, வழிபட்டிருக்கிறார்கள்.

இறைவன் சந்நிதிக்கு இடதுபுறம் தனிச் சந்நிதியில் "ஓசை கொடுத்த நாயகி' அருள்பாலிக்கிறார். 

"மகாவிஷ்ணுவைத் திருமகள்  திருமணம் செய்து கொண்ட தலம்' என்பதால், இங்கு திருமணப் பிரார்த்தனைகள் மிக முக்கியத்துவம் பெறுகின்றன. 

திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தொடர்ந்து ஆறு வாரங்கள் மகாலட்சுமிக்கு அர்ச்சனை செய்தால், தடைப்பட்ட திருமணம் விரைவில் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 

"அன்னையே! நீ உன் கடைக்கண்ணால் எங்களைப் பார்த்தாலே போதும். உன்னுடைய பிரகாசமானது இருளுக்கு எதிரியாக உள்ளது. ருத்ரனால் பிரளய கால நெருப்பைப் போல் எரிக்கப்பட்ட மூவுலகங்களையும் உன் கருணை எனும் மழை பொழிந்து காக்கிறாய்!' என்கிறார் ஸ்ரீஆதிசங்கரர்.

ஒவ்வொரு சொல்லும் பொருள் குறித்தது என்கிறது தமிழ் இலக்கணம். அந்தச் சொல்லுக்கு ஓர் ஓசையைக் கொடுப்பது இறைவி. அவள் அருளால், அவள் புகழைப் பாடுவதே குரல் கொடுத்த அம்பிகைக்கு நாம் செய்ய வேண்டிய பிரதியுபகாரம்.

அமைவிடம்: சீர்காழியிலிருந்து 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருகோலக்கா என்ற அம்பிகையின் திருத்தலம்..! 

(தொடரும்) 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com