பூதத்தை அடக்கிய ஆச்சாரியர்!

பூதத்தை அடக்கிய ஆச்சாரியர்!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியிலிருந்து 5 மைல் தூரத்தில் "இளங்காடு' என்னும் ஓர் அழகிய சிற்றூர் உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியிலிருந்து 5 மைல் தூரத்தில் "இளங்காடு' என்னும் ஓர் அழகிய சிற்றூர் உள்ளது. அங்கு பெரும்பகுதி மக்கள் விவசாயம் செய்து வாழ்ந்து வருகின்றனர். இவ்வூரில் பழம் பெருமை வாய்ந்த ஸ்ரீ பூமிநீளாதேவி சமேத ஸ்ரீ வைகுண்டவாசப் பெருமாள் கோயில் உள்ளது.

இக்கோயில் சோழர் காலத்திலும், பல்லவர் காலத்திலும் மிகப் புகழுடன் விளங்கியதாகத் தெரியவருகிறது. சுமார் 3,000 ஆண்டுகளாகத் தொடர்ந்து திருவாராதனம் நடைபெற்று வருவதாக கர்ண பரம்பரைத் தகவல் தெரிவிக்கிறது.

இந்தக் கோயிலில் வீற்றிருக்கும் பெருமாள் ஸ்ரீ பூமிநீளாதேவி சமேதராய் ஏழரை அடி உயரத்தில் மிகவும் அபூர்வமான திருமுகமண்டலத்துடன் சேவை சாதிக்கிறார். திருமழிசை ஆழ்வார் இந்தப் பெருமாளை மங்களாசாசனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திருமழிசை ஆழ்வார் சைவ மதத்தைத் தழுவியிருந்தபோது, இந்தக் கோயிலின் அருகில் அமைந்திருந்த சிவன் கோயிலுக்கு வருகை தருவதுண்டு.

அப்பொழுது, இந்தப் பெருமாளையும் மங்களாசாசனம் செய்துள்ளார்.

ஸ்ரீ அஹோபில மடம், ஏழாவது பட்டம் ஜீயரான ஸ்ரீவண் சடகோப யதீந்திர மகாதேசிகன் சுவாமிகள் இதே ஊரில் பிறந்து, இந்தப் பெருமாளை மங்களாசாசனம் செய்துள்ளார் என்பதும் பெருமைக்குரியதாகும்.

செஞ்சி ராஜகுருவான திருமலைநல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ சேஷாத்ரியாச்சாரியர் என்னும் சுவாமி (இவர் பிறந்தது கி.பி.1315-ஆம் ஆண்டாகும்), செஞ்சியிலிருந்து இந்த ஊருக்கு வந்து, அப்போதிருந்த சமணர்களின் தெருக்களைப் பின்னால் தள்ளி, அக்ரஹாரம் அமைத்து, செஞ்சியிலிருந்த தமது வாரிசுகளை இங்கு குடிவைத்துள்ளார்.

அப்போது இப்பகுதியை ஆண்ட அரசர், ஸ்ரீ வைகுண்டவாசப் பெருமாள் கோயில் தர்மகர்த்தம், முதல் மரியாதை முதலிய பொறுப்புகளை இவரிடம் ஒப்படைத்துள்ளார். அன்றுமுதல் இன்றுவரை அந்த வம்சாவளியினர் தொடர்ந்து நிர்வாகம் செய்து வருகின்றனர்.

ஒருகாலத்தில் இங்கு பெரிய மகான்கள் வாழ்ந்திருந்தனர். எப்போதும் வேத கோஷங்களுடனும், யாக யக்ஞங்கள் செய்தும் வந்திருக்கின்றனர்.

பிரசித்திபெற்ற திருத்தலமாக இருந்திருக்கிறது.

சமீபத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டில் இவ்வூரின் பூர்வீகப் பெயர் "வெங்குணம் கோட்டத்து பொன்னூர் நாட்டு இளங்காடாம் அழகிய சோழநல்லூர்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பூதத்தை அடக்கியவர்: செஞ்சி திருமலைநல்லான் சக்கரவர்த்தி சேஷாத்ரியாச்சாரியர் கிருஷ்ணன்குட்டை என்னுமிடத்தில் "சத்ரயாகம்' செய்துள்ளார். அதற்கு அடையாளமாக அங்கு ஒரு மண்டபம் உள்ளது.

அவர் ஒருமுறை, தனது சிஷ்யர்களைக் காண "யசனூர்' என்னும் கிராமத்திற்குச் சென்றபோது, இரவு ஒரு வீட்டின் திண்ணையில் படுத்திருந்தார். நள்ளிரவில் ஒரு பூதம் வந்து இவரை மிரட்டியதாம். உடனே தமது மூன்றாவது யக்ஞோபவிதத்தைக் கழற்றி அதன்மீது வீசி, தமது மந்திர சக்தியால் அதை அடக்கி, தனக்கு வாகனமாக்கிக் கொண்டாராம்.

தினசரி செஞ்சி ஸ்ரீஅரங்கநாத பெருமாளையும், காஞ்சி ஸ்ரீ வரதராஜப் பெருமாளையும் சேவித்துவிட்டு இளங்காட்டிற்குத் திரும்பி வருவது ஆச்சாரியரின் வழக்கம்.

சிலகாலம் கழித்து அந்த பூதத்தை வீட்டு வேலைசெய்ய வைத்துக் கொண்டதாகவும், அதன் அடையாளமாக அந்த பூதம் நெல் குத்திய உரல் ஒன்று அக்ரஹாரத்தில் ஒரு வீட்டின் பின்புறத்தில் இன்றளவும் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போது, பெருமாள் கோயில் கர்ப்பக் கிரஹம், அர்த்த மண்டபம், மகா மண்டபம் முதலியன முற்றிலுமாக இடிந்துவிட்ட நிலையில், பெருமாளை முன் மண்டபத்தில் தடுப்புச்சுவர் ஏற்படுத்தி, பிரதிஷ்டை செய்துள்ளனர்.

அந்த மண்டபமும் மிகவும் சிதிலமாகி விட்டது. இதை உடனடியாகச் சீர்செய்யாவிட்டால், பெருமாள் விக்கிரகத்திற்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.

வைகுண்டவாசப் பெருமாளை ஒருமுறையாவது பக்தர்கள் சேவித்துவிட்டு வந்தால், தாங்கள் நினைத்திருக்கும் அனைத்து காரியங்களும் சித்தியாகும் என்பது நம்பிக்கை. இதைக் கண்ணுறும் பக்தர்கள் இந்தப் பெருமாள் கோயில் திருப்பணிக்குத் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து, பெருமாளின் அருளைப்பெறலாம்.

தொடர்புக்கு: பிரசாத் பாபு - 9840368588.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com