கோரிக்கையை நிறைவேற்றும் சந்திர காந்த விநாயகர்

நாகர்கோவிலில் இருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ளது தக்கலை. இங்கிருந்து திருவிதாங்கோடு செல்லும் சாலையில் அமைந்துள்ளது கேரளபுரம் மகாதேவர் திருக்கோயில். 
கோரிக்கையை நிறைவேற்றும் சந்திர காந்த விநாயகர்
கோரிக்கையை நிறைவேற்றும் சந்திர காந்த விநாயகர்

நாகர்கோவிலில் இருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ளது தக்கலை. இங்கிருந்து திருவிதாங்கோடு செல்லும் சாலையில் அமைந்துள்ளது கேரளபுரம் மகாதேவர் திருக்கோயில். 

இது 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவன் கோயிலாகும். இக்கோயில் மரத்தடியில்  எழுந்தருளியுள்ள இரண்டரை அடி உயரமுள்ள வெள்ளைப் பிள்ளையாரை அப்பகுதி மக்கள் அதிசய விநாயகராக வழிபட்டு வருகின்றனர். 

தல வரலாறு: சுமார் 300 ஆண்டுகளுக்கு முன், முன்பகை காரணமாக திருவிதாங்கூர் சமஸ்தான மன்னரான ரவி பால மார்த்தாண்ட வர்மாவை கொல்வதற்காக அவரது பங்காளிகள் திட்டமிட்டிருந்தனர். 
இதை அறிந்த மன்னர், கேரளபுரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் வீட்டில் தலைமறைவாக இருந்தார். அப்பெண்ணின் குடும்பத்தினர் 20-க்கும் மேற்பட்டோர் மன்னருக்கு காவல் அரணாக இருந்தனர். 
மன்னரைத் தேடி கேரளபுரம் வந்த பங்காளிகள் அவரைக் கண்டுபிடிக்க முடியாமல் திரும்பிவிட்டனர். 

மிகுந்த விசுவாசத்துடன் தன்னைக் காத்த அப்பெண்ணிற்கும், அவரது குடும்பத்தினருக்கும் மன்னர் பிரதியுபகாரம் செய்ய விரும்பினார். அப்போது, 
அந்தப் பெண்ணின் குடும்பத்தினர், ""மனிதர்களில் ஏற்றத்தாழ்வுகள் ஒழிய,  அனைவரும் வந்து வழிபடும் வண்ணம் அங்குள்ள கோயிலை சீரமைக்க வேண்டும்'' என்று வேண்டினர்.

அதன்படி திருவிதாங்கூர் மன்னர் கேரளபுரம் மகாதேவர் ஆலயத்தைப் புதுப்பித்துக் கட்டினார். ஆலயத்தின் மூலவர் ஸ்ரீமகாதேவர் லிங்க வடிவில் எழுந்தருளினார்.  

ஒருநாள், "மன்னரின் தோஷம் நீங்க, ராமேசுவரத்தில் உள்ள அக்னி தீர்த்தத்தில்  தீர்த்தமாட வேண்டும்' என்று கனவில் வந்த மகாதேவர் கூறினார். ஈசனின் உத்தரவுப்படி, திருவிதாங்கூர் மன்னரும், தந்திரியும் ராமேசுவரம் சென்றார்கள். 

நீரில் மூழ்கிய பொழுது, மன்னரின் காலில் ஏதோ இடறியது. அவர் அந்தப் பொருளைக் கரைக்கு எடுத்து வந்து பார்த்தார். அது கண், மூக்கு, வாய் இல்லாத சுயம்புவாக வந்த தெய்வச்சிலை போன்று காட்சியளித்தது.
உடனே, தந்திரி பிரசன்னம் பார்த்தார். 

""இது சந்திரகாந்தக் கல்! பின்னாளில் இது கணபதி வடிவமாக உருவாகும்! இதை கேரளபுரம் மகாதேவர் ஆலயத்தின் மரத்தடியில் பிரதிஷ்டை செய்யுங்கள்!'' என்று மன்னரிடம் 
கூறினார். 

அதன்படியே ஆலய பிரகாரத்தில், பெரிய அரச மரத்தின் அடியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட கணபதி, ஆறுமாத காலத்தில் முழு உருவமாக வளர்ந்தார். கண், காது, துதிக்கை யாவும் தோன்றி சந்திர காந்த விநாயகராக நிலைபெற்றார். ஊரும் சுபிட்சம் பெற்றது. 

எல்லா சிவாலயங்களிலும் விநாயகரை வணங்கிய பின்னர் மூலஸ்தானம் செல்வார்கள். ஆனால் இக்கோயிலில் மூலவரை வணங்கி விட்டுத்தான் பிள்ளையாரிடம் செல்ல வேண்டும் என்பது ஐதீகம்.

இந்த விநாயகர் உத்தராயண காலத்தில் கருப்பாகவும், தட்சணாயண காலத்தில் வெள்ளை நிறமாகவும் காட்சியளிப்பார் . 

இதனாலேயே இவருக்கு "அற்புத விநாயகர்' என்ற பெயர் ஏற்பட்டது!  விநாயகருக்கு விமானம், மண்டபம் இல்லை. வெயில், மழை இரண்டுமே விநாயகர் சிலை மீது நேரிடையாக  விழுகிறது . 

இந்தப் பிள்ளையாரிடம் "பிள்ளையாரே!' என்று சப்தமாக அழைத்து உங்கள் வேண்டுதலைக் கூறுங்கள். நிச்சயம் உங்கள் கோரிக்கையை நிறைவேற்றி வைப்பார் என்கின்றனர் பக்தர்கள். கோஷ்டத்தில் நாகர், சப்த கன்னிகைகள் அருள்கிறார்கள்.

 இங்கு விநாயகர் சதுர்த்தி விழாவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. 
அமைவிடம்: தக்கலை பேருந்து நிலையம் வந்தடைந்தால், அங்கிருந்து மினி பேருந்துகள் கேரளபுரம் வழியாகச் செல்கின்றன. கேரளபுரம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி 100 அடி தூரம் நடந்தால் மகாதேவர் கோயிலில் வெள்ளைப்பிள்ளையாரை தரிசிக்கலாம்.  

நேரம்: காலை 5 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல்  இரவு 7.30 மணி வரையிலும் கோயில் திறந்திருக்கும். 

தொடர்புக்கு: 9489281815 / 9944389342.


 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com