பொன்மொழிகள்!
By சுவாமி கமலாத்மானந்தர் | Published On : 03rd September 2021 05:36 PM | Last Updated : 03rd September 2021 05:36 PM | அ+அ அ- |

"உங்களுக்குள் இறைவன் இருக்கிறான்' அதை ஏன் உங்களால் நம்ப முடியவில்லை. தேங்காய்க்குள் தண்ணீர் இருப்பதை நம்புகிறீர்கள். அந்தத் தண்ணீர் அதனுள் எப்படி புகுந்தது? இறைவனும் உங்களுக்குள் அப்படித்தான் புகுந்தான். உங்கள் நெஞ்சத்தில் ஈசன் இருப்பதை நீங்கள் உணர்ந்துவிட்டால் இந்த நிலவுலகில் எவரோடும் எதுவும் பேசத் தோன்றாது.
-சிவ வாக்கியர்
தன்னுடைய ஆயுளை எவனாலும் அதிகரித்துக்கொள்ள முடியாது. ஆகவே இருக்கும் ஆயுட்காலத்தில் தனக்கும், பிறருக்கும் உண்மையான நன்மை ஏற்படும் முறையில் ஒருவன் வாழ வேண்டும்.
-மகான் கபீர்தாசர்
இந்த உலகம் மாற்றத்திற்கு உட்பட்டது. மாறும் இந்த உலகில் பிறக்கும் அனைத்து உயிர்களும் ஏதோ ஒரு நாளில் இறக்கக் கூடியவையே ஆகும். அதுபோல இறக்கும் உயிர்கள் மீண்டும் பிறக்கின்றன.
-பட்டினத்தார் சித்தர்
துன்பக் கண்ணீரில் மூழ்கி இருக்கும் எனக்கு, உனது பேரின்பத்தால் இன்பக் கண்ணீர் வெளிப்படுவது எப்பொழுது? பராபரமே!
-தாயுமானவர், பராபரக்கண்ணி - 39
இறைவனுக்கு நீ கொடுக்கின்ற ஒவ்வொன்றும் பல மடங்காக உன்னிடமே திரும்பி வரும். எனவே மோசமானது, தீயது எதையும் இறைவனிடம் கொடுக்காதே.
-பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்
ஆசை இருப்பவனுக்கு ஆசை நிறைவேறுவது பேராபத்து. ஏனென்றால் ஆசை நிறைவேறியதும் அவன் அகங்காரம் அடைகிறான். அகங்காரத்தால் அவன் செய்யத் தகாத காரியத்தைச் செய்கிறான்; செய்யத் தக்கதைச் செய்வதில்லை. அதனால் பாழாகி கெட்ட கதியை அவன் அடைகிறான்.
-அச்வகோஷன்
ஒவ்வொருவருக்கும் மூன்று குருமார்கள் உண்டு. முதலாவதாக, பிறப்பை அளிக்கும் தந்தை, இரண்டாவதாக கல்வியும் வித்தையும் அளிக்கும் ஆசான். மூன்றாவதாக, இவர்கள் இருவருக்கும் மேலாக ஞானத்தை வழங்கும் குரு. அந்த குருவானவர் நானன்றி வேறில்லை.
-பாகவதத்தில் ஸ்ரீ கிருஷ்ணர்
நீதியில்லாதவன் தரும் உணவை ஒருவன் சாப்பிட்டால் அவன் செய்த பாவங்கள், உணவு உண்பவரையும் சென்றடைகிறது.
-தர்ம சாஸ்திரம்
எங்கும் எப்போதும், துயரத்தைத் தரும் காரியத்தைச் சிறிதளவும் மனம் அறிந்து செய்யக் கூடாது. அதுவே சிறந்த அறமாகும்.
-திருக்குறள், 317.